தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நீதான் காரணம்!

நீதான் காரணம்!

நீதான் காரணம்!


PUBLISHED ON : மே 30, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை என்னும் ஊரில் சுகந்தி என்பவள் இருந்தாள். அவளுக்கு நவீன் என்ற மகன் இருந்தான். சிறுவனான அவன் பள்ளியில் படித்து வந்தான்.

வழக்கம் போலப் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவன் நேராக அம்மாவிடம் சென்றான்.

''அம்மா! என் பக்கத்துப் பையன் திவாகர் புத்தகம் இது. அவனுக்குத் தெரியாமல் எடுத்து வந்தேன்,'' என்று புத்தகத்தைக் காட்டினான்.

'மகன் திருடுகிறானே...' என்று அவள் அவனைக் கண்டிக்கவில்லை.

''அவன் அறியாமல் எப்படிப் புத்தகத்தை எடுத்தாய்? உன் மீது யாரும் சந்தேகப்படவில்லையா?'' என்று ஆர்வத்துடன் கேட்டாள் அவள்.

''அந்தப் புத்தகத்தை அவன் தொலைத்து விட்டதாக நினைத்து விட்டான். என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை,'' என்றான் நவீன்.

''உன் திறமை யாருக்கு வரும்?'' என்று அவனைப் பாராட்டினாள் சுகந்தி.

பிறகு அவன் இது போன்ற சிறுசிறு திருட்டுகள் செய்யத் தொடங்கினான் நவீன்.

ஆண்டுகள் ஓடின. வளர்ந்து இளைஞனான அவன் பெரிய திருடன் ஆனான்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டான்.

திருடும் போது காவலர்களிடம் அவன் சிக்கிக் கொண்டான். அவன் செய்த திருட்டுகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார். காவலர்கள் அவனைத் தூக்கு மேடைக்கு இழுத்துச் சென்றனர்.

இதை அறிந்த சுகந்தி அழுது புலம்பியபடியே அங்கே ஓடி வந்தான்.

''மகனே! இதற்காகவா உன்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தேன். உனக்கு இந்த நிலையா வர வேண்டும்?'' என்று கதறி அழுதாள்.

''அம்மா! என்னுடைய இந்த நிலைக்கு நீதான் காரணம். உன்னால்தான் நான் தூக்கில் தொங்கப் போகிறேன்,'' என்று புலம்பினான்.

பதறிய அவள், ''மகனே! நானா உன்னை திருடச் சொன்னேன். என் மீது வீண் பழி சுமத்துகிறாயே... இது நியாயமா?'' என்று கதறினாள்.

''நான் சிறுவனாக இருந்த போது பக்கத்துப் பையனின் புத்தகத்தைத் திருடி வந்தேன். அப்போதே நீ என்னைக் கண்டித்து இருந்தால் நான் திருந்தி இருப்பேன். நீ என்ன செய்தாய்? என்னைப் பாராட்டினாய். நான் மேலும் திருட ஊக்கம் தந்தாய். அதனால் நான் தொடர்ந்து திருடினேன். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும். இது உனக்குத் தெரியாதா? உன்னால்தான் நான் தூக்கில் தொங்கப் போகிறேன். நீ காரணமா இல்லையா? சொல்,'' என்று கேட்டான்.

தான்தான் காரணம் என்பது அவளுக்குப் புரிந்தது.

''மகனே! தவறு செய்து விட்டேன். நீ தூக்கில் தொங்க நானே காரணமாகி விட்டேன். என்னை மன்னித்துவிடு,'' என்று கதறி அழுதாள் அவள்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us