
அன்பு பிளாரன்ஸ்...
என் வயது 33; இல்லத்தரசியாக உள்ளேன். மகன் வயது, 12; 7ம் வகுப்பு படிக்கிறான்; அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. எல்லாரிடமும் கடன் வாங்குவான்; அவனது வகுப்பில், 40 மாணவ - மாணவியர் உள்ளனர். அனைவரிடமும், வித விதமான பொய் கூறி, கடன் வாங்கி விட்டான்.
போக்குவரத்து காவலரிடம், 100 ரூபாய்; நடமாடும் காய்கறி கடைகார அம்மாவிடம், 50 ரூபாய்; பக்கத்து வீட்டுகாரர்களிடம், 100 ரூபாய் என கடன் வாங்கி குவித்து விட்டான்.
கடன் வாங்கிய பணத்தில் ஐஸ்கிரீம், குளிர்பானம், நொறுக்கு தீனி தின்பான். வாங்கின கடனை திருப்பி கொடுக்கும் பழக்கமே இல்லை.
அவனிடம், 'ஏன்டா இப்படி எல்லாரிடமும் கடன் வாங்குகிறாய்...' என கேட்டால், 'முகராசி இருக்கு; கடன் கேக்குறேன்; கொடுக்குறாங்க. பிரதமர் மோடிய பாத்தா கூட, 1,000 ரூபாய் கடன் வாங்கி விடுவேன்; விடும்மா இதப் போய் பிரச்னையாக்கிட்டு...' என்கிறான்.
இவனை திருத்த நல்ல வழி சொல்லுங்கள்.
அன்பு நிறைந்த அம்மா...
யாருக்கு நியாயமற்ற தேவைகள் அதிகரிக்கிறதோ, அவர்கள் கடனாளி ஆகின்றனர்.
கடன் வாங்குதல் ஒரு வியாதி போன்றது. ஜலதோஷம் போல தொற்றி, புற்றுநோயாய் பூதாகரமாகி ஆளை விழுங்கிவிடும்.
கடனாக, 100 ரூபாய் வாங்கி, அதை தொழிலில் முதலீடு செய்து, 150 ரூபாய் ஆக்கி, வாங்கிய கடனை, வட்டியுடன், 105 ரூபாயாய் திருப்பியளித்து, 45 ரூபாய் லாபம் பார்க்கும் புத்திசாலிகளும் இருக்கின்றனர்.
என் அம்மா வழி தாத்தா உயிரோடு இருந்த வரை, யாருக்கும் கடன் கொடுக்க மாட்டார்; கடன் வாங்கவும் மாட்டார்.
தினமும் செலவுகளை நோட்டில் எழுதுவார்; தனக்கு, 100 ரூபாய் வருமானம் வந்தால், 80 ரூபாயை செலவு செய்து, 20 ரூபாயை சேமிப்பார்; அவரது இறுதிச்சடங்கு செலவை கூட வங்கியில் வைப்பு தொகையாக போட்டிருந்தார். அது சிறந்த வாழ்க்கை. அதுபோல் பழகுவது நல்லது.
அம்மா... மகனின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கவும்; எந்தெந்த செலவுகளுக்காக வாங்குகிறான்; என்ன காரணங்களை கூறி கடன் கேட்கிறான் என்பதை கண்டுபிடிக்கவும்.
கடன் வாங்கி செலவு செய்வதில் அவனுக்கு குருநாதர் யாராவது இருக்கின்றனரா என்பதை உளவறியவும்.
இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பார்ப்போம்...
யாரிடமும், நீ கை நீட்டி கடன் கேட்க கூடாது என்ற நிபந்தனையுடன், மகனுக்கு தினமும், 10 ரூபாய் பாக்கெட் மணி கொடுக்கவும். அந்த தொகைக்கான செலவு கணக்கை தினமும் ஒப்பிக்க வேண்டும் என வலியுறுத்தவும்.
பொய் காரணம் கூறி, கடன் வாங்கி திருப்பி தராமல் இருந்தால், கடன் கொடுத்து ஏமாந்தோர் கூறும் கருத்துகளை, வீடியோவில் பதிவு செய்து, மகனிடம் காட்டவும்; வெட்கி தலைகுனிவான்.
மகனே... சத்துணவுக்காக, பள்ளி செல்லும் மாணவர்களை அறிவாயா...
வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடராமல், உணவகங்களிலும், மெக்கானிக் ஷாப்களிலும் வேலை பார்க்கும் சிறுவர்களை பற்றி அறிவாயா...
பள்ளி செல்லும் முன், அதிகாலையில் செய்திதாள் போட்டு சம்பாதித்து, பெற்றோருக்கு உதவியாக இருக்கும் சிறுவர்களை பற்றி அறிவாயா...
எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கை ஏந்தாமல் வாழும் தன்மான சிறுவர்களை பற்றி அறிவாயா...
இது போன்று கேள்விகளை கேட்கவும்.
'பிச்சை வாங்குவதை விட அவமானகரமானது கடன்; தொடர்ந்து வாங்கும் குணம் இருந்தால், திருடும் பழக்கமும் வந்து விடும். இனி, யாரிடமும் கடன் வாங்காதே; கடன் கொடுத்தவர்களின் பட்டியலை கொடு; இம்முறை நான் கொடுத்து விடுகிறேன்; இனி ஒருபோதும் கடன் வாங்காதே...' என அறிவுரை கூறவும்!
அத்துடன்...
* உண்டியல் வாங்கி கொடுத்து சேமிக்கும் பழக்கத்தை துவங்கி வைக்கவும்
* மனநல ஆலோசகரிடம் ஆலோசனை வழங்கவும்
* உறவு, நட்பு வட்டத்தில் கடன் கொடுப்பவர்களை தடுக்கவும்
* தொடர்ந்து ஒரு மாதம் கடன் வாங்காமல் இருந்தால், மதிப்புள்ள பரிசு வழங்கி ஊக்குவிக்கவும். கடன் அன்பை முறிக்கும் என்பதை பக்குவமாக எடுத்துக்கூறவும்.
- குறையாத அன்புடன், பிளாரன்ஸ்.

