PUBLISHED ON : பிப் 15, 2013

நாரதருக்கு, பர்வதர் என்றொரு நண்பர் இருந்தார். ஒருநாள் இருவரும் பூலோகத்திற்கு வந்தனர். அவ்வாறு வருவதற்கு முன்னர் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். எந்த ஒரு காரியத்தையும் ஒருவருக்கொருவர் அறியாமல் செய்யக்கூடாது என்பது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் பூலோகத்தின் பல இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக நாட்களை செலவிட்டனர்.
ஒருநாள் இருவரும் சஞ்சயன் என்ற மன்னருடைய அரண்மனைக்கு விஜயம் செய்தனர். மன்னரும் அவர்கள் இருவரையும் வணங்கி வரவேற்று சிறப்பாக உபசரித்தார். அது ஒரு மழைக்காலமாகையால் இருவரும் சாது விரதத்தை அனுஷ்டிக்க முடிவு செய்தனர். மன்னரும் அவர்கள் இருவரிடமும் தமது அரண்மனையிலேயே விரதத்தை அனுஷ்டிக்குமாறு வேண்டிக் கொண்டார். இருவரும் இதற்குச் சம்மதிக்க, மன்னரும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
மன்னருக்கு திருமண வயதில் தமயந்தி என்றொரு மகள் இருந்தாள். முனிவர்கள் இருவரையும் கவனித்து பணிவிடை செய்ய தனது மகளை நியமித்திருந்தார் மன்னர். திருமணமாகாத கன்னிப் பெண்கள் முனிவர்களுக்குப் பணிவிடை செய்தால் நல்ல கணவன் வாய்ப்பான் என்பது அக்கால நம்பிக்கை. அதன் அடிப்படையிலேயே மன்னரும் இப்பணிக்காக, தனது மகளை நியமித்தார்.
தமயந்திக்கு இசையில் அதிக ஈடுபாடு இருந்ததால், அவள் நாரதரின் வீணை இசையைக் கேட்டு மயங்கி, அவரிடத்தில் தனது மனதைப் பறி கொடுத்தாள். இதன் காரணமாக நாரதருக்கு சற்று அதிகப்படியாகப் பணிவிடைகளைச் செய்தாள். பர்வதருக்கு ஏனோ தானோ வென்று பணிவிடைகளைச் செய்தாள். இதை பர்வதர் அறிந்து கொண்டார்.
ஒருநாள் நாரதரிடம் இது குறித்துக் கேட்டார் பர்வதர்.
''பர்வதரே, நீங்கள் சொல்லுவது உண்மைதான். தமயந்தி என்னை மணக்க விரும்புகிறாள்,'' என்றார்.
இதைக் கேட்ட பர்வதர், நாரதர் மேல் கோபம் கொண்டார். பூலோகத்திற்கு வரும் முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நாரதருக்கு நினைவூட்டினார்.
ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது என்பது ஒப்பந்தம். தன்னிடம் ஏதும் சொல்லாமல் மறைத்து, தமயந்தியிடம் மனதை பறிகொடுத்து நாரதர் ஒப்பந்தத்தை மீறிவிட்டார் என்று முடிவு செய்த பர்வதர் நாரதருக்கு ஒரு சாபம் கொடுத்தார்.
''உம் அழகில் மயங்கித்தானே தமயந்தி உன்னை மணக்க விரும்பு கிறாள். உம்முடைய முகம் குரங்கு போலாகட்டும்,'' என்று சபித்தார்.
பர்வதர் சாபமிட்டதும், நாரதரின் முகம் குரங்கு முகமாகி விட்டது.
''பர்வதரே, நீர் அவசரப்பட்டு எமக்குச் சாபம் கொடுத்துவிட்டீர். எனவே, உமக்கு சொர்க்கலோகத்தில் இடமின்றி போகட்டும். மேலும், நீர் மிருத்யுலோகத்தில் வாழ்வீர்,'' என்று நாரதர் பதிலுக்கு பர்வதருக்கு ஒரு சாபம் கொடுத்து விட்டார்.
நாரதர் மட்டும் அரண்மனையில் தங்கியிருக்க, பர்வதர் அரண்மனையை விட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டார்.
தமயந்தி நாரதரின் குரங்கு முகத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.
நாரதர், பர்வதர் கொடுத்த சாபத்தைப் பற்றி தமயந்தியிடம் தெரிவித்தார். ஆயினும் தமயந்தி நாரதர் மேல் கொண்ட அன்பு மாறாமல் அவருக்குத் தொடர்ந்து சிறப்பான பணிவிடைகளைச் செய்து வந்தாள்.
இதற்கிடையில், சஞ்சயன் தனது மகள் தமயந்தியின் திருமணத்திற்கு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். பலநாட்டு இளவரசர்களைப் பார்த்து, கடைசியில் ரிஷி என்னும் ஒரு இளவரசனைத் தேர்வு செய்தார். ஆனால், தமயந்தியோ, 'மணந்தால் நாரதரைத் தான் மணப்பேன்!' என்று தீர்மானமாகத் தெரிவித்தாள்.
தமயந்தியின் பெற்றோரோ, 'குரங்கு முகமுடைய நாரதரை மணப்பது சரியல்ல...' என்று மறுத்தனர். கடைசியில், சஞ்சய மன்னன் மனம் மாறி நாரதருக்குத் தன் மகளை மணமுடித்து வைக்க முடிவு செய்தான். ஒரு நல்ல நாளில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
நாரதர் தன் குரங்கு முகத்தை நினைத்து வேதனை அடைந்தார். ஆனால், தமயந்தியோ எதைப் பற்றியும் கவலை கொள்ளாது மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள்.
ஒருநாள் பர்வதர் அந்த அரண்மனைக்கு விஜயம் செய்தார். இருவருக்கும் திருமணம் நடைபெற்ற செய்தியினை அறிந்தார். நாரதரையும், தமயந்தியையும் பார்த்தவர் தன் தவறை உணர்ந்தார். 'தாம் அவசரப்பட்டு விட்டோம்' என்று முடிவு செய்தவர், நாரதரிடம் மன்னிப்பு கேட்டார்.
பர்வதர் தனது சாபத்தை விலக்கிக் கொள்ள நாரதர் தன் பழைய முகத்தை மீண்டும் பெற்றார்.
நாரதரும் தன் தவறை உணர்ந்தார். தன் நண்பருக்கு அளித்த சாபத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டார்.
சாபம் நீங்கப்பெற்ற நாரதர், தமயந்தியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
***
