PUBLISHED ON : ஏப் 28, 2017

சென்றவாரம்: மகாராணியின் திட்டப்படி மைத்ரேயியிடம் பேசினான் சித்ரசேனன். அப்போது தான் அங்கு வந்தவளை போல் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டாள் மகாராணி தேவி. இனி -
''மைத்ரேயி! இவ்வளவு வெகுளியாகவா இருப்ப... அப்படியென்ன செய்துவிட்டனர். காலா காலத்தில், உனக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டியது அவர்களின் கடமை அல்லவா...
''ஹும்... திருமணம் செய்து வைத்து விட்டால், நீ உன் புருஷன் வீட்டிற்கு போய்விடுவாய்... அப்புறம் உன் இடத்தை நிரப்ப, உன்னை போன்ற ஒரு வேலைக்காரி அவர்களுக்கு கிடைப்பாளா...
''சரி போனது போகட்டும்... இனி, நீ தான் என் வருங்கால மருமகள். கூடியவிரைவில், அங்கிருந்து கிளப்பி இங்கே கொண்டு வந்து, என்னுடன் வைத்து விட போகிறேன்,'' என்றாள் மகாராணி தேவி.
''உங்கள் இருவருக்கும் இருக்கும் பாசத்தை பார்த்து, நெஞ்செல்லாம் நன்றியால் நனைந்து கொண்டிருக்கிறது. என் மேல் எத்தனை அக்கறை, பாசம்... என் ஆயுள் உள்ளவரை இனி உங்கள் இருவரின் காலடியில் தான் விழுந்து கிடப்பேன். திடீரென அங்கிருந்து என்னை கிளப்பி, உங்களுடன் அழைத்து வந்தால், வீண் பிரச்சனை தான் முளைக்கும்...
''நீங்கள் சொல்வதை போல், இத்தனை காலமும், அந்த நன்றி கெட்ட குடும்பத்திற்கு ஓடாய் உழைத்து விட்டேன். இன்னும் சிறிது நாட்கள்... துஷ்யந்தனின் மனைவி, இந்துஜா பிரசவிக்கும் வரை அங்கேயே இருந்துவிட்டு, பிரசவம் முடிந்த மறுநாள், நானே, உங்கள் இருப்பிடத்திற்கு ஓடோடி வந்து விடுகிறேன்,'' என்றாள் மைத்ரேயி.
''உன்னை தவிர வேறு யாராலும் இப்படி யோசனை சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு, ஒரு முறையேனும் இங்கு வந்து, சற்று நேரம் இருந்துவிட்டு தான் போக வேண்டும்... இது உன் வருங்கால மாமியாரின் அன்புக்கட்டளை!'' என்றாள் மகாராணி தேவி.
அங்கிருந்து விடைபெற்றாள் மைத்ரேயி.
அனைத்து விஷயங்களையும், மகாராஜா மற்றும் மந்திரியிடம் கூறினாள் மைத்ரேயி.
இதை கேட்டு, இருவரும் சற்று கலங்கி போயினர்.
'ஏன் இப்படி... எதற்காக மைத்ரேயியிடம் இப்படியொரு திடீர் அக்கறை. அம்மாவும், மகனுமாக சேர்ந்து, ஏதோ ஒரு மிகப் பெரிய சூழ்ச்சி வலை பின்னுகின்றனர். அதில், நம் மைத்ரேயியை பகடைக்காயாக்கி விடுவரோ...' என்று உள்ளூற பயந்து போயினர் மகாராஜாவும், மந்திரியும்.
அன்று அதிகாலையிலேயே, மைத்ரேயிக்கு அழைப்பு வந்தது. மந்திரியார் இன்னும் உறக்கம் கலைந்து எழுந்திருக்கவில்லை. கபிலனிடம் மட்டும் சொல்லி விட்டு புறப்பட்டாள் மைத்ரேயி.
''வாடி கண்ணம்மா! நீ இங்கு வந்தது, அந்த துரோகிகளுக்கு தெரியாதல்லவா?'' என்றார் மகாராணி தேவி.
''இல்லை மகாராணி... அவர்களுக்கு தெரியாமல் தான் வந்தேன்,'' என்றாள்.
''மைத்ரேயி... காட்டுமாடானின் உத்தரவின் படி, இன்றே பேசி முடிக்க வேண்டிய மிக அவசரமான விஷயம்... இன்னும், எட்டு நாட்களில் குழந்தை பிறந்து விடுமாம்!'' என்றாள் மகாராணி தேவி.
''அது எப்போது பிறந்தால் நமக்கென்ன... அதை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?'' என்றாள் மைத்ரேயி.
''விபரம் புரியாமல், நீயே இப்படி பேசினால், நான் என்ன செய்வதாம்,'' என்றாள் மகாராணி தேவி.
''அப்படியென்றால், சற்று விளக்கமாக கூறுங்கள்,'' என்றாள்.
''காட்டுமாடான் சாமி, என் கனவில் வந்து, 'உன் மகனுக்கு நான் அரச பதவி அளிக்கிறேன்... அதற்கு பதில், நீ எனக்கு அந்த இளம் சிசுவை கொடுக்க வேண்டும். இஷ்டமில்லை என்றால், உன் மகன் சித்ரசேனன், ஒரு நாளும் அரசனாக முடியாது. மைத்ரேயியும் மகாராணியாக முடியாது' என்றார்! என்ன இருந்தாலும், இந்நாட்டின் வருங்கால மகாராணி நீ... உன் சம்மதமின்றி அவனுக்கு, நான் என்ன பதில் சொல்வேன் கண்ணம்மா,'' என்றாள் தேவி.
இதை கேட்டு, உள்ளூற முற்றிலுமாக உடைந்து போனாள். ஆனாலும், அதை வெளிக்காட்டவில்லை.
''என்ன மகாராணி... இந்த சிறு விஷயத்திற்கு போய் இப்படி கலவரப்பட்டு போவீர்களா... இத்தனை எளிதாக முடித்து தருகிறேன் என்று சாமியே, உதவ முன் வந்திருப்பது, எத்தனை மகிழ்ச்சியான விஷயம். நான் உங்களின் மருமகள். நீங்கள் சொல்வதை செய்ய நான் தயார்...
''ஆனால், இதை பற்றி வேறு யாரிடமும் மூச்சுவிடாதீர்கள். அதிகாலையிலேயே வந்துவிட்டதால், என்னை தேடுவர். நான் மாலை வருகிறேன். கவலைப்படாமல் நிம்மதியாக இருங்கள். உங்கள் மகனிடமும் சொல்லி வையுங்கள். ஏதேனும் ஏடாகூடமாக செய்து விடப்போகிறார்,'' என்று கூறி விட்டு, சிட்டாக பறந்து விட்டாள் மைத்ரேயி.
அங்கே-
சோகம் கப்பிய முகத்தோடு, தன் முன் வந்து நிற்கும் மைத்ரேயியை கண்டு திடுக்கிட்டார் மந்திரி.
''இன்று அதிகாலையில் எனக்கு தேவியிடம் இருந்து அழைப்பு வந்தது,'' என்று ஆரம்பித்து, அங்கு நடந்த அனைத்தையும் மிக விவரமாக கூறினாள்.
''மைத்ரேயி... என்னிடம் இரண்டு ஓலை சுவடி கட்டுகளை கொடுத்தார் மாமுனி. மகாராஜாவிற்கு ஒன்று, எனக்கு ஒன்று. என் ஓலையை, தினமும் ஒருமுறை, அவரின் கட்டளைப்படி படிக்கிறேன். அதில், அன்றாட நடப்புகளைப் பற்றி மிக விபரமாக குறிப்பிட்டுள்ளார்...'' என்று சொல்லி, தனக்கு எழுதப்பட்டிருந்த ஓலை கட்டை பிரித்து படித்தார் மந்திரி ராஜேந்திரன்.
'வரும், 30ம் தேதி அன்று, முற்றிய இரவில் இளவரசன் தன் அம்மாவை விட்டு வெளி வந்ததும்... மறுகணமே, தான் பிறந்த வீட்டை ஒதுக்கிவிட்டு, சமஷ்டிப்பூரிலுள்ள காரை வீட்டில் தஞ்சம் புகுந்து, அந்த வீட்டை, மிக உரிமையுடன் தனதாக்கி விடுவார். இளவரசரின் இந்த இடமாற்றத்தை மிக அற்புதமாக நிறைவேற்றிவிடுவாள் மைத்ரேயி.
'மன்னருக்கு மிகவும் சோதனையான காலம் இது. இரண்டு மிகப் பெரிய சோகங்களை தாங்கவேண்டிய காலகட்டம். அதற்கு இறைவன் அருள் புரிவார். இளவரசனின் இடமாற்றத்தை பற்றி அவருக்கு தெரிவிக்கவே கூடாது; அதெற்கென்று நேரம் வரும். அப்போது தெரிவிக்கலாம்.
'இளவரசரை பற்றிய ரகசியம் ராஜேந்திரன், மைத்ரேயி, கபிலன், இம்புலி ஆகிய நால்வரை தவிர, வேறு யாருக்குமே தெரிய கூடாது; நன்றாக நினைவில் வைத்து கொள். மகாராஜாவும், சின்னியும் இதற்கு விதிவிலக்கல்ல... உண்மை வெளிப்பட்டு விட்டால் விபரீதமாகி விடும்...'
''மைத்ரேயி... நீ இப்போது சொன்ன விபரம், எனக்கு முன்பே தெரியும்... உன்னிடம் கூற வேண்டும் என்றே நினைத்தேன். அதற்குள் நீயே தெரிந்து கொண்டாய். எனக்கும், கபிலனுக்கும், இம்புலிக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். இன்று தான் உனக்கு தெரிகிறது. கவலைப்படாதே... உனக்கு பக்க பலமாக, நாங்கள் மூவரும் இருக்கிறோம். மாமுனி, பிரத்யங்கரா தேவியின் அளப்பற்ற ஆசி முழுவதும் உனக்கு எப்போதும் உண்டு!'' என்றார் மந்திரி.
''இப்போது, என் மனம் லேசாகி விட்டது. மகாராஜாவுக்கும், மகாராணிக்கும் உணவு எடுத்து செல்ல வேண்டும். மாலை சந்திப்போம். மன்னரை நினைத்தால் தான், மிகவும் கவலையாக இருக்கிறது. ஆயினும் என்ன செய்ய முடியும் மந்திரியாரே...'' என்று கூறி, அவரிடம் விடைபெற்று சென்றாள் மைத்ரேயி.
மறுநாள் அதிகாலை -
கனத்த இதயத்துடன் பொழுது புலர்ந்தது என்றே கூறலாம்.
'மந்திரியரே... தாங்க முடியவில்லை...' என்று கபிலனும், மைத்ரேயியும் வருத்தப்பட்டனர்.
''என் நிலைமையும் அது தானே... நாம் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல வேண்டியது தான்... எதிர்கொள்ளவிருக்கும் சோதனையை, திடமான மனதுடன், எதிர்த்து நின்று போராடி, நம் இலக்கை அடைந்து ஜெயக்கொடியை நாட்ட வேண்டும்.
''தெய்வத்தை இறுக்கி பிடித்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான மனோதிடத்தை அவர் அளிப்பார்; கவலைப்படாதீங்க... தப்பி தவறி கூட, மன்னரிடம் இது பற்றி ஒன்றையும் கூறிவிடாதீர்,'' என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, மகாராஜா உள்ளே வர, அனைவரும் எழுந்து அவருக்கு வணக்கம் கூறினர்.
''என்ன இது... இத்தனை அதிகாலையில் அப்படி என்ன தலைபோகிற யோசனை கூட்டம்... நானும் தெரிஞ்சிக்கலாமா?'' என்றார் மகாராஜா.
''இன்று இரவு, இளவரசர் பிறக்கப் போகிறார் அல்லவா... அவரை எப்படி வரவேற்பது; யார் முதலில் அவரை தூக்கி கொஞ்சுவது; அவருக்கு என்ன பெயர் வைப்பது என்று அனைவரும் யோசித்து கொண்டிருக்கிறோம் மகாராஜா!'' என்றாள் மைத்ரேயி.
''ஓ! அப்படியா... நேற்று மாலை, ராணியார் என்னிடம், குழந்தைக்கு, 'ப்ருத்திவி' என்ற பெயர் வைக்கலாம்'' என்றார்.
'உன் மூளையே மூளை... எத்தனை அழகான பெயர்... ப்ருத்திவி, என்றால் ஜெயதேவன்... அண்ட சராசரங்களையும் தன் வசமாக்கி கொள்பவன். உனக்கு தான் என்னவொரு பேராசை, உன் பிள்ளை அண்ட சராசரங்களையும் கைப்பற்ற வேண்டுமோ... இது உனக்கே நியாயமா... இந்துஜா நீ ஆசைப்படு. அதற்காக ஒரேயடியாக இப்படி பேராசைப்படாதே என்று கூறினேன். அவள் அப்படியே என் கரங்களை பற்றி, கண்களில் ஒற்றி கொண்டாள்' என்று, நேற்று மாலை நடந்த சம்பவத்தை நினைவு கூறினார் துஷ்யந்த் மகாராஜா.
'மகாராஜா... 'ப்ருத்திவி' என்ற பெயர் மிக அழகாக இருக்கிறது!' என்றனர் மூவரும்.
இரவு 12:00 மணி நெருங்கியது. மகாராணி இந்துஜாவிற்கு, வயிற்றில் லேசாக வலி வர துவங்கியது.
- தொடரும்...