
காரியாபட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு... அதாவது, 1980ல் முதன் முதலில், 12ம் வகுப்பு தேர்வு எழுதும் எங்கள் அனைவரையும், தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, மிகுந்த அக்கறையுடன் எங்களை வழி நடத்தினார் தலைமையாசிரியர், எம்.பிலவேந்திரன்; மிகவும் கண்டிப்பானவர்.
வெளியூர் மாணவர்களை தவிர்த்து, உள்ளூர் மற்றும் விடுதி மாணவர்களை, இரவு, 7:00 மணிக்கு மேல் பள்ளிக்கு வரச் சொல்லி, 9:30 வரை கட்டாய இரவு பாடம் படிக்க வைப்பார். பின், பள்ளி வளாகத்திலேயே தூக்க சொல்லிவிட்டு, மீண்டும், காலை, 4:30 மணி முதல், 5:30 மணி வரை படிக்க சொல்வார்.
அப்படிப்பட்ட தருணத்தில் தான் நானும், என் நண்பன் மூன்று பேரும், அவ்வப்போது, இரவு பாடம் முடிந்து, செகண்ட் ஷோ படத்துக்கு செல்ல பழகி விட்டோம். இவ்விஷயம் எப்படியோ, தலைமை ஆசிரியருக்கு தெரிய வர, ஒருநாள் மாறு வேடத்தில், டிக்கட் கவுண்டரில், டிக்கட் கிழிக்கும் நபர் போல் வந்து, எங்களை கையும் களவுமாக பிடித்து விட்டார்.
அன்று, சிவாஜி கணேசன் நடித்த, பைலட் பிரேம்நாத் படம் ஓடி கொண்டிருந்தது. அதற்கு முந்தய வாரம், ஜஸ்டிஸ் கோபிநாத் படத்திற்கு வந்ததையும் கவனித்திருக்கிறார்.
பிடிப்பட்ட நாங்கள், செய்வதறியாது, கைகட்டி தலைகுனிந்தோம். மிக கடுமையாக அவர் எங்களை திட்ட, வெட்கி தியேட்டரை விட்டு வெளியே வந்தோம்.
அன்றிலிருந்து, தியேட்டருக்கு போகும் பழக்கத்தை விட்டு விட்டு, படிக்க துவங்கினோம். அதன்பின், என்னை பார்க்கும் போதெல்லாம், 'என்ன பைலட் பிரேம் கவனமா படிக்கணும்' என்று வாஞ்சையுடன் கூறுவார் தலைமை ஆசிரியர்.
அப்படியொரு தலைமை ஆசிரியரை இப்போது நினைத்தாலும், பெருமிதப்படுவேன்; அதில் ஆனந்த கண்ணீரே வந்துவிடும்.
- க.சோணையா, விருதுநகர்.