PUBLISHED ON : அக் 02, 2021

காட்டில், மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்த ஏரியில் தங்கியிருந்தது துர்தேவதை.
அந்த பகுதியில் எந்த விலங்குகளையும் வரவிடாமல் தடுத்தது. அதனால் அந்த பகுதி குரங்குகள் சிரமப்பட்டன. அவை, ஏரித் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. பழங்கள் சேகரிக்க வெகு துாரம் செல்ல வேண்டியிருந்தது.
இது குறித்து தலைவரிடம் முறையிட்டன குரங்குகள்.
கூட்டத்தை அழைத்த தலைவர் குரங்கு, 'அன்பர்களே... மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பகுதி இது; என் அனுமதியின்றி, இந்த பகுதியில் எந்தப் பழத்தையும் உண்ண கூடாது; ஏரி நீரையும் பருகக்கூடாது...' என எச்சரித்தது.
ஒரு நாள் -
வெகுதுாரம் சென்று பழங்களை சேகரித்து திரும்பின குரங்குகள்.
தாகத்துடன் இருந்த குட்டி குரங்கு, தண்ணீர் குடிக்க ஏரிக்கு சென்றது.
பதறியபடி, 'அங்கு போகாதே... தலைவர் எச்சரித்ததை மறந்து விட்டாயா...' என சத்தம் போட்டன மற்ற குரங்குகள்.
'தாகம் எடுத்ததால் அறிவுரையை மறந்து விட்டேன்; தலைவர் வரும் வரை காத்திருப்போம்...' என்றது குட்டி.
சிறிது நேரத்தில் அங்கு வந்த தலைவர் குரங்கு, 'ஏரியில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததா' என சோதிக்க முடிவு செய்தது. அப்போது துர்தேவதையின் காலடி தடயங்களைக் கண்டது. உடனே சுதாகரித்து, 'யாரும் ஏரியில் தண்ணீர் பருக வேண்டாம்...' என மீண்டும் எச்சரித்தது.
குரங்கு குட்டி, 'மிகவும் தாகமாக இருக்கிறது; நா வறட்சி ஏற்பட்டுள்ளது; ஏதாவது வழி கூறுங்கள்... உடனே குடிக்க வேண்டும்...' என்றது.
நம்பிக்கையுடன், 'சற்று பொறுமையாக இரு. தண்ணீர் பருக வழி கண்டுப்பிடிக்கிறேன்...' என்றது தலைவர் குரங்கு.
திடீரென ஏரிக்குள் இருந்து குதித்து வெளியேறியது துர்தேவதை.
அதை கண்டதும் பயந்து நடுங்கின குரங்குகள்.
'இது என் ஆட்சியில் இருக்கும் பகுதி. இங்கு யார் வந்தாலும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவேன்...'
உரத்த குரலில் கத்தி சிரித்தது துர்தேவதை.
'அப்படியானால், ஏரிக்குள் நுழையாமல் தண்ணீர் குடிக்கிறோம்... அதற்கு அனுமதியுங்கள்...'
தைரியத்துடன் கூறியது தலைவர் குரங்கு.
பலமாக சிரித்தபடி, 'அது எப்படி... உங்களால் முடியுமா...'
ஏளனம் செய்தது துர்தேவதை.
உடனே, 'மூங்கில் மரத்தில் குச்சிகளை வெட்டி வாருங்கள்...' என கட்டளையிட்டது தலைவர் குரங்கு.
மற்ற குரங்குகள் அதிவேகமாக வெட்டி வந்தன; பின் அந்த மூங்கில் குச்சிகளை குழாய் போல் இணைத்து, ஒரு முனையை ஏரிக்குள் போட்டு, மற்றொரு முனையில் வாயை வைத்து உறிஞ்சியது, தலைவர் குரங்கு.
என்ன ஆச்சர்யம். எந்த சலனமும் இன்றி தண்ணீரை குடித்து, தாகம் தீர்த்தது.
இதை பின்பற்றி எல்லா குரங்குகளும் வரிசையாக தண்ணீரை குடித்து மகிழ்ந்தன.
அதை கண்டதும் வெட்கி, காற்றில் கலந்தது துர்தேவதை.
பின், சுதந்திரமாக வாழ்ந்தன குரங்குகள். சிறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, அந்த பகுதியை வளப்படுத்தின.
குழந்தைகளே... அறிவுடன் சிந்தித்தால் நல்ல சிறப்பான பலன்களை பெறலாம்.
- கே.யு.ஐஸ்வர்யா

