தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு - கோட்டைகள்!

அதிமேதாவி அங்குராசு - கோட்டைகள்!

அதிமேதாவி அங்குராசு - கோட்டைகள்!


PUBLISHED ON : அக் 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின், பல பகுதிகளில் ஆட்சி புரிந்த மன்னர்களும், ஆங்கிலேயர்களும் பாதுகாப்புக்கு கோட்டைகள் கட்டியிருந்தனர். அவற்றில், மத்திய பிரதேசத்தில், 336, மகாராஷ்டிராவில், 656, ராஜஸ்தானில், 250 கோட்டைகள் சிதையாமல் இருக்கின்றன.

தமிழகத்தில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, திருச்சி மலைக் கோட்டை, திண்டுக்கல் திப்பு சுல்தான் கோட்டை, செஞ்சிக் கோட்டை, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, வேலுார் கோட்டை போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

வரலாறை தாங்கி நிற்கும் கோட்டைகள் பற்றி பார்ப்போம்...



செயின்ட் ஜார்ஜ் கோட்டை:
சென்னை கடற்கரையில், கி.பி., 1639ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டது. இதற்குள் உள்ளது செயின்ட் மேரிஸ் ஆலயம். தற்போது, இங்கு தான், தமிழக அரசின் தலைமைச் செயலகமும், அலுவலகங்களும் இயங்குகின்றன.



மலைக்கோட்டை
: கி.பி., 16ம் நுாற்றாண்டில் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் திருச்சியில் கட்டப்பட்டது. நுாற்றுக்கணக்கான படிகளை கடந்து, மலைக்கோட்டைக்கு செல்ல வேண்டும். அங்கு உயரமான குன்றை குடைந்து, தாயுமானவர் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. குன்றின் உச்சியில் பிள்ளையார் கோவில் இருக்கிறது. சோழர் ஆட்சியின் சிறப்பை காணலாம்.

திருமயம் ஊமையன் கோட்டை: புதுக்கோட்டை நகரில் இருந்து, 21 கி.மீ., துாரத்தில், காரைக்குடி செல்லும் சாலையில், இக்கோட்டை இருக்கிறது. வரலாற்றுப் புகழ் மிக்கது. வட்ட வடிவமாக அமைந்துள்ளது. கட்டடக்கலைக்கு இலக்கணமாக திகழ்கிறது.

ரஞ்சன் கோட்டை: பெரம்பலுார் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலுாரிலிருந்து, 18 கி.மீ., துாரத்தில் உள்ளது. இது, 44 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்படுகிறது. இதன் கம்பீரமான தோற்றம், காண்போரை வியக்க வைக்கும்.

டேனிஷ் கோட்டை: மயிலாடுதுறை - பொறையாறு வழியில், நாகப்பட்டினம் சாலையில் இக்கோட்டை உள்ளது.

வியாபாரம் செய்ய தமிழகம் வந்த டேனிஷ் வர்த்தக கம்பெனியை சேர்ந்த ஒவ்ஷெட்டி என்பவர், தஞ்சாவூர் ரகுநாத நாயக்க மன்னர் அனுமதி பெற்று, 17ம் நுாற்றாண்டில் கட்டினார். தமிழக அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை புராதன சின்னமாக இதை பராமரிக்கிறது.

வேலுார் கோட்டை: இந்திய வரலாற்றில், தனி முத்திரை பதித்தது வேலுார் கோட்டை. மிகவும் அழகானது.

விஜயநகர மன்னரால், கி.பி., 1566ம் ஆண்டில் கட்டப்பட்டது. சுற்றிலும் ஆழமான அகழியுடன், பலமான மதில் சுவர்களும் கம்பீரமாக கவரும் வண்ணம் உள்ளது.



திப்பு சுல்தான் கோட்டை
: மதுரையை ஆண்ட முத்துக்கிருஷ்ண நாயக்கரால், 1065ம் ஆண்டில் திண்டுக்கல்லில் கட்டப்பட்டது.

மலை மீது உள்ளது. கம்பீரமான இதன் கிழக்கு பகுதியில், அழகான கோவில் உள்ளது. ராணுவ வீரர்களின் பாசறையும், பீரங்கிகளும் இதில் அமைந்துள்ளன. மலை உச்சியில் கோட்டையில் நின்றால், திண்டுக்கல் நகரை முழுமையாக காணலாம்.

செஞ்சிக் கோட்டை: வரலாற்றுப் புகழ்பெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் உள்ளது. ஆனந்தக்கோன் என்ற மன்னன், கி.பி., 12ம் நுாற்றாண்டில் கட்டினான். ராயகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி என்ற மூன்று மலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது.

கீழா நிலைக்கோட்டை: அறந்தாங்கியில் உள்ளது. சில இடங்களில் சிதிலமடைந்து இருப்பினும், சுற்றிலும் மரங்களுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

தமிழகத்தில், பல கோட்டைகள் இடிந்தும், சிதிலமடைந்தும் உள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us