
நம் நாட்டில் சராசரியாக வெப்பநிலை, 23.65 டிகிரி செல்சியஸ் பதிவாகிறது. கோடைகாலத்தில் வெகுவாக உயரும். உலகில் அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகள் பற்றி பார்ப்போம்...
இந்தியாவில் கோடை வெப்பநிலை, மார்ச், 1901ல் முதல் முறையாக, 33.1 டிகிரி செல்சியஸ் என பதிவானது. தொடர்ந்து, 122 ஆண்டுகளுக்கு பின், அதே அளவு வெப்பநிலை கடந்த மார்ச், 2022ல் நிலவியது.
மத்திய கிழக்கு நாடான ஈரான் கிழக்கு பகுதியில் டஸ்ட் - இ - லுாட் என்ற பாலைவன பகுதி பூமியில் கடும் வெப்பம் நிலவும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக, 70.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிறது. இங்கு, எந்த உயிரினமும் உயிர் வாழ வாய்ப்பில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த பகுதியில், 2005ல், 71 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.
ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, சன் ஷைன் ஸ்டோ சுற்றுலா தலத்தில் கடந்த, 2003ல், 69.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள் இதை உறுதி செய்தது.
இந்த வெப்பம் நிலவியதற்கு காரணமும் கண்டறியப்பட்டது. பூமியின் தெற்கு முனையான அண்டார்டிகாவில் உருவான குளிர் நீரோட்டத்தால், இந்த பகுதியில் மழை பொய்த்ததே காரணம் என்றனர் விஞ்ஞானிகள்.
ஆசிய நாடான சீனா, சின் ஜியாங் ஹூயோ பகுதியில் சிவப்பு நிற பாறைகள் நிறைந்துள்ளன. இங்குள்ள மலைப்பகுதியில் தரிசு நிலப்பரப்பில், 2008ல், 66.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதாக பதிவானது. இதற்கு காரணம், அந்த பகுதியில் நிறைந்துள்ள சிவப்பு மணற்பாறைகளே என கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
வட ஆப்ரிக்க நாடான லிபியா தலைநகர் திரிபோலி அருகே உள்ளது அல் - அஜிசியா. இங்கு எப்போதும் வெப்பம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு கோடையிலும், 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும். இங்கு, 1922ல், திடீரென, 57.8 டிகிரி செல்சியஸ் பதிவானது.
அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணபள்ளத்தாக்கு வறண்ட நிலப்பகுதி. மலைகள் சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் இருந்து வீசும் காற்றால் சராசரி வெப்பம், 47 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இங்கு, 1913ல், 56.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
ஆப்ரிக்கா நாடான தான்சானியாவின் பழமையான நகரம் கெபிலி. இங்கு கோடைகாலத்தில், 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும். இந்தியாவின், ராஜஸ்தான், கங்காநகர் பகுதியில், கோடையில், 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் காணப்படும்.
இது போல் வெப்பம் நிறைந்த காலத்தில், உடலை பாதுகாக்க அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். மோர், பழச்சாறுகள் பருகலாம். வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும்.
- கோவீ.ராஜேந்திரன்

