sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுட்டி முயல்!

சுட்டி முயல்!

சுட்டி முயல்!


PUBLISHED ON : ஆக 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை காட்டில், சிட்டி, சுட்டி என்ற குட்டிகளுடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது ஒரு முயல். குட்டிகள் செய்யும் குறும்புகளை பொறுத்து, புத்திமதி கூறி அன்பாய் திருத்தியது.

சிட்டி தான் பெரியது; எப்போதும், பொறுப்புடன் தாய் சொல்லை தட்டாமல் நடக்கும்; பிரச்னை எதிலும் மாட்டிக் கொள்ளாது. ஆனால், குட்டி முயல் சுட்டி, பெயருக்கு ஏற்ப, சுட்டித்தனம் செய்யும்; தாய் பேச்சைக் கேட்காமல், குறும்பால் அவ்வப்போது மாட்டிக் கொள்ளும்.

தாய் முயலுக்கு, ஆழியாறு காட்டில், கிழங்கு, காய், கனிகள் சேகரிக்கும் வேலை இருந்தது. திரும்பி வர, இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், உரிய முன்னேற்பாடுகளை செய்தது.

குட்டிகளை அழைத்து, 'நான் ஊரில் இல்லாத போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையான கிழங்குகள் பறித்து வைத்திருக்கிறேன்; சாப்பிடுங்கள்...

'போதவில்லை என்றால், அருகே, கண்ணப்பன் தோட்டத்தில், கேரட், காய்கறிகளை சாப்பிடுங்க... அங்கு கண்காணிப்பும், காவலாளி எண்ணிக்கையும் குறைவு. வேறு எங்கும் போகாதீங்க...' என்று அறிவுரை கூறியது தாய்.

அப்போது துடுக்குடன் முந்திய சுட்டி, 'அதுக்கு அடுத்ததாகவும் ஒரு தோட்டம் இருக்கே...' என்றது.

சுட்டியின் ஆர்வத்தை புரிந்து கொண்ட தாய், 'ஆமாம், அடுத்து உள்ளது வீரப்பன் தோட்டம். அங்கு, சுற்றுச்சுவர் உண்டு. காவலாளி மிகவும் கவனமாக கண்காணிப்பார். அங்கு சென்றால், அடித்துக் கொன்று விடுவர். அங்கே போகாதீங்க...' என்று எச்சரித்து கிளம்பியது.

தாய் சொன்ன அறிவுரையை மனதில் பதித்து, அதன்படியே நடந்தது சிட்டி. தம்பி சுட்டியோ, 'அம்மாவிற்கு விபரம் போதவில்லை' என்று எண்ணி, அறிவுரையை காற்றில் பறக்கவிட்டது. அதன் மனம் அலை பாய ஆரம்பித்தது. அன்று துாங்க போகும் முன், 'நாளை வீரப்பன் தோட்டத்தில் தான் கேரட் சாப்பிட வேண்டும்' என, முடிவு செய்தது.

மறுநாள் -

காலை சூரிய கதிர்கள், முகத்தில் விழ, முயல் குட்டிகள் மகிழ்ச்சியுடன் எழுந்தன.

பல் துலக்கி, தேனீர் தயாரித்து பருகின. பின், குளித்து முடித்து, உணவு மேஜையில் அமர்ந்தன. அம்மா தயாரித்து வைத்திருந்த சர்க்கரை வள்ளி கிழங்கு உணவை, வயிறு முட்ட சாப்பிட்டன.

பின், புல்வெளியில் ஓடிப்பிடித்து விளையாடின. சிறிது நேரத்தில் பசி எடுத்தது.

மதிய உணவு நேரம். உடனே, முயல்குட்டிகள், கண்ணப்பன் தோட்டத்திற்குச் சென்றன. அங்கு, கேரட்டுகளை ருசித்து சாப்பிட்டது சிட்டி.

ஆனால், சுட்டியோ ஒரு கேரட்டை சாப்பிட்டதும் முகத்தை சுழித்தது.

'இதை எப்படித்தான் சாப்பிடுகிறதோ சிட்டி... கொஞ்சம் கூட இனிப்பே இல்லை; வீரப்பன் தோட்டத்திற்கு போனால், இனிய கேரட்டுகளை சாப்பிடலாம்' என்று எண்ணி, சத்தமின்றி கிளம்பியது.

வீரப்பன் தோட்டத்தில், ஆள் நடமாட்டம் இல்லை; சுற்றுச்சுவரில் இருந்த துவாரம் வழியாக, உள்ளே நுழைந்து, கேரட்டுகளை தின்று, வீடு திரும்பியது சுட்டி. அன்று இரவு நன்கு துாங்கியது.

அடுத்த நாள் -

வழக்கம் போல், காலை கடன்களை முடித்து, காலை சிற்றுண்டிக்கே வீரப்பன் தோட்டத்தில் நுழைந்து, வயிறு முட்ட சாப்பிட்டது சுட்டி. சாப்பிட்டு முடித்த போது, ஒரு பயங்கர தடி பறந்து வந்து, மரத்தில் மோதி, சுட்டி அருகே விழுந்தது; பயத்தில் சிலிர்த்து நின்றது சுட்டி.

கோபத்தால் சிவந்த கண்களுடன், எதிரில் வீரப்பன் நிற்பதைக் கண்டது. மிரண்டு, கதி கலங்கி அங்கும் இங்கும் ஓடியது. அதை கொன்று விடும் முடிவுடன் துரத்தினான் வீரப்பன்.

வந்த வழியாக திரும்ப, சுற்றுச்சுவர் துவாரத்தில் நுழைந்தது சுட்டி. அதன் தலை மட்டுமே நுழைந்தது; வயிறு பெருத்திருந்ததால், உடலை நுழைக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயன்றதால், உடலில் காயம் ஏற்பட்டது.

உடனே, அந்த துவாரத்தை தவிர்த்து, தோட்டத்திற்குள் ஓடி, தண்ணீர் தொட்டிக்குள் குதித்து ஒளிந்து கொண்டது. அங்கு, மூச்சை பிடித்து, அமர்ந்திருந்த சுட்டி, சுற்றுப்புறத்தை கூர்மையாக கவனித்தது.

'ஆள் நடமாட்டம் இல்லை' என்பதை உறுதிபடுத்தியதும் குதித்து ஓடியது; தோட்டக் கதவு திறந்திருந்ததால், தப்பியது. வீட்டை அடைந்ததும், 'அச்... அச்...' என, தும்மல் போட்டது. அதைக் கண்ட சிட்டி, 'எங்கே சென்றாய்... இப்படி நனைந்து, ஈரத்துடன் வந்திருக்கிறாயே...' என்றது.

'குளத்தில் நீச்சல் பழகினேன்...' என்று சமாளித்த சுட்டி, துாங்க சென்றது.

மறு நாள் காலை, வேலைகள் முடிந்து, தாய் முயல் வீடு திரும்பியது; அதன் குரலைக் கேட்டதும், சிட்டி ஓடிவந்து கட்டி அணைத்து முத்தமிட்டது.

அதன் தலையை கோதியபடி, 'சுட்டி எங்கே...' என்றது தாய்.

'இன்னும் துாங்கிட்டு இருக்கு...' என்றது சிட்டி.

போர்வையை நீக்கி, சுட்டியின் நெற்றியை தொட்டுப் பார்த்தது தாய்; காய்ச்சலில், நடுங்கிக்கொண்டிருந்தது சுட்டி. உடலில், ஆங்காங்கே சிராய்ப்புடன், ரத்த காயம் இருந்தது. உடனே, முதலுதவி சிகிச்சை அளித்தது; சிறிது நேரத்தில், சுட்டியின் காய்ச்சல் குறைந்தது.

தாய் முயல் கரிசனத்துடன், சுட்டியின் தலையை கோதி முத்தமிட்டு, 'நேற்று எங்கே போய் சாப்பிட்டாய்...' என்றது.

அதற்கு பதில் சொல்ல தயங்கிய சுட்டி, விழித்தபடி தாயின் மடிக்குள் சுருண்டது.

சிணுங்கிய சிட்டி, 'அம்மா... சுட்டி நேற்று எங்கு போனதுன்னே தெரியல்ல; திரும்பி வரும் போது, உடலெல்லாம் ஈரம் சொட்டியது...' என்று மூச்சு விடாமல் கூறியது.

தாய் முயலின் அரவணைப்பில் கிடந்த சுட்டி, நடந்த சம்பவத்தை கூறியது. அதை கேட்டு நடுங்கிய தாய் முயல், 'இதுபோல் இனி செய்ய கூடாது; எப்போதும் அறிவுரையை கேட்டு நடக்கணும். இல்லா விட்டால் ஆபத்தில் மாட்டிக்க வேண்டியது தான்...' என்றது.

அன்று முதல், தாய் சொல்லை தட்டாமல், வாழ்ந்தது சுட்டி முயல்.

குட்டீஸ்... நீங்களும் அப்படியே வாழ பழகுங்க!

ஆர்.கார்த்திகேயன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us