
திருப்பூர் மாவட்டம், உடுமலை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1964ல், எஸ்.எஸ்.எல்.சி., இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றேன். அடுத்து, அரசு தொழில் நுட்ப கல்லுாரியில் சேர விரும்பினேன். அதற்கான விண்ணப்பத்துடன், பள்ளி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் உண்மை நகலை இணைக்க வேண்டியிருந்தது.
உடனடியாக, நகல் பெறும் நடைமுறை அப்போது இல்லை. சான்றிதழில் உள்ள விபரத்தை, தட்டச்சு செய்து நகல் எடுத்து, அரசு உயர் அதிகாரியிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெற வேண்டும்.
பொதுப்பணித்துறையில் வேலை செய்த என் தந்தை, இதற்காக உயர் அதிகாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். வழியில் மழை பெய்ததால் தட்டச்சு செய்த நகல் நனைந்து விட்டது. மிகவும் சிரமப்பட்டு மீண்டும் நகல் எடுத்து சமர்ப்பித்தேன். பச்சை மையில், 'உண்மை நகல்' என குறித்து கையெழுத்திட்டு அளித்தார் அதிகாரி. விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பினேன்.
கோவை, அரசு மகளிர் தொழில் நுட்ப கல்லுாரியில் இடம் கிடைத்தது. அப்போதே, 'பச்சை மையில் கையெழுத்திடும் அதிகாரியாக வேண்டும்' என சபதம் ஏற்று படித்தேன். தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வில் வென்று வேளாண் பல்கலைக்கழக பணியில் சேர்ந்தேன். பதவி உயர்வு பெற்று பச்சை மையில் கையெழுத்திடும் அதிகாரியாக, 25 ஆண்டுகள் பணி புரிந்தேன். என் சபதம் நிறைவேறியதில் மகிழ்ந்தேன்.
இப்போது, என் வயது, 73; வாழ்வில், 'முயற்சி திருவினையாக்கும்' என்ற பொன்மொழியை நிரூபித்த திருப்தியில் உள்ளேன்.
- ந.சரசுவதி, கோவை.
தொடர்புக்கு: 98434 95875

