தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/என் சகோதரன்!

என் சகோதரன்!

என் சகோதரன்!


PUBLISHED ON : ஜூன் 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரபு நாட்டில் அறிவு நிறைந்த அமைச்சர் ஒருவர் இருந்தார்.

இளைஞன் ஒருவன் அவ்வப்போது அரசவைக்கு வருவான். அரசரிடம் உரிமையுடன் பணம் கேட்பான். அவன் கேட்ட தொகையை அரசரும் கொடுத்து அனுப்புவார்.

இப்படியே பலமுறை நடந்தது.

அன்றும் அரசவைக்கு வந்தான் அவன்.

''அரசே! எனக்கு நூறு பொற்காசுகள் வேண்டும்,'' என்று அதிகாரத்துடன் கேட்டான்.

அங்கிருந்த அமைச்சர் இதைக் கேட்டு எரிச்சல் அடைந்தார்.

''அரசே யார் இவன்? அடிக்கடி உங்களிடம் பணம் வாங்கிச் செல்கிறான். நீங்களும் கணக்கு இல்லாமல் தருகிறீர்,'' என்று கேட்டார்.

''அமைச்சரே! நானும் இவனும் குழந்தைகளாக இருந்தோம். அப்போது இவன் தாய் அரண்மனையில் பணிப்பெண்ணாக இருந்தாள். என் தாய் நான் பிறந்த சில தினங்களிலே இறந்து விட்டார். இவன் தாய்தான் என்னிடம் அன்பு காட்டினாள். அவள் பாலைக் குடித்து நானும், இவனும் வளர்ந்தோம்.

''இவனும் என் சகோதரன் மாதிரி தான். இவனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறான். இவன் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டேன்,'' என்றார் அரசர்.

தனக்கு எதிராக அமைச்சர் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவரைப் பழி வாங்க நினைத்தான் .

''அரசே! நீ நன்றாகப் படித்து உள்ளாய். உன்னைச் சூழ்ந்து அறிவு நிறைந்தவர்கள் உள்ளனர். அதனால் நீ பெருமையுடனும், புகழுடனும் விளங்குகிறாய். அறிவு உள்ளவர் என்னுடன் இருந்தால் நானும் உன்னைப் போலப் பெருமை பெறுவேன். உன் அமைச்சரை என்னுடன் அனுப்பி வை,'' என்றான் அந்த இளைஞன்.

இதைக் கேட்ட அரசர் தயக்கத்துடன் அமைச்சரைப் பார்த்தார்.

தன்னை அவனுடன் அனுப்பப் போகிறார் என்பது அமைச்சருக்குப் புரிந்தது.

''அரசே! உங்களுடன் பால் குடித்த சகோதரருக்கு உதவி செய்ய நினைக்கிறீர். ஆனால், நான் உங்களுடன் இருக்க விரும்புகிறேன். இருவர் விருப்பமும் நிறைவேற வழி உள்ளது,'' என்றார் அமைச்சர்.

''என்ன வழி? சொல்லும்,'' என்று ஆர்வத்துடன் கேட்டார் அரசர்.

''அரசே! இவனைப் போலவே என்னுடன் பால் குடித்து வளர்ந்த சகோதரன் இருக்கிறான். எனக்குப் பதில் அவனை இவருடன் அனுப்பி வையுங்கள்,'' என்றார் அவர்.

''அமைச்சரே! உம்மைப் பிரிய எனக்கும் விருப்பம் இல்லை. நாளை இங்கே உம் சகோதரனை அழைத்து வாரும். உம் சகோதரனை இவனுடன் அனுப்பி வைக்கிறேன்,'' என்றார் அரசர்.

மறுநாள் அரசவை கூடியது.

எருமை மாடு ஒன்றை இழுத்துக் கொண்டு அங்கே வந்தார் அமைச்சர்.

''அமைச்சரே! உம் சகோதரனை அழைத்து வருவதாகச் சொன்னீர். எருமை மாட்டை இழுத்து வருகிறீரே,'' என்று கேட்டார் அரசர்.

''அரசே! இந்த எருமை மாடுதான் என் சகோதரன்,'' என்றார் அமைச்சர்.

இதைக் கேட்டு எல்லாரும் சிரித்தனர்.

அரசராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

''அரசே! ஏன் சிரிக்கிறீர்? இந்த எருமை மாடு என் சகோதரனாக இருக்க முடியாதா?

''அப்போது நான் குழந்தை. இந்த எருமை மாடு கன்றாக இருந்தது. இதன் தாயின் பாலைக் குடித்து நானும், இதுவும் வளர்ந்தோம். ஒரே தாயின் பாலைக் குடித்து வளர்ந்ததால் நாங்கள் இருவரும் சகோதரர்கள் ஆனோம். எனக்குப் பதில் இந்த எருமையை உங்கள் சகோதரனுடன் அனுப்பி வையுங்கள்,'' என்றார் அமைச்சர்.

அறிவு உடையவரைச் சீண்டியதால், அவமானப்பட நேர்ந்ததே என்று தலை கவிழ்ந்தான் அந்த இளைஞன்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us