PUBLISHED ON : செப் 28, 2018

ஒருமுறை, மூன்று சகோதரர்கள் வேலை தேடி, வெளியூருக்கு பயணமாயினர். பல இடங்களில், வேலை கேட்டனர்; கிடைக்கவில்லை; போதுமான உணவும், தண்ணீருமின்றி, ஒரு காட்டு வழியில் நடந்தனர்; அவர்களுக்கு எதிரில், நீண்ட, வெண் தாடியுடன், முதியவர் ஒருவர் வந்தார்.
''பிள்ளைகளே எங்கு செல்கிறீர்...''
'வேலை தேடி செல்கிறோம்...'
''உங்களுக்கு, நில, புலன்கள் எதுவும் இல்லையா...''
'நில புலன்கள் மட்டுமல்ல; பெற்றோரும் இல்லை; இறந்து விட்டனர். நல்ல எஜமானன் ஒருவரை தேடி செல்கிறோம்; யார் எங்களுக்கு வேலை கொடுக்கிறாரோ, அவரிடத்தில், நம்பிக்கையாகவும், விசுவாசமாகவும் நடந்துக் கொள்வோம்...' என்றனர்.
''நீங்கள் தேடி வந்திருக்கும் நபர் நான்தான்; என்னுடன் வாருங்கள்; உங்களுக்கு வேண்டிய அனைத்தையும், செய்கிறேன்...'' என்றார் முதியவர்.
அந்த, மூன்று சகோதரர்களும், அந்த முதியவரை பின் தொடர்ந்தனர்; ஒரு மலையில் ஏறினர்; மலையுச்சியில் இருந்த, சமவெளியில், நீரோடைகளுக்கு மத்தியில், புல்வெளிகள், பூத்துக் குலுங்கும் மலர்ச்செடிகள் இடையில், ஒரு மாடி வீடும், அதை சுற்றி நிலங்களும் இருந்தன.
அந்த மாடி வீட்டிலிருந்து, அழகான பெண் ஒருத்தி வெளிப்பட்டாள்; துாய பனி போன்ற, வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள்.
அவளை கண்டதும், மூத்தவன் மயங்கி நின்றான்.
''என் அன்பிற்குரிய மகனே... இந்த மங்கையை மணந்து, இந்த நிலங்களுக்கும், வீட்டிற்கும் சொந்தக்காரனாகி விடுகிறாயா...''
''மிக்க மகிழ்ச்சி ஐயா... உங்கள் உதவியை ஒருநாளும் மறக்க மாட்டேன்...''
அப்பெண்ணை திருமணம் செய்து வைத்து, அந்த வீடு, நிலங்களையும் அவனிடம் ஒப்படைத்தார்.
அவர் அவனை விட்டு பிரிவதற்கு முன், ''என் அன்பு மகனே... நான் சொல்வதைக் கேள்; தான, தர்மங்கள் செய்; நல்லவனாக வாழ்; மனித நேயம் என்பது, பிறருக்கு உதவுவதே...'' என்று சொல்லி புறப்பட்டார் முதியவர்.
மற்ற இரண்டு சகோதரர்களும், அவருடன் புறப்பட்டனர்.
காடுகள், மலைகள், நதிகளைக் கடந்து, மீண்டும், ஒரு நீண்டப் பயணத்தை மூவரும் மேற்கொண்டனர். பல நாட்களுக்கு பின், ஒரு சிறிய, அழகிய கிராமம் ஒன்றிற்கு வந்தனர்; அங்கு, செர்ரிப்பழ மரங்கள் நிறைந்து காணப்பட்டது; அதன் நடுவே, ஒரு வீடும், ஒரு மாவு மில்லும் இருந்தது.
அந்த வீட்டிலிருந்து, பூங்கொடி போன்ற, வசீகரமான பெண் ஒருத்தி வெளிப்பட்டாள்.
நீல நிற உடையில், தேவதை போல் காட்சியளித்தாள். முதியவர் இப்போது, இரண்டாவது சகோதரனை பார்த்தார்.
''இந்த பெண்ணும், பண்ணை வீடும், மாவு மில்லும் எனக்கு கிடைத்தால், மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்...'' என்றான், இரண்டாவது சகோதரன்.
அந்த பெண்ணை, அவனுக்கு திருமணம் செய்து, அந்த வீட்டையும், மாவு மில்லையும் அவனுக்கே கொடுத்தார் முதியவர்.
அவனை விட்டு பிரியும் போது, ''அன்பு மகனே... இந்த உலகில், மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது பெருமை தருவதல்ல, எப்படி வாழ்ந்தான் என்பது தான் பெருமை சேர்ப்பது; பிறரை நேசி, வறியவர்க்கு வாரி வழங்கு...'' என்று அறிவுரை கூறி, இளைய சகோதரனுடன் வேறு இடம் சென்றார்.
பல கிராமங்களையும், நகரங்களையும் கடந்து, பள்ளத்தாக்கிற்கு வந்தார்; அங்கே, ஒரு சிறிய குடிசை வீடு இருந்தது; அங்கிருந்து, சுமரான பெண் ஒருத்தி வெளிப்பட்டாள்.
''மகனே... இந்த பெண்ணையும், குடிசை வீட்டையும் ஏற்றுக் கொள்கிறாயா...''
''மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்...'' இளையவனுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இளையவனிடம், ''மனிதனை நேசி, அதுவே மகத்தான வேதம்...'' என்று கூறி, சென்றார் முதியவர்.
சில ஆண்டுகளுக்கு பின் -
அந்த மாயக்கிழவர், மாறு வேடமிட்டு, மூத்தவன் வீட்டிற்கு வந்தார்; அவன், பெரிய பணக்காரனாகி இருந்தான். வீடுகள், கால்நடைகள், நில புலன்கள் ஏராளமாக இருந்தன.
''ஐயா... தர்மப் புண்ணியவானே... இந்த ஏழைக்கு கொஞ்சம் உணவு கொடுங்களேன்...'' என்றார், முதியவர்.
''ஏய் கிழவா... பிச்சை கேட்காதே கேவலம்...''
''பசி தாங்கவில்லை; எஜமானே மயக்கமாய் வருகிறது...''
''உன்னைப் போன்றவர்களுக்கு பிச்சை போட்டா, நானும் பிச்சைக்காரனாகி விடுவேன்; போ... போ...'' என்று விரட்டினான்.
எவ்வளவு கெஞ்சியும், அவன் மனம் இரங்கவில்லை.
அவன் வீட்டை விட்டு, சிறிது துாரம் வந்த முதியவர், அவன் வீட்டை திரும்பி பார்த்தார்; வீடு, தீப்பற்றி எரிந்தது.
அடுத்து, அதே மாறு வேடத்தில், இரண்டாவது சகோதரன் வீட்டிற்கு வந்தார்.
அவனும், மிக வளமுடன் வாழ்ந்து வருவது தெரிந்தது.
''ஐயா... பசிக்கிது; உணவு தாருங்கள்; வயோதிகன்; என்னால் நடக்க முடியவில்லை...'' என்றார், முதியவர்.
''நாங்கள் யாருக்கும் பிச்சை போடுவதில்லை, போ... போ...'' என்றான், இரண்டாம் சகோதரன்.
''ஐயா... கையளவு மாவாது கொடுங்கள்...'' என்றபடி, உள்ளே செல்ல முயன்ற முதியவர், இரண்டாமவனால் பிடித்து தள்ளப்பட்டு, கீழே உருண்டார்; எழுந்து, சிறிது துாரம் நடந்து வந்த அவர், இரண்டாவது மகனின் வீட்டை ஏறிட்டுப் பார்த்தார்; வீடு தீப்பற்றி எரிந்தது.
இப்போது, மூன்றவாது சகோதரனின் வீட்டிற்கு வந்தார் முதியவர்.
அவன், வீடும், நிலங்களும், முன்பை போலவே இருந்தன; எவ்வித முன்னேற்றமும் இல்லை; முதியவர் வந்த சமயம், வெளியில் மழை துாறிக் கொண்டிருந்தது.
''ஐயா... பசியாகவும், தாகமாகவும் இருக்கிறது; கருணை கூர்ந்து உணவு அளியுங்கள்...'' என்று, வெளியில் நின்று, குரல் கொடுத்தார் முதியவர்.
உள்ளிருந்து, வந்த இளைய மகன், ''ஐயன்மீர்... உள்ளே வாருங்கள்; ஏன் மழையில் நனைகிறீர்...'' என்றவாறே, ஓடோடி வந்து முதியவரை, தன் குடிசைக்குள் அழைத்து சென்றான். ஈரமான ஆடைகளை களைந்து, வேறு ஆடைகளை கொடுத்து, உடுத்த செய்தான். பக்குவமாக சமைத்து, இரவில் உண்ணக் கொடுத்தான்.
முதியவரின் நெஞ்சில் பெரிய புண் இருப்பதைக் கண்டு, ''ஐயா... இது என்ன மிகப் பெரிய புண், மருந்திடவில்லையா...'' என கேட்டான்.
''அதை ஏன் கேட்கிறாய் மகனே... நான் போடாத மருந்தில்லை, பார்க்காத வைத்தியமில்லை; புண் மட்டும் ஆறவில்லையே...'' என்றார்.
''பின், இதற்கு என்ன தான் மருத்துவம்...'' என்றான், இளையவன்.
உடனே, அந்த முதியவர், மந்திரவாதி ஒருவர் சொன்னார், ''குடிசை ஒன்றை, அதிலடங்கிய பொருட்களை எடுக்காமல், அப்படியே எரித்து, அச்சாம்பலை எடுத்துக் கட்டினால், புண் ஆறி விடுமாம்; இல்லாவிட்டால் மரணம் தானாம்...'' என்றார்.
இளையமகன், தன் மனைவியைக் கூப்பிட்டு ஆலோசித்தான்; பின், இருவரும் பெரியவரிடம் வந்தனர்...
''ஐயா... நாங்கள் இருவரும் ஒரு முடிவிற்கு வந்து விட்டோம்; நாளைக்கு, இந்த குடிசையை எரித்து, அந்த சாம்பலை எடுத்து, உங்கள் புண்ணில் வைத்து கட்டப் போகிறோம்...'' என்றான்.
''வேண்டாம் மகனே... வீடு எரிந்து விட்டால், வேறு வீட்டிற்கு என்ன செய்வாய்...''
''வீடு எரிந்து விட்டால், வேறு வீடு கட்டிக் கொள்ளலாம்; உங்கள் உயிர் போய் விட்டால், திரும்ப வராதே...''
''உன் விருப்பம்...'' என்றார், முதியவர்.
இளையவன், காலையில் எழுந்ததும், குடிசைக்கு தீ வைத்தான்; குடிசை சாம்பலானது.
என்ன ஆச்சரியம்... குடிசையின் சாம்பலிலிருந்து, புதிய, அழகிய பெரிய வீடு எழுந்தது. வீட்டில், பொன்னும், பொருளும் குவிந்து கிடந்தன.
அந்த முதியவரை தேடினர்; அவர் மறைந்து விட்டார்.
சிறுவர்களே... வசதி, வாய்ப்புகள் வந்தவுடன், பழசை மறந்துவிட கூடாது; மனித நேயமும், தர்ம சிந்தனையும் இருந்ததால் தான், இளையவனுக்கு சிறப்பான வாழ்க்கை கிடைத்தது. நீங்களும் அப்படியே இருங்க...
