PUBLISHED ON : ஆக 02, 2019

அரசர் சற்குணபாண்டியன், கடவுள் மீது பற்று கொண்டவர். கடவுளுக்காக, ஏராளமாக பணம் செலவு செய்தார். கோவில்கள் கட்ட வாரி வழங்கியதால், பக்தர்கள் போற்றினர். கடவுளும், அவர் மீது, கடைக்கண் பார்வை வைத்தார்.
பட்டு ஜமுக்காளம் ஒன்றை கொடுத்தார் கடவுள். அதை பயன்படுத்தி, வானத்தில் பறக்கலாம்; அதில் அமர்ந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்!
அதில் ஏறி, உலகம் முழுவதையும், சுற்றி பார்த்து திரும்பிய அரசர் மனதில், கர்வம் உண்டாயிற்று.
'என்னை விட உயர்ந்தவர், இப்பூவுலகில் கிடையாது...' என்று, பார்ப்பவரிடம் எல்லாம் கூறினார்; நாளுக்கு நாள் அந்த கர்வம் அதிகமானது.
ஒரு நாள், வானத்தில் பறந்து கொண்டிருந்தார் அரசர். அப்போது, புற்றில் இருந்த எறும்புகள் பேசுவது, அவரது காதில் விழுந்தது. அப்படியே ஆகாயத்தில் நின்று, எறும்புகளின் பேச்சை கவனித்தார்.
'அரசர் போகிறார்; அவரைப் பாக்காமல் ஒளிந்து கொள்ளுங்க...' என்றது ராணி எறும்பு.
'இதோ... பதுங்கிக் கொள்கிறோம்...' என்றன மற்ற எறும்புகள்.
கோபம் அடைந்த அரசர், 'ராணி எறும்பே... எதற்காக, ஒளிந்து கொள்ளச் சொல்கிறாய்...' என்று கர்ஜித்தார்.
கிடுகிடுத்து போன ராணி எறும்பு, 'தங்களை பார்த்து, அகந்தையைக் கற்றுக் கொள்ள கூடாது அல்லவா...' என்று, பதில் கூறியது.
ஆத்திரம் அடைந்த அரசர், 'உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன்...' என்றார்.
'சரி கேளும்! இங்கிருந்து என்னால் கத்திப் பேச முடியவில்லை; அதனால், என்னை, கையில் துாக்கி வைத்துக் கொள்ளும்; பதில் சொல்கிறேன்...' என்றது ராணி எறும்பு.
அதன்படி, ராணி ஏறும்பை துாக்கி, 'என்னை விட, உயர்ந்தவர்களை பார்த்திருக்கிறாயா...' என்றார் அரசர்.
'பார்த்திருக்கிறேன்...'
'எங்கே பார்த்திருக்கிறாய், யார் அது...'
'வேறு யாருமல்ல... நான் தான்; என்னைக் கையில் தாங்கி நிற்கிறாரே அரசர்... அவரை விட, உயர்ந்தவன் நான் தானே...' என்று நிதானமாக கூறியது ராணி எறும்பு.
வெட்கி தலைகுனிந்தார் அரசர். அன்றே கர்வத்தை விட்டொழித்தார்.
டியர் புஜ்ஜீஸ்... எப்போதும் மற்றவர்களை உயர்ந்தவராக கருதுங்கள்; அப்போது தான் மனதில் கர்வம் வராது. வாழ்வில் உயரலாம்.
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
