
நாகப்பட்டினம் மாவட்டம், மருங்கூர், அரசு நடுநிலைப் பள்ளியில், 1995ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவின் போது, சட்டையில் தேசியகொடியை பொருத்தி மிடுக்காக சென்றேன். என்னை பார்த்ததும், 'தேசியக் கொடியை சரியாக பொருத்தியிருக்கிறாயா...' என்று வினவினார், வகுப்பாசிரியர் ரமேஷ். தலையை சொறிந்த வண்ணம் நின்றேன்.
சட்டையில் தலை கீழாக பொருத்தியிருந்த கொடியை, சரி செய்தபடியே, 'எப்போதும் சரியாக பொருத்தி கொள்வதற்கு ஒரு யோசனை கூறுகிறேன்... நன்றாக கவனி. வீட்டில் விருந்தின் போது பயன்படுத்தும் வாழை இலை பச்சை நிறமாக இருக்கும். அதில் பரிமாறப்படும் சாதம் வெள்ளை நிறமாக இருக்கும்...
'அதன் மீது ஊற்றப்படும் குழம்பு காவி நிறமாக இருக்கும். அதன்படி வரிசையாக மனதில் பதித்துக் கொள்... கீழ்ப்பகுதி பச்சை, நடுப்பகுதி வெண்மை, மேற்பகுதி காவி என்பதை நினைவில் கொள்...' என்றார் வகுப்பாசிரியர்.
மிகவும் நன்றியுடன், 'இனிமேல் மறக்க மாட்டேன்...' என்று உறுதி கூறினேன்.
எனக்கு, 38 வயதாகிறது; ஒவ்வொரு ஆண்டும், தேசியகொடி அணியும் போதும், அந்த நிகழ்வு நினைவில் வந்து செல்கிறது.
- பி.வைரவநாதன், செங்கல்பட்டு.
தொடர்புக்கு: 98849 38620

