PUBLISHED ON : செப் 09, 2016

மங்கோலிய இனத்தினர், ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சுற்றி பய அலைகளைப் பரப்பி மிகப் பெரிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றி, வரலாற்றின் மிகப் பெரிய பேரரசை அவர்கள் நிறுவினர்.
'அரக்க இனம்' என்றே அழைக்கப்பட்டனர்.
ஊரல் மலைகள் முதல், கோபி பாலைவனம் வரையிலான மத்திய ஆசியாவின் சமதளப் பகுதிகளில் மங்கோலியர்கள் வசித்தனர்; அவர்கள் நாடோடிகள். தங்களது வளர்ப்பு விலங்குகளுடன் சுற்றித் திரிந்தனர். எடுத்துச் செல்லக்கூடிய டென்ட்டுகளில் வசித்தனர். அவர்களது தலைவர்கள், 'கான்கள்' என்று அழைக்கப்பட்டனர். 1206ல், டெமுஜின் கான், எல்லா பழங்குடியினரையும், தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
செங்கிஸ்கான், 'அனைவருக்கும் கடவுள்' என தனக்குத் தானே அவர் அறிவித்துக் கொண்டார். வாழ்நாள் முழுவதுமான வெற்றிகளால், அவர் ஒரு பேரரசை பசிபிக் பெருங்கடலில் இருந்து, தானுபெ நதிவரை விரிவாக்கினார்.
இதில் பெர்சியப் பேரரசும் உள்ளடங்கும். செங்கிஸ்கான் இறந்த பிறகும், மங்கோலியர்கள் தங்களது தாக்குதல்களைத் தொடர்ந்தனர். 1237ல், செங்கிஸ்கானின் மகன்களில் ஒருவரான படுகான், தலைமையில் ஒரு மங்கோலிய ராணுவம் ரஷ்யா மீது படையெடுத்தது.
போரில் மங்கோலியர்களின் வேகம் மற்றும் சீற்றம் பற்றி வாய்வழியாகப் பரவிய செய்தி ஐரோப்பாவில் மக்களை பீதியடையச் செய்தது. மங்கோலிய வீரர்கள் ஒவ்வொருவரும், ஐந்து குதிரைகளுடன் பயணம் செய்தனர். வில்வித்தை யிலும், ஈட்டி எறிவதிலும் வல்லவர்கள். வெற்றியடையும் போது அவர்கள் கருணை இல்லாது நகரத்து மக்களைக் கொன்று செல்வத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 1241ல் அவர்களது தலைவர், ஓகடைகான் இறந்து விட்டதால் மங்கோலியர்கள் தங்களது பூர்வீக இருப்பிடத்திற்குத் திரும்பினர். அதனால், ஐரோப்பா அவர்களிடம் இருந்து தப்பியது.
செங்கிஸ்கானுடைய பேரரசு மேற்கில், தானுபெ நதியில் இருந்து கிழக்கில் பசிபிக் பெருங்கடல் வரை பரந்திருந்தது. அதன் தலைநகரமாக, 'கராகொரம்' இருந்தது.
மங்கோலியர்கள் தங்களின் செம்மறி ஆடுகள், குதிரைகள், வெள்ளாடுகளுக்கான புதிய புல்வெளிகளைத் தேடி சுற்றித் திரிந்தனர். காளைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் தங்களது கையடக்கமான வீடுகளை எடுத்துச் சென்றனர்.
செங்கிஸ்கான் போரில் கருணையற்றவர்; ஆனால், பேரரசில் அமைதியை நிலைநாட்டி நடுநிலையோடு கண்டிப்பான அரசாட்சி புரிந்தார். அவரது ஆட்சியில் வர்த்தகம் செழித்தது.
மங்கோலியர்கள் குதிரை ஏறி சண்டையிடுவதை விரும்பினர். போர்வீரர்கள் கால்களால் தங்களது குதிரைகளைக் கட்டுப்படுத்தினர். அதனால், அவர்கள் கைகள் அம்பு விடவும், ஈட்டிகளை வீசி எறியவும் சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது. மங்கோலியரின் குதிரைப் படையின் ஊடுறுவல் எதிரிகளைத் திணறடித்தது.
மங்கோலியர்களுக்கு குதிரைகள் மிகவும் முக்கியமானவை. அவர்கள் கறந்த குதிரைப் பாலை குடித்தனர். தோல் பைகளில் பாலை நொதிக்க வைத்து, 'கியூமிஸ்' என்ற மதுவகை பானமாகத் தயாரித்தனர். இந்தத் தோல் பைகள் மரப்பலகைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும். வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, 'கியூமிஸ்' அருந்தப்பட்டது. குதிரை முடியால் கட்டப்பட்ட பிடில்கள் வாசிக்கப்பட்டன.
