PUBLISHED ON : மே 30, 2014

மேட்டுப்பாளையம் என்ற கிராமத்தில் பன்னீர்செல்வம் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் கட்டட வேலை, கல் உடைக்கும் வேலை என்றபடி கிடைத்த வேலை எதுவானாலும் சோர்வின்றிச் செய்து வருபவன். அவன் எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டான். நிலையான ஒரு வேலை என்பது அவனுக்குக் கிடைத்தபாடில்லை.
அவனது தாய், தந்தை படிக்காதவர்கள். அந்நிலையிலும் பன்னீர்செல்வத்தை எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டனர். சொத்து பத்து பெரிய அளவுக்கு இல்லை. ஏதோ பத்தும் பத்தாததுமாக கல்லும், முள்ளும் நிறைந்த காடு ஒரு ஏக்கர் தேறும். அதை விட்டால் வேறு சொத்து ஏதுமில்லை. கூலி ஜீவனம்தான். பன்னீர்செல்வம் வருமானம் ஓரளவுக்கு வயிற்றுக்குச் சோறிட்டு வந்தது.
பன்னீர்செல்வம் தினசரி இரண்டு, மூன்று மைல்கள் நடந்து வேலைக்குச் சென்று வந்தான். வேலையின் தன்மையும், நடந்து வந்த களைப்பும், வீட்டுக்கு வந்தவுடன் படுக்கையில் கிடத்தி, அயர்ந்து தூங்கி விடுவான். இடையில் எழுப்பிவிட்டால் தான் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வரும். அந்த அளவுக்கு அசதி. இப்படிப்பட்ட நிலைமைக்கு ஒரு விடிவு காலம் வராதா என்று அவன் ஏங்காத நாளில்லை.
இவ்விதமாக அவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தபோது, நகரத்திலிருந்து ஒருநாள்...
பேண்ட், சட்டை, கழுத்தில் டை கட்டிய வண்ணம் டிப்டாப்பான, மிடுக்கான தோற்றத்துடன் கூடிய இரண்டு நபர்கள் அந்தக் கிராமத்துக்கு வந்தனர். ஊரில் இருந்த பெரிய மனிதரின் வீட்டுக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் அந்தப் பெரிய மனிதரும், புதிய நபர்கள் இருவரும் குறிப்பிட்ட சில வீடுகளுக்குச் சென்று, ஏதோ பேசிவிட்டுத் திரும்பினர். கடைசியாக பன்னீர்செல்வத்தின் தந்தையிடம் வந்தனர். அவர்களை அன்புடன் மரியாதை செலுத்தி வரவேற்றார் பன்னீர் செல்வத்தின் தந்தை முனுசாமி.
ஊர் பெரிய மனிதர் கந்தசாமி, பன்னீர் செல்வத்தின் தந்தை முனுசாமியைப் பார்த்து, ''முனுசாமி, இவங்க யார் தெரியுமா? நம்ம ஊர்ல கட்டப்போற சைக்கிள் கம்பெனி முதலாளியோட பிரதிநிதிகள். நம்ம ஊர்ல சைக்கிள் கம்பெனி கட்ட நிலம் பார்க்க வந்திருக்காங்க. நம்மைப் போல உள்ளவர்கள் ஒண்ணு, அரை அப்படி இப்படின்னு நிலம் கொடுத்தா, கம்பெனி சீக்கிரம் கட்டுவாங்க. நம்ம கொடுக்கற நிலத்துக்குப் பணம் கொடுப்பாங்க. நம்ம வீட்டுக்கு ஒரு பிள்ளைக்கு வேலையும் கொடுப்பாங்க,'' என்று புதிய தொழிற்சாலை பற்றிய திட்டம் முழுவதையும் விளக்கிக் கூறினார்.
விளையாம கெடக்கிற நிலத்தை வித்திட்டு பையனுக்குக் கம்பெனியில் வேலை வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார் முனுசாமி. ஊர் பெரிய மனிதர் கந்தசாமியும் நிலம் கொடுக்கத் தயார் என்ற விவரம் முனுசாமிக்கு, இன்னும் தைரியத்தைக் கொடுத்தது.
முனுசாமிக்குத் திருப்தி ஏற்படும் அளவுக்கு வந்திருந்த புதிய நபர்களும் பக்குவமாகக் கூறினர்.
ஏற்கெனவே டைப் செய்து வைக்கப்பட்ட பத்திரத்தில், முனுசாமியிடம் விவரம் கேட்டு வேண்டிய விவரத்தை எழுதிக் கொண்டான்.
முனுசாமியிடமும், அவனது மனைவியிடமும், பன்னீர்செல்வத்திடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். மேலும், ஊர்ப் பெரியவர் கந்தசாமி சாட்சிக் கையெழுத்துப் போட்டார்.
கல்லும், முள்ளுமாகக் கிடந்த முனுசாமியின் நிலம் இப்போது இருபதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு விட்டது. முனுசாமிக்கு நிலபுலம் ஏதும் இல்லை. கையில் உள்ள இருபதாயிரம் தான் சொத்து. அவன் இருந்த நிலைக்கு அதுவே மகிழ்ச்சி தரக்கூடிய பெரிய விஷயமாகும்.
ஓரிரு ஆண்டுகள் சென்றன.
மேட்டுப்பாளையம் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்தது. மண்சாலைகள், தார்சாலைகள் ஆகிவிட்டன. இரவு எட்டு மணிக்கு மேல் நடமாட முடியாத சாலைகளில் இரவு, பகலும் மனிதர்களின் நடமாட்டம். அங்கே ஒரு பெரிய தொழிற்சாலை. சைக்கிள் தயாரிக்கிற தொழிற்சாலை. அதனை நம்பி சிறு சிறு தொழில்கள், கடைகள்...
பன்னீர்செல்வம் முன்புபோல் கட்டட வேலைக்குச் செல்வதில்லை. தொழிற்சாலை கட்ட நிலம் கொடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு வேலை என்ற திட்டத்தின் கீழ் பன்னீர் செல்வத்துக்கு வேலை கிடைத்து விட்டது.
மகன் நல்ல முறையில் சம்பாதிக்கிறான் என்ற நிலையைக் கண்ட ஓரிரு ஆண்டுகளிலேயே பன்னீர்செல்வத்தின் தாயும், தந்தையும் அடுத்தடுத்துக் கண்ணை மூடிக் கொண்டனர். பன்னீர் செல்வத்துக்கு ஒரு திருமணம் செய்து வைத்து, அதனைப் பார்க்க அவர்கள் கொடுத்து வைக்கவில்லை.
சைக்கிள் தொழிற்சாலையிலிருந்து பன்னீர்செல்வம் வீடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் இருந்தது. அந்தத் தொலைவை நடந்து சென்று கடக்க முடியவில்லை பன்னீர் செல்வத்தால். இப்போதெல்லாம் மாதம் முதல் வாரமானால், பன்னீர் செல்வத்தின் கையில் காசுதேவன் புரள்வான். நடப்பது அவனுக்குப் பெரும் சுமையாகப் பட்டது.
வேலைக்கும், வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் ஒரு சைக்கிள் வாங்கிக் கொண்டான்.
தான் வாங்கிய புது சைக்கிளின் பின் புறத்தில், தன் புது மனைவியை உட்கார வைத்து கடைவீதிக்கும், காய்கறி மார்க்கெட்டுக்கும் கூட்டிச் செல்வான் பன்னீர்செல்வம்.
வேலை முடிந்து வீடு திரும்பும் போது தன் மனைவிக்கு பூ வாங்கி கொடுப்பது அவனது வழக்கம். நாட்கள் செல்லச் செல்ல பன்னீர் செல்வத்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.
தனக்கு என்றும், எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிற சைக்கிளைப் பற்றி அவன் அக்கறை கொள்ளவில்லை.
ஒருநாள், மாலை ஆறு மணி, போதை ஏறியவனாய் பன்னீர்செல்வம் சைக்கிளில் சென்று ஒரு மாட்டு வண்டியின் மீது மோதி விட்டான். யாருக்கும் ஆபத்தோ, அடியோ இல்லை. ஆனால், சைக்கிளுக்கு சிறு சேதம் ஏற்பட்டு விட்டது.
''ச்சே! இந்த சனியனை நான் வாங்கிய நேரம், இப்படி ஆகிவிட்டது என்று அந்த சம்பவத்துக்கு சைக்கிளின் மீது பழி போட்டான் பன்னீர்செல்வம்.
தொழிற்சாலையில் புதிய சம்பள ஒப்பந்தம் போடப்பட்டது. பன்னீர்செல்வத்திற்கு முன்பை விட சம்பளம் அதிகம் கிடைத்தது. இதர சலுகைகள் பல காசு வடிவில் கையில் கிடைத்தன.
தன்னுடைய கையில் கிடைத்த காசைக் கொண்டு சைக்கிளைப் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றவில்லை. மாறாக, தனது மனைவிக்கு கழுத்துக்குச் செயினும், மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடும் வாங்கிக் கொடுத்து அவளை அழகுப்படுத்தினான்.
பழசாகிப் போன தனது வீட்டைப் புதுப்பித்தான். வீட்டைச் சுற்றி புதிதாக சுற்றுச் சுவர் எழுப்பினான். தனக்கும், தன் மனைவிக்கும் தேவைப்பட்ட அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வதிலேயே அவன் மனம் சென்றது.
தொழிலுக்கும், வேறு பல காரியங்களுக்கும் பயன்பட்டு வருகிற சைக்கிளைப் பற்றி அவன் கவலை கொள்வது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது.
ஒருநாள் நல்ல மழை. இரவு நேரம், மழையில் நனைந்து கொண்டே சைக்கிளில் வீடு வந்து சேர்ந்தான். சைக்கிளை வீட்டின் ஒரு மூலையில் கிடத்தி விட்டு, வீட்டுக்குள் சென்று, ஆடை மாற்றி விட்டு உணவருந்தி உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.
இரவு முழுவதும் பெய்த மழையில் சைக்கிள் நனைந்து கொண்டே இருந்தது. அதனால் சைக்கிள் முழுவதும் துருப்பிடிக்கும் நிலையை அடைந்தது.
அதிக திறமை கொண்டு மிதித்த போதும் முன்போல சைக்கிள் வேகமாகச் செல்லவில்லை. அதன் பாகங்கள் பல துருப்பிடித்து விட்டபடியால் இயங்க மறுத்தன. மழையானாலும், வெயிலானாலும் பெய்த மழையிலும், அடித்த வெயிலிலும் அவதிப்பட்ட நிலைக்கு ஆளானது சைக்கிள்.
ஒருநாள் அவசர வேலையாக பன்னீர் செல்வம் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. புறப்படத் தயாராகி சைக்கிள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான். சைக்கிளின் மீது கையை வைத்தான்.
அப்போது ஒரு அசரீரி கேட்டது.
''பன்னீர் செல்வம்! உன்னையே நீ எண்ணிப்பார். உனக்கு இந்த வாழ்வைக் கொடுத்தது யார்? கல்லும், முள்ளும் நிறைந்த காடல்லவா? ஓரிரு மைல்கள் தூரம் நடந்து சென்று கடினமாக உழைத்துக் களைப்போடு வீடு திரும்பினாயே, அப்படிப்பட்ட நிலையிலா நீ இப்போது இருக்கிறாய்? நீ நடந்து செல்ல வேண்டியதில்லை. உன்னை எந்நேரமும் சுமந்து செல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆனால், உன் மனம் எவ்வாறு உள்ளது? உன் மனைவியின் கழுத்துக்குச்செயின் வேண்டும். தலை முடிக்கு வாசனைத் திரவியம் வேண்டும் என்று குறுகிய மனத்தோடு அலைகிறாய். ஆனால், தொழிலுக்கும் வேறு பல காரியங்களுக்கும் உனக்குப் பயன்பட்டு வருகிற எனது பாகங்களில் ஒன்றான செயினைப் பார். துருப்பிடித்துக் கிடக்கிறது. நான் வாசனைத் திரவியமா கேட்கிறேன். இரண்டு சொட்டு மண்ணெண்ணெய் விட்டு என்னை அழகுப் படுத்தக் கூடாதா?
''புத்தம் புதிய துணியைக் கட்டி, நீயும் உன் மனைவியும் அழகு பாருங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், பழைய துணி ஒன்றைக் கிழித்து அதனால் எனது மேனியைத் துடைத்து அழகுப்படுத்தக் கூடாதா? அறுசுவை உணவு உண்டு மகிழ வேண்டும் என்று விரும்புகிற நீ, ஆண்டுக்கு ஒருமுறையாவது என்னை அடியோடு பிரித்து மாட்டி எனக்குப் புத்துயிர் ஊட்டக்கூடாதா?
''பணம் வர வர உனக்கு மனம் குறுகி விட்டது. பரந்த மனம் வேண்டும். உயிர் உள்ள உன் போன்றவர்களுக்குப் பரந்த மனம் இருந்தால் என் போன்ற கருவிகள் ஒளி வீச முடியும். எங்களால் உன் போன்றவர்களுக்கு உதவ முடியுமே தவிர, எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாது. ம்.. சரி புறப்படு. அவசர வேலையாக எங்கேயோ போகிறாய். போய்விட்டு. வந்த பிறகாவது என்னைக் கவனி!''
சைக்கிள் தன் நிலையை தனக்கு உணர்த்துகிறது என்பதை அசரீரி மூலம் புரிந்துக் கொண்டான் பன்னீர்செல்வம்.
சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். 'சைக்கிள் நமக்குப் புத்தி சொல்லும் அளவுக்கு நாம் நடந்து கொண்டோமே' என்று வெட்கித் தலை குனிந்தவனாய் சைக்கிளை ஓட்டிச் சென்றான்.
தொழிற்சாலைக்குப் பக்கத்தில் இருந்த சைக்கிள் கடை முன் சைக்கிளை நிறுத்தினான்.
''சார்! இந்த சைக்கிளை ஓவராயில் செய்து வையுங்க,'' என்று கூறிவிட்டு பஸ் நிற்குமிடத்தை நோக்கி நடைப்போட்டான்.
சைக்கிள் தனக்குள் இவ்வாறு கூறிக்கொண்டது.
பணம் மனிதனின் கண்ணை மறைத்து விடுகிறது என்பது உண்மைதான்.
***
