
செங்கல்பட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1977ல், 9ம் வகுப்பு படித்த போது நடைபெற்ற சம்பவம்... என் வாழ்வில், திருப்புமுனையாக அமைந்தது. எங்கள் தமிழாசிரியர், திருமலைச்சாமி, என் மீது, மிகுந்த அன்புடையவர்.
ஒருநாள், என்னை அழைத்து, 'மதுராந்தகத்தில் ஒரு கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. அதற்கான கவிதை தேர்வு நடைபெற உள்ளது. 'பாரதி' என்ற தலைப்பில், கவிதை எழுது...' என்றார்.
அக்காலத்தில், செங்கல்பட்டிலிருந்து, மதுராந்தகம் செல்வது என்பது தற்காலத்தில், சிங்கப்பூர் செல்வது போன்ற விஷயம். எனவே, எட்டு வரியில் பாரதியை பற்றி, நானே கவிதை எழுதி, வாசித்தேன். என்னோடு வேறு சில மாணவர்களும் பங்கேற்றனர்.
தமிழாசிரியரே என்னை அழைத்து, கவிதை எழுத கூறியதால், என் கவிதை தான் தேர்வு பெறும் என்று மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தேன். ஆனால், வேறு ஒரு மாணவனின் கவிதை தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தமிழாசிரியர், திருமலைச்சாமி எழுதி தந்த கவிதையை வாசித்து தான், அந்த மாணவன் கவிதை தேர்வில் வெற்றி பெற்று, மதுராந்தகம் சென்றான் என்ற விஷயம், சில நாட்களுக்கு பின் தெரிய வந்தது. இந்நிகழ்ச்சி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது என்றாலும், இந்த சம்பவமே பிற்காலத்தில் என்னை எழுத தூண்டி, வெற்றிகரமான எழுத்தாளனாக்கியது.
தற்போது, 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெற்றிகரமான எழுத்தாளராக இருக்கிறேன். என் எழுத்தார்வத்திற்கு, முதல் விதை போட்டு என் வெற்றிக்கு காரணமாக அமைந்தவர், என் தமிழாசிரியர் என்றால் அது மிகையாகாது!
- ஆர்.வி.பதி, காஞ்சிபுரம்.