PUBLISHED ON : ஆக 02, 2019

ஆசியா கண்டத்தில் மிகவும் மகிழ்ச்சியான நாடு பூட்டான். உலகில், நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட, 48 நாடுகளில் ஒன்று. கிழக்கு, தெற்கு, மேற்கில் இந்தியாவும், வடக்கே திபேத்தும் எல்லைகளாக உள்ளன. எந்த வகை ஆக்கிரமிப்புக்கும் உட்படாதது!
இங்கு ஜனநாயக முறையில், தேர்தல் நடத்தப்பட்டாலும், முதன்மை அதிகாரம் பெற்றவராக, பூட்டான் மன்னரே உள்ளார். முன்னேற்றம் என்ற பெயரில், காட்டு செல்வத்தை அழிக்காத நாடு. காட்டின் பரப்பளவை, 60 சதவீதத்திற்கு கீழ் குறையாமல் பாதுகாத்து வருகிறது. கரியமில வாயுத் தாக்கம் இந்த நாட்டில் மிகவும் குறைவு; சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பகுதியினர், 14 வயதுக்கு குறைந்த சிறுவர், சிறுமியர்.
பூட்டான் நகர சாலைகளில் ஒரு இடத்தில் கூட, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் அமைப்பு இல்லை; இதற்கு காரணம், இங்கு போக்குவரத்தால் நெரிசலே ஏற்படுவதில்லை.
சிகரெட் புகைக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. பிளாஸ்டிக் என்ற நெகிழி பயன்பாட்டுக்கும் தடை அமலில் உள்ளது.
ஆண்டுக்கு, 40 ஆயிரம் பேர் இங்கு சுற்றுலா வருகின்றனர். சுற்றுலா முகவர்கள் உதவியுடன் மட்டுமே, சுற்றிப்பார்க்க முடியும். தனியாக எங்கும் செல்ல முடியாது.
இங்குள்ள, 18 மலைகள், 23 ஆயிரம் அடிக்கு மேல் உயரம் உள்ளவை; இவற்றில், காங்கார் பியூன்சம் என்ற மலை, 24 ஆயிரத்து, 840 அடி உயரமுள்ளது.
பூட்டான், புத்த மதத்தை பின்பற்றுகிறது. 75 சதவீதம் பேர் பவுத்தர்கள். புத்த சன்யாசிகளுக்கும், மடங்களுக்கும் பஞ்சமில்லை.
இங்கு, சூறாவளியுடன் கூடிய, மழை இயல்பானது. குளிர் காலத்துக்கான உணவு தேவையை சமாளிக்க, காய்கறிகளை உலர்த்தி சேமித்து வைக்கின்றனர்.
பூட்டானில் வினோத பழக்கம் ஒன்று உள்ளது. இந்த நாட்டில் யாராவது உணவு கொடுத்தால், உடனே வாங்கி சாப்பிடக் கூடாது; மூன்று முறை மறுத்த பின்பே, ஏற்க வேண்டும். அந்நாட்டு மக்கள் இதை பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர்; இந்த வழக்கத்தை, நாகரிகமாக கருதுகின்றனர்.
ஆசியாவில், மிக மகிழ்ச்சியான நாடுகளில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில், 84ம் இடத்தில் உள்ளது.
இந்த நாட்டில், கருப்பு கழுத்து நாரை என்ற பறவை இனம், அழியும் நிலையில் உள்ளது. இதை வேட்டையாடினால், ஆயுள் தண்டனை நிச்சயம்.
நீண்ட வால் குரங்கு, பனி சிறுத்தை, புனுகு மான், இமாலயன் சாம்பல் கரடி, புலி, மலை ஆடு மற்றும் நீல செம்மறியாடு என, பல உயிரினங்கள் பூட்டானில் மகிழ்ச்சியாக வாழ்கின்றன.
பரப்பளவு: 38ஆயிரதது, 394 சதுர கி.மீ.,
மக்கள் தொகை: 8 லட்சம்
தலைநகரம்: திம்பு
ஆண்டு மழையளவு: 140 செ.மீ.,
பணம்: நுகல்ட் ரம், இந்திய ரூபாய்
- திலிப்
