தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடல் கன்னி நகரம்! (6)

கடல் கன்னி நகரம்! (6)

கடல் கன்னி நகரம்! (6)


PUBLISHED ON : செப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: கிராமத்து கிணற்றில் நீச்சல் கற்றுக்கொண்டான் சிறுவன் மிகிரன். பக்கத்து ஊரில் பெரிய ஏரியில் நடந்த போட்டியில் பங்கேற்க அழைப்பு வந்தது. நம்பிக்கையுடன் அதில் பங்கேற்றான். இனி -



சிறிய கிணற்றுக்குள் நீந்தியவனுக்கு, கடல் போல், பிரமாண்டமான குளத்தில் நீந்துவது பிரமிப்பை தந்தது.அங்கு, உள்ளூர் சிறுவர்களுடன் போட்டி; இங்கு, ஆறேழு மாவட்டங்களை சேர்ந்த முரட்டு இளைஞர்களுடன் போட்டி. கிணற்று நீர் ஜில்லிப்பாய் தித்தித்தது; குளத்து நீரோ, துவர்த்து கசந்தது; கூடவே, மூளையில், ஒருவித தாழ்வு மனப்பான்மை கூடாரமிட்டது; மேலும், கை, கால்கள் முழுமையாக செயல்பட மறுத்தன.

நீச்சல் போட்டி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன், 'வாலு டிவி' கணேசன் நெஞ்சோடு கட்டியணைத்து, ''மிகிரா... நீ, நீந்துமிடம் கிணறு, ஆறு, வாய்க்கால், குளம் மற்றும் கடலாக கூட இருக்கலாம். நீர், எல்லா நிலைகளுக்கும் பொது. ஒரு சிறு பறவை வானத்தில் பறக்கும் போது, முழு வானமும், அப்பறவைக்கு சொந்தம்... ''அதை போல், எங்கு நீந்தினாலும், அந்த நீர் நிலை உனக்கு அடிமை. நீ, நீந்துவதற்கென்றே பிறந்தவன்; கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் இறைவன் அருள் இருந்தால், கோடி பேரிலும் வெற்றி பெறுவாய். இன்றைய நீச்சல் போட்டியின் கதாநாயகன் நீ தான்... ஜமாய்டா...'' என காதில் ஓதினார்.

அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினான் மிகிரன்.கணேசனின் அறிவுரை புதிய உத்வேகத்தை தந்தது. தாழ்வு மனப்பான்மை தலைதெறிக்க ஓடியது.நீச்சல் வீரர்களில், 18ம் இடத்தில் இருந்த மிகிரன், துப்பாக்கியிலிருந்து வெடித்த தோட்டாவை போல், பாய்ந்து, 10ம் இடத்தை அடைந்தான்.

போட்டியின், இறுதி இலக்கில், புகழும், சுபிட்சமும் கை நீட்டி வரவேற்றன. உற்சாகம் ஊட்டும் வகையில், ஒரு சில பாடல்களை முணுமுணுத்தான் மிகிரன்.

''மிகிரா... சீக்கிரம்... விரைந்து வா... வெற்றி உனக்கே...'' என எதிர் கரையில் நின்று ஊக்கப்படுத்தினார் கணேசன்.

கூடவே, கணேசனிடம் நீச்சல் பயிற்சி பெறும் நண்பர்களும் கை தட்டி ஆரவாரித்தனர்; 10ம் இடத்தில் இருந்து, முதல் இடத்தை அடைந்தான். வெற்றி இலக்கை அடைய கூடிய துாரம், கால் பங்காக இருந்தது.

இதற்கிடையில் -'டேய்... சுண்டைக்காய்... அரை டிக்கெட்... உன்னை, நசுக்கி பிழிஞ்சு, இந்த குளத்திலேயே, ஜல சமாதி ஆக்கிடுவோம்...' என, உடன் பயணித்த நீச்சல் வீரர்கள் மிரட்டினர்.

அதை புறந்தள்ளினான் மிகிரன்.

நீச்சல் வீரர்களில் ஒருவன், மிகிரனை தாக்கினான்; அவனிடமிருந்து விலகி, தற்காத்தவாறு, படகில் கண்காணித்து வருபவர்களிடம், ''இந்த வீரர் என்னை அடிக்கிறார்...'' என்றான்.

''சக போட்டியாளரை தாக்கிய வீரர் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறார்...'' என, ஒலி பெருக்கியில் அறிவித்தனர்.

மிகிரனை உதைத்தவன் போட்டியில் இருந்து விலக்கப்பட்டான். அருகில், மூன்றாம் இடத்தில் நீந்திய வீரர், திடீரென சுணங்கி மிதந்தார். வாயில் இருந்து நுரை பொங்கியது; கண்கள் ஏகாந்தத்தில் நட்டிருந்தன; வாய் ஒரு பக்கம் கோணியது.

நீருக்குள் மூழ்கி, இறக்கும் தருவாயை அடைந்தார்; வேகமாக அவ்வீரரை இழுத்து, கண்காணிப்பு படகு நோக்கி நீந்தினான்.

''ஐயா... இவருக்கு முதலுதவி செய்யுங்கள்...'' என்றான் மிகிரன்.

''தம்பி... நாங்கள், இந்த வீரரை துாக்கிச் செல்ல மாட்டோமா... முதலிடத்தை தவற விட்டு, தற்போது, 10ம் இடத்தில் பின்தங்கியுள்ளாய்... மின்னலாய் நீந்தி, வெற்றி இலக்கை அடைவாயாக...'' என்றார் படகில் இருந்த கண்காணிப்பாளர்.

பின்தங்கிய ரேஸ் கார் திடீரென, 150 கி.மீ., வேகத்தில் பாய்வது போல், நீச்சல் போட்டியில் நீந்தினான்.

இப்படி ஒரு அசுர நீச்சலை, கிராம மக்கள் இதுவரை கண்டதில்லை; மிகிரனை உற்சாகமூட்டும் வகையில் கை தட்டி ஆரவாரித்தனர்.

உடன் பயணித்த வீரர்களை, எட்டு கால் பாய்ச்சலில் முந்தினான் மிகிரன். சக போட்டியாளர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டனர்; தலைதெறிக்க ஓடி வந்தார் கணேசன்.

''மிகிரா... வெற்றி இலக்கை அடையும் போது, அடுத்து வருபவன், 30 அடி துாரத்தில் பின் தங்கி இருக்க வேண்டும்...'' அவர் கூறியது போல், இலக்கை தொட்டான் மிகிரன்; வாயிலிருந்து நீரை, 'பொளிச்...' என, துப்பி, இரு கைகளையும், வானம் நோக்கி உயர்த்தினான்.

''இந்த வெற்றியை மாஸ்டர் கணேசனின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்...'' என்றான் மிகிரன்.

'சிறுவனே... இந்த மந்திர சாவியை வைத்து, எங்கள் உலகிற்கான கதவை திறப்பாயாக...' என, கிசு கிசுத்தன ரோஸ் நிற உதடுகள்.

- தொடரும்...

ஆர்னிகா நாசர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us