PUBLISHED ON : அக் 14, 2023

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 10ம் வகுப்பு படித்த போது, மாணவர் தலைவனாக பெறுப்பு வகித்தேன்.
மாணவர்களிடம் நன்மதிப்பும், அன்பும் பெற்ற தமிழ் ஆசிரியர் தெய்வநாயகம், விழாக்கள் நடத்துவது தொடர்பாக அடிக்கடி அழைத்து கட்டளைகள் பிறப்பிப்பார். அவற்றை உற்சாகமாக நிறைவேற்றுவேன்.
கிராமத்திலிருந்து, 7 கி.மீ., துாரம் மிதிவண்டியில் பள்ளிக்கு வருவேன். என் ஊரில் வசித்த முதியோர் கேட்கும் பொருட்களை, நகரில் இருந்து தவறாமல் வாங்கி சென்று கொடுப்பேன். அன்று மூதாட்டி கேட்டிருந்த கல் உப்பு வாங்கி, பையை மிதிவண்டியின் முன் பகுதியில் மாட்டியிருந்தேன்.
எதிரில் தமிழ் ஆசிரியரை கண்டதும் சங்கடத்துடன் நெளிந்தேன். என் நிலை கண்டு, 'எதிலும் உண்மை, உற்சாக செயல்பாடுதான் முக்கியம்... யாரையும் இழிவாக நினைக்காத பண்பு இருந்தால் போதும். பிறருக்கு உதவும் நற்குணம் உன்னை உயர்த்தும்...' என தட்டி கொடுத்தார். அது, மனதில் பதிந்தது.
நன்றாக படித்து பொறியியலில் பட்டம் பெற்று அரசு பணியில் சேர்ந்தேன். பின், சொந்தமாக தொழில் செய்தேன். தீவிர அரசியலில் ஈடுபட்டு, சின்னசேலம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, 1991 முதல் 1996 வரை பொறுப்பு வகித்து சேவைகள் செய்தேன்.
எனக்கு தற்போது வயது, 78; உற்சாகப்படுத்திய அந்த ஆசிரியர் மறைந்த போதும், அன்று சொன்ன வார்த்தைகள் என் மனதில் உயிருடன் இருக்கிறது. தவறாது பின்பற்றி அவரது நினைவை போற்றுகிறேன்
- ஆர்.பி.பரமசிவம், கள்ளக்குறிச்சி.
தொடர்புக்கு: 94434 45367
