
ரானுவை அழைத்தாள் அம்மா செல்வி.
''இதோ வர்றம்மா...''
விளையாட்டுத்தனமாக, கால்சட்டை பைகளில் கைகளை நுழைத்தபடி வந்து ஆடியபடியே நின்றான்.
''ஆடாம கொஞ்ச நேரம் நில்லு...''  
''எதுக்கு கூப்டிங்க...''
ஒரே இடத்தில் நிற்காமல் கேட்டான் ரானு.
''ஏன்டா... எந்நேரமும், பர பரப்பா இருக்குற; உன்னோட காலு தரையில நிக்காதா...''  
''எப்பவும் வேலையா தான் இருப்பேன்; இப்ப எதுக்கு கூப்பிட்டீங்க...'' 
''இப்படி ஆடிக்கிட்டே இருந்தா, எப்படி ஒரு வேலைய நம்பி உங்கிட்ட கொடுக்க முடியும்...'' என அன்பாக சிடுசிடுத்த அம்மா, ''எனக்கு உடம்பு சரியில்ல... இன்று மோர் விற்க எப்படி போவேன்னு தெரியலயே...'' என, புலம்பினாள்.
சட்டென ஆட்டத்தை நிறுத்தி, ''அம்மா... ஓய்வெடுத்துக்கோங்க; மோரு விற்க நான் போறேன்...'' என்றான் ரானு.
''அது, மிகவும் பண மதிப்புள்ள மோருடா; அதை விற்றுதான் மின் கட்டணம் செலுத்தணும்ன்னு இருக்கேன். வயித்து வலி வந்து, பாடா படுத்திட்டு இருக்கு; உன்ன நம்பி கொடுத்து அனுப்பவும் தயக்கமா இருக்கு; ஆடிட்டு போய், மொத்தமா கொட்டிட்டா என்ன செய்வேன்...'' என்றாள் அம்மா.
அன்பு கனிய அருகே வந்தவன் இரு கைகளாலும், அம்மாவின் கழுத்தை கட்டியபடி, ''பயப்படாம என்கிட்ட மோரு கொடுத்து அனுப்பி வைங்க; கொட்ட மாட்டேன்...'' என, நம்பிக்கை தெரிவித்தான் ரானு.
மோர் வாளியை தயக்கத்தோடு கொடுத்தாள் அம்மா.
காலை, 10:00 மணிக்கு கிளம்பியவன், மதியம், 3:00 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை.
'மோரு கொட்டியிருக்குமா அல்லது விற்றிருப்பானா; மின்சார கட்டணம் கட்ட முடியுமா; காலையில் எதுவுமே சாப்பிடலயே... பசியில் மயக்கம் போட்டு விழுந்திருப்பானோ... விழுந்ததில் அடிப்பட்டு இருக்குமோ' என, கலவரத்துடன், தெருவுக்கும், வீட்டுக்கும் அலைந்தபடி இருந்தாள் அம்மா.
'டைய்ன்டக்கா... டைய்ன்டக்கா...'
ஆடியபடியே, வெற்று வாளியுடன் வீட்டில் நுழைந்தான் ரானு. 
அம்மாவுக்கு உயிர் வந்தது.
வாளியை வாங்கியபடி, புடவை தலைப்பால் அவன் முகத்தை துடைத்தாள். பின், மடியில் உட்கார வைத்து, சாதம் ஊட்டி விட்டாள். தண்ணீர் குடிக்க வைத்தாள். 
எதுவும் புரியாமல் பார்த்தான் ரானு.
'மோர் கொடுத்து அனுப்பும் போது, மிகவும் கவலைப்பட்டாங்க; இப்போது என்கிட்ட எதுவுமே கேட்காமல் கண்ணீருடன் சாப்பாடு ஊட்டி விடுறாங்க; எதுவுமே புரியல்லையே' என குழப்பினான் ரானு. 
குடும்பத்துக்கு செய்த சிறிய உதவியால் அம்மா எவ்வளவு நெகிழ்ந்துள்ளார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
குழந்தைகளே... சின்னச் சின்ன உதவியால் குடும்பத்தை இனிமையாக்குங்கள்!
கே.ஆர்.விஜயலட்சுமி

