தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விஞ்ஞானி (12)

விஞ்ஞானி (12)

விஞ்ஞானி (12)


PUBLISHED ON : ஜூன் 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஞ்ஞானச் சாதனைகளையெல்லாம் அதற் கென்றே ஆராய்ச்சி செய்து அரும்பாடுபட்ட விஞ்ஞானிகள் மட்டுமே சாதித்தனர் என்று சொல்லிவிடுவதற்கில்லை. சில நேரங்களில் பாமர மக்களும் சாதனை படைத்திருக் கின்றனர் என்பதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன.

மின்விளக்கு கண்டுபிடிக்கப்படாத காலத்தில் எண்ணெய் விளக்குகள் தாம் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர், ஒரு காலத்தில் நிலக்கரி ஆவியால் எரியக் கூடிய விளக்கு கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது. நிலக்கரி வாயு விளக்குகள் எண்ணெய் விளக்குகளை விடப் பன்மடங்கு பிரகாசமாக இருந்த தால் உலகம் முழுவதும் அதையே பயன்படுத்தத் தொடங்கினர்.

இந்த நிலக்கரி வாயுவைக் கண்டுபிடித்தவர் ஒரு விஞ்ஞானி வித்தகரல்லர். மாதா கோவிலில் தொழுகைப் பணிக்குத் தலைமை தாங்கும் ஒரு பாதிரியார்தான்! அவரது பெயர் ஜே.கிளைடன். அவர் ஒரு ஆங்கிலேயர். ஆவி விளக்கை அவர் கண்டுபிடித்தது ஒரு தற்செயலான நிகழ்ச்சியாகும்.

நிலக்கரிச் சுரங்கங்கள் நிறைந்த பகுதியில் வாழ்ந்து வந்த அந்தப் பாதிரியார், சுரங்க வெடிப்புகளிலிருந்து ஆவி வெளிப்படு வதைப் பல முறை பார்த்திருந்தார். அந்த ஆவி எவ்வாறு உண்டாகிறது? என்ற ஒரு கேள்வி அவர் மனதில் உதித்தது. அதைக் கண்டுபிடிக்க விரும்பினர்.

சுரங்கப் பகுதியிலிருந்து சில நிலக்கரித் துண்டுகளைச் சேகரித்துக் கொண்டு தன் அறைக்குத் திரும்பிய பாதிரியார் கிளைடன், ஒரு கண்ணாடிக் குழாயை எடுத்து, அதில் ஒரு நிலக்கரித் துண்டைப் போட்டு அதைக் கொளுத்தினார். அப்போது அந்தக் குழாயிலிருந்து ஆவி வெளியேறியது.

வெளியேறிய அந்த ஆவியின் பக்கத்தில் கிளைடன் தற்செயலாக நெருப்புக் குச்சியைக் கொளுத்திக் காட்டினார். உடனே அந்த ஆவி எரியத் தொடங்கியது. அந்த ஒளியின் பிரகாசத்தில் அவரது அறை முழுவதும் தெளிவாகத் தெரிந்தது.

அதைக் கண்டு வியப்புற்ற பாதிரியார் கிளைடன் பின்னர் பலநாள் சிரமப்பட்டு, பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்து நிலக்கரி வாயுவால் எரியக் கூடிய விளக்கு ஒன்றை உருவாக்கினார். அந்த விளக்கு எண்ணெய் விளக்கை விடப் பிரகாசமாக எரிந்தது; புகையும் வெளியாகவில்லை.

அதன் பின்னர் பல வணிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு நிலக்கரி வாயு விளக்குகளைத் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். அந்த விளக்கு பொது மக்களாலும், தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. நாளடைவில் உலகம் முழுவதிலும் அந்த விளக்கு பிரபலமடைந்து விட்டது.

மின் விளக்கு தாமஸ் ஆல்வா எடிசனால் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வரும் வரை பாதிரியார் கிளைடன் கண்டுபிடித்த நிலக்கரி வாயு விளக்குதான் உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. மின் விளக்கு வந்த பின்னரும் கூட பல நாடுகளில் நிலக்கரி ஆவி விளக்கு பயன் படுத்தப்பட்டு வந்தது.

பாதிரியார் கிளைடன் 'உலகுக்கு ஒளி தந்த பாதிரியார்' என்று புகழப்பட்டார். சுரங்கத்தில் நிலக்கரிப் பாளங்களுக்கிடையே இருந்து ஆவி எப்படி வெளியே வருகிறது என்று அவர் மட்டும் சிந்தித்திருக்காவிட்டால், அவர் நிலக்கரி வாயு விளக்கைக் கண்டு பிடித்திருக்கவே முடியாது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us