PUBLISHED ON : அக் 14, 2023

சிவகங்கை, முஸ்லீம் புலவர் நடுநிலைப் பள்ளியில், 1985ல், ஆசிரியராக பணியாற்றிய போது நடந்த சம்பவம்...
அன்று ஒரு மாணவன், வகுப்பை கவனிக்காமல், மற்றொருவனிடம் வம்பு இழுத்து பேசிக் கொண்டிருந்தான். இதை கவனித்துக் கொண்டிருந்தேன். உடனே கண்டித்தால் மற்றவர்களுக்கு பாடத்தில் கவனம் பிசகும் என்பதால் தவிர்த்தேன்.
வகுப்பு முடிந்து எல்லாரையும் அனுப்பிய பின், அந்த மாணவனை தனியாக அழைத்து புத்திமதி கூறினேன். தண்டிக்கும் விதமாக தென்னை மட்டையால், முழங்காலுக்கு கீழ் பகுதியில் அடித்தேன்.
அடிபட்ட இடத்தில், முருங்கை காய் போல் வீங்கி விட்டது. வீடு சென்றதும் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளான். அவன் தந்தை நிதானம் இழந்த நிலையில் ஓடி வந்து விபரம் கேட்டார். சம்பவத்தை விளக்கமாக கூறி, 'ஒரே ஒரு அடிதான் கொடுத்தேன்...' என்றேன்.
கலங்கிய நிலையில், 'ஒரு அடி என்று சுலபமாக சொல்கிறீர்களே ஐயா... ஒரே வெட்டில் தலை துண்டாக போய் விடும் என்பது உங்களுக்கு தெரியுமா...' என்றார். உடன் இருந்த ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.
மறுநாள் அதிகாலை வியாபாரத்துக்கு செல்லும் வழியில் என் வீட்டை தட்டினார் அந்த தந்தை. மிகவும் பணிவாக, 'ஐயா... சற்று குடி போதையில் இருந்ததால், நேற்று சண்டை போட்டு விட்டேன். மன்னித்து விடுங்கள்...' என்றார். உருக்கமாக இருந்தது.
அவரது மகன் மீது தனிக்கவனம் செலுத்தி கற்பித்தேன். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான்.
தற்போது என் வயது, 82; இன்று நினைத்தாலும், அந்த நிகழ்வு நெகிழ்ச்சி தருகிறது.
- கே.செல்வராஜ், சிவகங்கை.
தொடர்புக்கு: 94860 19239
