
தொலை பேசி!
தொலைபேசி கருவியை கண்டுபிடித்து புகழ் பெற்றவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற விஞ்ஞானி.
இவர், 1870ல் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 'இன்னும் சில ஆண்டுகளில், இருக்கும் இடத்தில் இருந்தே நீண்ட தொலைவில் இருப்பவரிடமும் பேச முடியும்...' என்றார்.
கூட்டம் ஏளனமாக நகைத்தது. அதை பொருட்படுத்தாமல் முயற்சி செய்தார் கிரகாம் பெல். கடும் உழைப்பால், 1876ல் தொலைபேசி கருவியை உருவாக்கி சாதனை படைத்தார். ஏளனம் செய்த கூட்டம் தலை குனிந்தது.
தமிழகத்தில் தொலைபேசி வைத்திருப்பது, 1980ம் ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. கறுப்பு வண்ண கருவியில் ஒவ்வொரு எண்ணாக சுழற்றி உள்ளூர் அளவில் மட்டுமே பேச முடியும். வெளியூருக்கு, 'டிரங்கால்' புக் செய்து காத்திருந்து பேச வேண்டும்.
அந்த காலத்தில் தபால் நிலையம் தான், பொதுதெலைபேசி மையமாக செயல்பட்டது. அங்கு தொலைபேசி எண்ணை, ஒரு விண்ணப்பதில் நிரப்பி கொடுத்தால் வரிசைப்படி தொடர்பு ஏற்படுத்தி கொடுப்பர்.
அதிலும், ஆர்டினரி மற்றும் அர்ஜன்ட் என, அழைப்பு வகைகள் இருந்தன. விரைவில் இணைப்பு கிடைக்க வேண்டுமானால், 'அர்ஜென்ட்' என விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு கட்டணமும் அதிகம். நீண்ட காத்திருப்புக்கு பின் இணைப்பு கிடைத்து பேசுவதே பெரும் சாதனையாக இருந்தது.
அந்த காலத்தில் தொலைபேசி இருக்கும் வீட்டிற்கு தனி மரியாதை இருந்தது. அந்த பகுதிக்கே இணைப்பகமாக அது விளங்கியது. சிலர் தொலைபேசி கருவி அருகே உண்டியல் வைத்திருப்பர். கட்டண தொகையை அதில் போட்டுவிட வேண்டும். தொலைபேசி அருகே நோட்டு புத்தகம் ஒன்றும் வைத்திருப்பர். அதில் பேசுபவர் பெயர், பேசும் நேரம் மற்றும் எண் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும்.
அப்போதெல்லாம் தொலைபேசி இணைப்பு பெற எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். விண்ணப்ப வரிசைப் படி கொடுப்பர். நாடாளுமன்ற உறுப்பினர் சிபாரிசு செய்தால் விரைவாக கிடைக்கும். தொலைபேசியில் பேசும் புகைப்படத்தை வீடுகளில் மாட்டுவதும் கவுரவமாக கருதப்பட்டது.
பண வசதி மிக்கவர்களின் அடையாளமாக இருந்தது தொலைபேசி. இன்று, அது அலைபேசியாக பெரும் மாற்றமடைந்துள்ளது. அனைவர் கையிலும் தவழ்கிறது. உலகின் எந்த மூலையில் இருப்பவரிடமும் நினைத்த உடன் பேசலாம். முகத்தை பார்த்துக்கொண்டே பேசுவது சாதரணமாகிவிட்டது. தொழில் நுட்பம் நவீன மயமாகிவிட்டது. அது, வசதிகளை பெருக்கியுள்ளது. புதிய பாதைகளில் பயணிக்க துாண்டுகிறது.
குழந்தைகளே... தொழில் நுட்ப வளர்ச்சியால், பணிகள் விரைந்து முடிகின்றன. அன்றாடம் நேரம் மிச்சமாகிறது. அதை சிறப்பாக பயன்படுத்தினால், உயர்ந்த நிலையை அடையலாம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

