PUBLISHED ON : செப் 28, 2018

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, கதீட்ரல் உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
காலை, 9:00 மணிக்கு, வகுப்பிற்கு வர வேண்டும்; துாரத்தில் இருந்து வரும் மாணவர்கள், காலை சிற்றுண்டியை, பள்ளி இடைவேளையில் சாப்பிடுவர். தினமும், ஒருவர் சிற்றுண்டியை, யாரோ ஒரு மாணவன் எடுத்துச் சாப்பிட்டு விடுவான். அவனை கண்டுபிடிக்க, ஜெகநாதன் என்ற மாணவன், ஒரு யோசனை கூறினான்.
அதன்படி, 'பிரட்'ல சிவப்பு நிற, 'கிரீஸ்' தடவி, 'பேக்' செய்து, சாப்பாட்டு பையில் வைத்து விட்டு, இடைவேளையில், எல்லா மாணவர்களும் வகுப்பை விட்டு வெளியே வந்து விட்டோம்.
சீனிவாசன் என்ற மாணவன், அந்த பார்சலை எடுத்து, மறைவிடத்தில் வைத்து, அவசர அவசரமாக சாப்பிட்டு, வகுப்புக்கு வந்தவுடன், ஒரே வாந்தி எடுத்தான். உடனே, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை செய்தார் ஆசிரியர்.
'அவன், 'கிரீஸ்' சாப்பிட்டு இருக்கிறான்...' என்றார் மருத்துவர். அதை வாந்தியெடுக்க வைத்து, சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தார்.
வகுப்பு ஆசிரியர், ராஜாமணியிடம், உண்மையை கூறினோம். அவர், அந்த மாணவனுக்கு அறிவுரை கூறி, 'இனிமேல் இது போல் செய்யாதே...' என்றார்; என் வயது, 73. இப்போதும் அந்த சம்பவம், என் மனதில் நிழலாக பதிந்துள்ளது.
- சி.சந்திரபாலன், சென்னை.
தொடர்புக்கு: 99626 52261
