PUBLISHED ON : அக் 14, 2023

கோவை மாவட்டம், குறிச்சி செங்கோட்டையா உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 9ம் வகுப்பு படித்த போது, புகை பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அன்று ஞாயிற்றுக்கிழமை; பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, ஏதோ பணியாக, பள்ளிக்கு வந்திருந்தார். இதை யாரும் கவனிக்கவில்லை.
விளையாட்டின் இடைவேளையில் மறைவாக நின்று புகை பிடித்தேன். அப்போது, காபி வாங்க சென்ற பள்ளி உதவியாளர் இதை பார்த்து, தலைமை ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். இந்த விபரம் எனக்கு தெரியாது.
ஒரு வாரம் கடந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, பள்ளி மைதானத்துக்கு அழைத்து சென்ற என் தந்தை, 'என் பணத்தில், படித்து, ஒரு வேலை தேடி கொள். அதில் சம்பாதித்து, எது வேண்டுமானாலும் செய். நான் எதுவும் கேட்க மாட்டேன். என் பணத்தில் புகைக்காதே, புரிந்ததா...' என, பழங்கள் தந்து அறிவுரைத்தார். அன்றே புகைக்கும் பழக்கத்தை கைவிட்டேன்.
எனக்கு, 63 வயதாகிறது. அந்த நிகழ்வை எண்ணி இன்றும் வியக்கிறேன். சக ஆசிரியர்களுக்கு கூட தெரிவிக்காமல், என்னை திருத்த காதும் காதும் வைத்தது போல் கச்சிதமாக நடவடிவக்கை எடுத்த அந்த தலைமை ஆசிரியரை போற்றுகிறேன்.
- கே.சுரேஷ், சென்னை.
