PUBLISHED ON : அக் 19, 2012

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
சுத்தமான உயிர் திரவம்!
உயிர் திரவம் என்பது தண்ணீர்தானே. அது இல்லாமல் உயிரினமே இல்லைதானே. அது மிகவும் சுத்தமாய் இருத்தல் அவசியம்தானே. சுத்திகரிக்கப்படாத எல்லா தண்ணீரிலும் TDS (Total Dissolved Solvents) எனப்படும் மொத்த கரைந்த கரை பொருள் இருக்கும். தண்ணீரின் தன்மைக்கேற்ப இது அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.
உதாரணத்துக்கு, கடல் நீரில் இந்த அளவு 35 ஆயிரம் பிபிஎம் வரை இருக்கும். அதுவே, நிலத்தடி நீரில் குறைவாகவும், குடி தண்ணீரில் அதை விடக் குறைவாகவும் இருக்கலாம். 35 ஆயிரம் பிபிஎம் உள்ள தண்ணீரை சுத்திகரிக்கும்போது அது 400 முதல் 500 பிபிஎம் வரை குறைக்கப்படும். தண்ணீரைச் சுத்திகரிக்க தர நிர்ணய அளவு கோல் உண்டு. ஐ.எஸ்.ஐ., 0500 என்பதே தண்ணீர் சுத்திகரிப்புக்கான தர அளவு. அதன்படி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாதுகாப்பானது என்று அர்த்தம்.
தாதுச் சத்துகளோ, கனிமங்களோ இதில் இழக்கப்படுவதில்லை. எனவே, உங்கள் பயம் அனாவசியமானது. 35 ஆயிரம் பிபிஎம் டிடிஎஸ்ஸை 400 முதல் 500 வரை குறைப்பது குடிதண்ணீர் உபயோகத்துக்காக. அதையே 10 பிபிஎம் வரை குறைக்க இன்னொரு முறை சுத்திகரிப்பதும் உண்டு. ஆனால், அந்தத் தண்ணீர் குடிநீர் உபயோகத்துக்கு ஏற்றதல்ல. மருந்துகள் தயாரிக்கவே பயன்படும்.
யுவிட்ரீட்டட், ஓஸோனைஸ்டு என என்னென்னவோ சொல்லி விளம்பரப் படுத்துகிறார்களே... எது நல்ல தண்ணீர் என எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த சந்தேகம் உங்களுக்கு எழலாம்.
ஐ.எஸ்.ஐ., முத்திரை உள்ள தண்ணீர் என்றால் 100 சதவீதம் பாதுகாப்பானது என நம்பி வாங்கலாம். தண்ணீரானது அத்தனை தரக்கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப் பட்டதற்கான உத்தரவாதம் அது. கூடவே காலாவதி தேதியையும் கவனித்து வாங்குவது சிறந்தது.
மூளைக்கு மூளை; ஈரலுக்கு ஈரலா...?
எந்த ஒரு பிராணியின் மூளையையோ, ஈரலையோ சாப்பிடுகிற போது, அது நேரடியாக மனிதரின் மூளைக்கோ, ஈரலுக்கோ போய் உட்கார்ந்து கொண்டு அதைப் பலப்படுத்துவது கிடையாது. மாமிசத்தின் கொழுப்பு நிறைந்த பகுதிதான் மூளை. அதன் செல்களும், நியூரான்களும் துடிப்பாக வேலை செய்கிற வரைதான் அதற்கு மவுசே.
உயிரே பிரிந்த பிறகு, உடலின் கம்ப்யூட்டர் மாதிரியான அந்த மூளையும் வேலை செய்வதில்லை.
அதைப் பொரித்தோ, வறுத்தோ, வேக வைத்தோ உண்பதன் மூலம் உண்பவரின் உடலுக்குள் போய் மீண்டும் தன் வேலையை ஆரம்பிக்கப் போவதில்லை. ஈரலும் அப்படித்தான். அசைவ உணவு சாப்பிடுகிறபோது, அவற்றில் உள்ள சத்துக்கள், ஒட்டுமொத்த உடலுக்கும்தான் போகும்.
அசைவ உணவிலிருந்து பெறப்படுகிற புரதச்சத்தானது, உடலால் எளிதில் கிரகிக்கப் படுகிறது. கிடைக்கிற புரதத்தின் அளவும் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உடல்நலத்துக்கு உத்தரவாதம். மற்றபடி சைவமாகட்டும், அசைவமாகட்டும், குறிப்பிட்ட ஒரு உணவு, குறிப்பிட்ட ஒரு உடல் உறுப்புக்கு நல்லது செய்யும் என்று நினைப்பது தவறு. கேரட் மட்டுமே அல்லது முட்டை மட்டுமே சாப்பிடுவது ஆரோக்கியத்தைத் தந்து விடாது. சரிவிகித உணவுதான் சரியான உணவு.
ஆரம்பம் சிறு புள்ளிதான் அய்யா!
ஒரு விதையை ஊன்றும் போது ஆரம்பத்தில்தான் அதற்கு உரமும், நீரும், பாதுகாப்பும் நாம் அளிக்க வேண்டியிருக்கும். அது வளர ஆரம்பித்த பின்னர் அதற்கு இது எதுவும் தேவைப்படாது. அது தானே நிமிர்ந்து நிற்கும். எந்தத் தொழில் ஆயினும், எந்தத் துறை ஆனாலும் ஆரம்பிக்கும்போது தான் அதற்கு உங்களது முழு பராமரிப்பும், பாதுகாப்பும் தேவைப்படும். ஓரளவு வளர்ந்த பின்னர் நீங்கள் பெரும்பாடுபட்டு உழைக்க வேண்டியதில்லை. வெறுமனே மேற்பார்வை செய்தாலே போதும்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதிகளில் கடல்போல் புரண்டு வரும் காவிரி யாற்றின் உற்பத்தி ஸ்தானத்தைப் பார்த்தால் ஒரு சிறு சதுர (2து2) கேணி போல் இருக்கும். குடகு மலையில் தலைக் காவிரி பகுதியில் இந்த உள்ளங்கை அகல ஊற்றில் இருந்து புறப்படும் நதியா அவ்வளவு பிரம்மாண்டமாக ஓடி வருகிறது என்று மலைக்கத் தோன்றும்.
கங்கையின் உற்பத்தி ஸ்தானமான கங்கோத்திரி, யமுனை உற்பத்தியாகும் யமுனோத்திரி எல்லாமே இப்படிப்பட்ட சின்னஞ்சிறு துவக்கங்களிலிருந்து ஆரம்பிப்பவைதான். கல்கத்தாவில் ஒரு வீட்டு மாடியில் மேஜையை சுற்றி அமர்ந்து 5 பேர் தொடங்கிய ஸ்தாபனம்தான் இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் மாபெரும் இயக்கம்.
எல்லா பிரம்மாண்டங்களும் நதி போல் சிறிதாகத் துவங்குபவையே. ஒரு பொருள் வளர்கிறது என்றால் அது மற்றவற்றுக்கும் இடம் அளிக்கக் கூடியதாக இருக்கும்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'பாசிப்பருப்பு ஜாமூன்' செய்முறை நேரம்.
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு -1/4 கிலோ, மைதாமாவு - 25 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலத்தூள்-1/4 டீஸ்பூன், டால்டா - 1/4 லிட்டர், உப்பு-சிட்டிகையளவு, கேசரிப்பவுடர் -1/4 ஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து, சூடு ஆறியதும் அடுப்பில் சிறிதளவு தண்ணீர் வைத்து முக்கால் பதமாக வேக வைத்து கொள்ள வேண்டும். பிறகு நீரை வடித்து விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, ஏலப்பொடி, மைதாமாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட வேண்டும். சர்க்கரை இளம் பதமாக வந்ததும் பிசைந்த மாவை நெல்லிக்காயளவு ஜாமூனாக உருட்டி வைக்க வேண்டும்.
வாணலியில் டால்டாவை ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஜாமூன்களை போட்டு பொன்னிறமானதும் எடுத்து பாகில் போட வேண்டும். எல்லா ஜாமூன்களையும் பொரித்து பாகில் போட்டு சிறது நேரம் ஊறியதும் எடுத்து சாப்பிட வேண்டும். எளிமையாக, எளிதாக செய்யக் கூடியது இந்த ஜாமூன்.
பசங்க முழுங்கிகிட்டே இருப்பாங்க!
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
