தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய விழிகள்! (14)

மாய விழிகள்! (14)

மாய விழிகள்! (14)


PUBLISHED ON : அக் 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தோப்பு கிணற்றில் நீர் அருந்தியதால் வினோத சக்தி பெற்றிருந்த சிறுமியர் தியா, அனு கிராமத்து அருகே காட்டில் நின்ற மர்ம வேன் பற்றி துப்பு துலக்கினர். அவர்களை துரத்தி வந்தவர்களிடம் இருந்து தப்பி ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இனி -

''அவர்கள் சுத்தி தேடிட்டு திரும்பவும், வேன் இருக்கிற இடத்திற்கு வருவதற்கு எப்படியும் இன்னும் அரை மணி நேரமாகும். நாம் அதற்குள் உங்க பூசாரியை பார்த்து விடலாம் அனு...''

''சரி...''

இருவரும் அனுவின் வீட்டிற்கு வந்தனர். மூங்கில் தட்டிகளால் வேலி அடைக்கப்பட்ட ஒரு ஓட்டு வீடாக இருந்தது. அதன் பின்புறம் கூரை வேய்ந்த சிறிய அறையும் இருந்தது.

''எங்க வீடு இப்படி சின்னதாய் தான் இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ அக்கா...'' என்று மீண்டும் சொன்னாள் அனு.

இருவரும் பையை அங்கே வைத்து குறிஞ்சி அம்மா கோவிலை நோக்கி சென்றனர்.

மண்சுவருடன் கூடிய கூரை வேயப்பட்ட கட்டடமாக, அந்த தேவதை கோவில் இருந்தது.

மண்ணால் அமைக்கப்பட்டு, மூலிகை சாறு பூசி தயார் செய்யப்பட்டிருந்த குறிஞ்சி அம்மாவின் பெரிய திரு உருவ சிலை கோவிலுக்குள் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த காட்டு பகுதியில் கிடைத்த பூக்களை வைத்து, அந்த சிலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வெளியில் சிறிய கற்சிலைகளும் இருந்தன.

கோவிலை நெருங்கியதும், மிகுந்த பக்தியுடன் கன்னத்தில் போட்டு, பவ்யமாய் கை கூப்பி வணங்கினாள் அனு.

''கோவிலுக்கு பின்னால, பெரிய புன்னை மரம் இருக்கு. அங்கே தான் பூசாரி இருப்பார். வா போய் பார்க்கலாம்...'' என்று தியாவை அழைத்து சென்றாள் அனு.

அங்கு நின்றிருந்த காரை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

''அக்கா... அந்த வண்டி எண்ணை பாரு. அது, நம்ம பள்ளி முதலாளியோட கார் தானே...''

''ஆமா அனு... அவருக்கு இங்கு என்ன வேலை...''

''எனக்கும் அதே சந்தேகம் தான்...''

''ஏதோ தவறு நடக்க போகிறது. நாம், இங்கு நடப்பதை கவனித்தாக வேண்டும்...''

''அக்கா... இப்போ என்ன செய்யலாம்...''

''சத்தமின்றி, அருகில் சென்று பார்க்கலாம்...''

மெல்ல நடந்து, கோவிலுக்கு பக்கவாட்டில் வந்தனர் இருவரும்.

கோவில் பின்புறம் பூசாரியும், பள்ளி அதிபர் இலக்கியனும் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

பவ்யமாக நின்ற பூசாரியிடம், ''இன்னும் சிறிது நேரத்தில், குழந்தைகள் வந்து விடுவர். திட்டம் போட்டபடி, இரவில் வேலையை முடித்து விட வேண்டும்...'' என்றார் பள்ளி அதிபர்.

''ஐயா... வளர்பிறை கண்ணுக்கு தெரிந்ததும், ஆரம்பித்து விடலாம். மற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன...''

''பூசாரி... விஷயம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது. பள்ளி குழந்தைகள், ஆசிரியர்களை சமாளிப்பது என் பொறுப்பு...''

''சரி ஐயா... நீங்க எப்படி சொல்கிறீர்களோ அப்படியே செய்துடுறேன்...''

அவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர் தியாவும், அனுவும்.

''அனு... நாம சந்தேகப்பட்டது சரி தான். ஏதோ தவறான காரியம் தான் நடக்கிறது...''

''அக்கா... பூசாரி ஐயாவும், இதில் சம்பந்தப்பட்டிருப்பதை பார்த்தால், அதிர்ச்சியாக உள்ளது...''

''உங்க பூசாரி ஐயாவை நம்பி இனி, பிரயோஜனம் இல்லை. நாம தான், இந்த பிரச்னையை கையாள வேண்டும்...''

''அக்கா... நீ என்ன சொல்றீயோ, அதை செய்து விடலாம். எப்படியாவது, நம்ம தோழியரை காப்பாற்றணும்...''

''அனு... முதலில் வேன் இருக்கும் இடத்திற்கு செல்வோம்...''

வேகமாக வேன் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தாள் அனு.

வேனில் அமர்ந்திருந்தான் ஓட்டுநர்.

''நம்மை துரத்திய இருவரும், இன்னும் வேனுக்கு வரவில்லை என நினைக்கிறேன்...''

''ஆமா அக்கா... வந்திருந்தால் வேனில் பயணித்திருப்பர்...''

''வேன், இங்கிருந்து புறப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...''

''அக்கா... நம்மை துரத்திய இருவரும் வராமல், ஓட்டுநர் வேனை எடுக்கமாட்டான் என நினைக்கிறேன்...''

தலையசைத்து ஆமோதித்தாள் தியா.

''அனு... தோழியரை கடத்தி வர காரணம் என்ன... ஏதோ ராத்திரி, பிறை என்றெல்லாம் சொல்வதைப் பார்த்தால், எனக்கு சந்தேகம் வருகிறது...''

''அக்கா... நீ என்ன நினைக்குற...''

''உங்கள் கோவிலில் பூஜை, பலியெல்லாம் உண்டா...''

''ஆமாம்... பவுர்ணமி, அமாவாசை, வளர்பிறை முக்கிய நாட்களில் எல்லாம் பூஜை செய்வர். மிருகங்களை பலி கொடுக்கும் பழக்கமும் உண்டு...''

''நரபலி...''

''சேச்சே அதெல்லாம் கிடையாது. கோழி, ஆடு, பன்றியை மட்டும் தான் பலி கொடுப்பர்...''

''அப்படியென்றால், நம்ம தோழியரை கடத்தி என்ன செய்ய காத்திருக்கின்றனர்...''

''அது தான் புரியவில்லை. ஆனால், நாம் முன் நினைத்தது போல உடல் உறுப்பு எடுப்பது, வெளிமாநிலத்துக்கு கடத்துவது என்பது போல இல்லை. இது, ஏதோ பூஜை சமாச்சாரம் போல தெரியுது...''

பேசும் போதே சுதாரித்தாள் அனு.

''அக்கா... நம்மை துரத்தியோர், வேனை நோக்கி, பக்கவாட்டு ஒத்தையடி பாதை வழியாக, மண் சாலைக்கு வருகின்றனர்...''

''அனு... வேகமாக, மீண்டும் வேனை மறைய வைத்து விடலாம்...''

''அக்கா... சீக்கிரம். பக்கத்தில் வந்து விட்டனர்...''

அவசரப்படுத்தினாள் அனு.

வேனை உற்றுப் பார்க்க ஆரம்பித்தாள் தியா. ஆனால், கண் முன், புகை மூட்டம் எதுவும் தெரியவில்லை.

''அக்கா... வேன் மறையலையே. அவர்கள் நெருங்கி வருகின்றனர்; சீக்கிரம் மறைய வை...''

மீண்டும் வேனை உற்றுப் பார்த்தாள். அது மறையவில்லை; பதற்றமானாள் தியா.

அவசரத்தில் செருப்புகளை கழற்றாமல் இருப்பது நினைவு வந்தது. வேகமாக, செருப்புகளை கழற்றி, தயார் ஆன போது, மண் சாலையை நெருங்கி வந்தனர் துரத்தி வந்த இருவரும்.

''அக்கா... சற்று பொறுமையாக இரு. நம்மை துரத்தியவர்களின் கவனத்தை திசை திருப்பி, மீண்டும் காட்டுக்குள் சுற்ற விடுகிறேன்...''

தியாவின் பதிலை எதிர்பார்க்காமல், 'தட... தட...'வென ஓடினாள் அனு.

அனுவின் செயல், தியாவுக்கு அதிர்ச்சியை தந்தது மட்டுமின்றி அவர்களிடம், அவள் சிக்கி கொள்ள கூடாது என்ற பதற்றமும் தொற்றியது.

அனு ஓடும் சத்தம் கேட்டு, திரும்பி பார்த்தான் செல்வா.

''வீரா... அது, அந்த இரண்டு பொண்ணுகளில் ஒன்று. அவளை பிடிடா...''

அனுவை துரத்த ஆரம்பித்தனர் செல்வாவும், வீராவும்.



- தொடரும்...

- ஜே.டி.ஆர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us