PUBLISHED ON : செப் 17, 2022

கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுக்கு அடுத்து, குத்துச்சண்டைக்கு உலகில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். குத்துச் சண்டையில் பலர் சாதித்திருந்தாலும், எவராலும், எக்காலத்திலும் விஞ்ச முடியாத வகையில் உச்சத்தில் இருப்பவர், முகம்மது அலி.
அமெரிக்கா, கென்டக்சி மாநிலத்தில் உள்ளது லுாயிஸ்வில். கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் சிறுநகரம். அங்கு செல்வாக்குடன் வாழ்ந்தவர், கேசியஸ் மார்செலஸ் கினே. விளம்பர பலகை எழுதுவதில் திறமை பெற்றவர். இவரது மனைவி ஒடி சாகிரேடிகிளே. இத்தம்பதியருக்கு, ஜன., 17, 1942ல் பிறந்தார் கேசியஸ். பின்னர், முகமது அலி என அழைக்கப்பட்டார். பிறந்த எட்டு மாதத்தில் குழந்தையை அன்புடன் துாக்கி கொஞ்சினார் தாய். அவர் வாயில் குத்து விட, ஒரு பல் உடைந்தது.
சிறுவர்களோடு குஸ்தி போட்டு விளையாடும் கேசியஸ், 'என்னை யாராலும் வெல்ல முடியாது...' என்று உற்சாக குரல் கொடுப்பார். குத்துச்சண்டை போட்டிகளை ஆர்வமாக கவனிப்பார். சக மாணவர்களிடம் அது பற்றி பேசியபடியே சண்டை போடுவார். பெற்றோர் அனுமதியுடன், அமெரிக்கா, கொலம்பியாவில், ஜிம்னாசியம் என்ற குத்துச்சண்டை பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார் கேசியஸ். துாங்கும் நேரம் தவிர, தீவிர பயிற்சிகள் செய்தார். முதல் குத்துச்சண்டை போட்டியில் உடன் மோதியவரை, நான்காவது சுற்றில் வீழ்த்தினார். அந்த வெற்றி பெரும் உற்சாகம் கொடுத்தது. தொடர்ந்து போட்டிகளில் வென்று குத்துச்சண்டை உலகில் அறிமுகமானார்.
தேசிய கோல்டன் கிளவ்ஸ் விருதை, 1960ல் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உறுதி எடுத்தார். அதற்கான சோதனை போட்டியில் வென்று தேர்வானார். ஐரோப்பிய நாடான இத்தாலி, ரோம் நகரில் பிளாசோ டெல்லோ விளையாட்டு அரங்கில் நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். ஐரோப்பிய நாடான பெல்ஜியம் வீரர் யுவான் பிகாசுடன் மோதி, இரண்டாம் சுற்றிலேயே வீழ்த்தினார்.
குத்துச்சண்டையில் அனுபவம் மிக்க ரஷ்ய வீரர் ஜெனாடி லி.ஷட்காவை எளிதாக வென்றார். சர்வதேச அளவில் புகழ் பெற்றிருந்த வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தியதால் அவரது வாழ்வில் திருப்பங்கள் ஏற்பட்டன. தொழில்முறை குத்துச்சண்டை வீரராக, ஒவ்வொரு போட்டியிலும், 'உலக சாம்பியன்' பட்டம் பெறுவதே உச்ச லட்சியமாக கொண்டிருந்தார். குத்துசண்டையில் முதன்முதலில் உலக சாம்பியன் பட்டத்தை, 22ம் வயதில் பெற்றார். கடும் உழைப்பே இதை பெற உதவியது. தொடர்ந்து, 16 மாதங்களில், எட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடினார்.
உலக சாம்பியன் பட்டத்தை அவரிடமிருந்து எவராலும் பறிக்க இயலவில்லை. இஸ்லாம் மதத்தை தழுவியதால், பெயரை முகமது அலி என மாற்றிக்கொண்டார். ஆசிய நாடான வியட்நாமுடன், 1967ல் போர் பிரகடனம் செய்தது அமெரிக்கா. அந்த போரில் பங்கேற்க, இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்தது அமெரிக்கா. பிரபல விளையாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. குத்து சண்டையில் பிரபலமாக விளங்கிய முகமதுஅலியையும் போர்க்களத்துக்கு அழைத்தது அமெரிக்க அரசு. அதற்கு மறுத்துவிட்டார். இதையடுத்து, அவரது குத்துச்சண்டை உரிமத்தை ரத்து செய்தது அரசு.
உலக சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் முகமது அலி. அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கியது. தொடர்ந்து, பல நாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். உலகில் தன்னிகரற்ற சாம்பியனாக விளங்கினார். சென்னையில், 1980ல் நடந்த போட்டி ஒன்றிலும் கலந்து கொண்டார். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மேடையில் அவரது கரங்களை பிடித்து உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தன் சுயசரிதையை, 'தி கிரேட்டஸ்ட் - மை ஓன் ஸ்டோரி' என்ற தலைப்பில் எழுதினார். அது உலக அளவில் பரபரப்பாக விற்பனையாகிறது. இந்த நுாற்றாண்டின் சிறந்த குத்துச்சண்டை வீரர் என்ற பட்டத்தை, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, பி.பி.சி., நிறுவனம் வழங்கியது. அமைதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் துாதர் என்ற பதவியும், 2000ல் வழங்கப்பட்டது. குத்துசண்டையில் உலக புகழ் பெற்ற முகமது அலி ஜூன் 3, 2016ல் தன், 74ம் வயதில் மரணம் அடைந்தார்.
