
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியில் உள்ள, அரசு நடுநிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, தினமும், 6 கி.மீ., நடந்து சென்று படித்தேன்.
கடந்த, 1950ல் பள்ளி ஆண்டுவிழா நடந்தது. அவ்விழாவில், பல போட்டிகளில் கலந்து, வெற்றி பெற்ற, மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடைசியாக, 'மா.ஆண்டி, 8ம் வகுப்பு மாணவன் மேடைக்கு வரவும்' என்று அழைத்தார்.
நான் எந்த போட்டியிலும் பங்கெடுக்காததால், தவறுதலாக, என் பெயர் அழைக்கப்படுவதாக நினைத்து, மேடைக்கு செல்லாமல், உட்கார்ந்திருந்தேன். மறுபடியும், அழைக்கவும், என்னுடனிருந்த வகுப்பு மாணவர்கள், 'உன்னை தான் ஆசிரியர் அழைக்கிறார், போ...' என்று கிளப்பிவிட்டனர்.
தயக்கத்துடன் மேடை ஏறினேன். அறிவிப்பு செய்து கொண்டிருந்த ஆசிரியர், என் தோளில் கைபோட்டு, 'இந்த மாணவன், எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை என்றாலும், இந்த மூன்று ஆண்டுகளில், பள்ளிக்கு ஒருநாள் கூட தவறாது வருகை தந்த மாணவன் என்ற சிறப்பு பரிசை பெறுகிறார்...' என்று அறிவிக்க, அங்கு கூடியிருந்த கூட்டமே பலத்த கரவொலி எழுப்பியது.
பின் என்னை வாழ்த்தி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய, 'தூங்காதே தமிழா' என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினர். என் பள்ளி நாட்களில் முதன் முதலாக பெற்ற பரிசு இது என்பதால், எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
என் அப்பாவிற்கும், அளவு கடந்த பூரிப்பு. ஏனென்றால், அவர் தான், 'எந்த வித காரணத்தை கொண்டும், பள்ளிக்கு செல்ல தவற கூடாது' என்று கண்டிப்புடன் அறிவுறுத்தியவர்.
என்றும் மறக்க முடியாத இந்த நிகழ்வை, 80 வயதில், 'ஸ்கூல் கேம்பஸ்' வழியாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
- மா.ஆண்டி, உசிலம்பட்டி.