தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நீசன்!

நீசன்!

நீசன்!


PUBLISHED ON : டிச 20, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 20, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காட்டில் காண்டாமிருகம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு ஒரு நண்பன் இருந்தது. அது ஓர் மரங்கொத்தி. காண்டாமிருகம் உணவு சாப்பிட்டு விட்டு வரும்போது, இந்த மரங்கொத்தி அவ்வப் போது வந்து பற்கள் இடையே சிக்கியுள்ள உணவுத் துணுக்குகளை அகற்றி விட்டுப் போகும். சில சமயங்களில் காதுகளில் உள்ள அழுக்கை எடுத்து, அதற்குப் பரம சுகத்தைக் கொடுக்கும்.

ஒருமுறை, அந்தக் காண்டாமிருகத்துக்கு காதில் ஏதோ அடைப்பு ஏற்பட்டது.

'எங்கே தொலைந்தது இந்த மரங்கொத்தி?' என்று தன் மனதுக்குள் திட்டிக் கொண்டது காண்டாமிருகம்.

ஆரம்பத்தில் காண்டா மிருகமும், மரங்கொத்தியும் நண்பர்களாகத்தான் பழகினர். ஆனால், போகப் போக மரங்கொத்தியை ஒரு வேலைக்காரனைப் போல நடத்த ஆரம்பித்தது காண்டாமிருகம். ஆனால், மரங்கொத்தி காண்டாமிருகத்திடம் கொண்ட பாசத்தின் காரணமாக, அதைப் பொருட்படுத்துவதில்லை.

'தனக்கு ஒரு மூத்த சகோதரன் இருந்தால் தான் அதற்கு இம்மாதிரி உதவிகளைச் செய்ய மாட்டோமோ' என்று எண்ணியது. எனவே, காண்டாமிருகம் கடுமையாக நடந்து கொண்டாலும் மரங்கொத்தி அன்புடனே பழகி வந்தது.

காதுக்குள்ளிருந்த அடைப்பு, 'கிண்'ணென்று இருந்ததால் அது பெரிதும் தவித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மரங்கொத்தி பறந்து வந்து ஒரு மரத்தின் மீது அமர்ந்தது.

அது தன் குஞ்சுகளுக்கு உணவை எடுத்துச் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த காண்டாமிருகம் கத்தியது.

''வரவர பெரியவர்கள் மேல் உனக்கு மரியாதை போய் விட்டது. தினந்தோறும் வந்துக் கிட்டிருந்த நீ நாலைந்து நாளாயிடுச்சு. வந்து எட்டிக் கூடப் பார்க்காமல் அப்படி என்ன வேலை?'' என்றது.

'பொறுங்கண்ணே! அவரவர் பிரச்னை அவரவர்களுக்கு. என் குஞ்சுகளுக்கு இரை கொடுக்க நான் ஒவ்வொரு மரமா, புழுப் பூச்சிகளைத் தேடிக்கிட்டு இருக்கேன். என் குஞ்சுகள் அறியாதவை இல்லையா. நான் தானே காப்பாற்ற வேண்டும். அந்த வேலையாத் தான் அலையறேன்!'' என்றது.

''நான் ரெண்டு நாளா அவஸ்தைப் படறேன். காதுக்குள் எதுவோ புகுந்துடுச்சு. என்னால எதையும் சரியா கேட்க முடியலை. நீ உடனே வந்து என் காதுகளைச் சுத்தப்படுத்து!''

மரங்கொத்திக்கு எரிச்சலா இருந்தது.

''பொறுங்க பொறுங்க, ஒங்க காதை நான் இப்போ நோண்டிக்கிட்டிருந்தா என் குஞ்சுகள் எல்லாம் பசியால செத்துப் போயிடும். போய் இரையை ஊட்டி விட்டுட்டு வர்றேன்!'' என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்று விட்டது மரங்கொத்தி.

நறநறவெனப் பற்களைக் கடித்தது காண்டாமிருகம்.

'இன்னிக்கு அது திரும்பி வந்து காதைச் சுத்தப்படுத்தி முடியட்டும். கொன்னுடறேன். என்னிடம் அது பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்காவிட்டால் நிச்சயம் அதுக்குச் சாவுதான்!' என்று கறுவிக் கொண்டது. இங்கு மங்கும் அலைந்தது. அப்போது அவ்வழியே நரி ஒன்று தென்பட்டது.

அது காண்டாமிருகத்தைப் பார்த்ததும், 'என்னா மாமா, சவுக்கியமா?' என்றது.

காண்டாமிருகம் எரிச்சல் அடைந்தது.

''அது ஒன்றுதான் குறைச்சல்?'' என்று ஆதங்கப்பட்டுக் கொண்டது. அதை அனுதாபத்துடன் விசாரித்தது நரி.

காண்டாமிருகம், மரங்கொத்திப் பறவையைப் பற்றிக் கூறியது.

''அது செய்யும் செயல் முறையற்றது தானே? முதலில் என்னைக் கவனிக்காமல் குஞ்சுகளுக்குச் சேவை செய்யப் போகிறதாம்! வந்து என் காதைச் சுத்தம் செய்யட்டும். அதன்பின் அதை என்ன பண்ணுகிறேன் பார்!'' என்றது கண்டாமிருகம்.

'கொல்லப் போகிறீர்களா மாமா?' என்று கேட்டது நரி.

''ஆம், ஆம்!'' உறுமியது காண்டாமிருகம்.

''வேண்டாம் மாமா சிறு பறவை. அது உங்களிடம் நட்பாக இருப்பதே பெரிய விஷயம். அது உயிரோடு இருந்தாலாவது உங்களுக்கு உபயோகம். அதையும் கொன்று விட்டால் அதனால் என்ன பிரயோஜனம்?'' நரி பரிதாபத்துடன் சொன்னது.

''அதை நான் கொன்று விட்டால் அதன் குஞ்சுகள் எப்படி உயிர் வாழ்கின்றன என்பதை நான் பார்க்கிறேன். அதற்காக, நீ பரிதாபப்படத் தேவையில்லை. அது தப்புச் செய்தது. தண்டனை அடையப்போகிறது. நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!'' காண்டாமிருகம் நரியை விரட்டியது.

நரி சிந்தனையுடன் நின்றது.

'உதவி செய்யும் சிறு பறவையை இது கொல்ல எண்ணுகிறது என்றால், இது எவ்வளவு பெரிய நன்றி கெட்டதனம்? நியாயமாகக் காண்டாமிருகம்தான் உயிருடன் இருக்கக் கூடாது. அது இருந்தால் இன்னும் எத்தனை பேரைக் கொல்லுமோ?' என்று எண்ணியது.

இந்த எண்ணம் தோன்றியவுடன், மரங்கொத்திப் பறவையைத் தேடி சென்றது. அப்போது மரங்கொத்தித் தன் குஞ்சுகளுக்கு இரையை ஊட்டியவாறு இருந்தது.

அதனிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தது நரி. தன்னைக் கொல்ல காண்டாமிருகம் முடிவெடுத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட மரங்கொத்தி நரியிடம் கூறியது.

''என் சக்தி என்னவென்பதை அந்த மடையன் அறியவில்லை. பொறுத்திருந்து பாருங்கள் நரியாரே!'' என்று கூறிய மரங்கொத்திக் குஞ்சுகளுக்கு ஆகாரத்தை ஊட்டி விட்டு, காண்டாமிருகம் இருந்த பகுதிக்குப் பறந்து சென்றது.

கண்களில் கோபத்துடன், நறநறவென பற்களைக் கடித்தவாறு, அலைந்தது காண்டாமிருகம். உடனே மரங்கொத்திக் குரல் கொடுத்தது.

''அண்ணா, வந்து விட்டேன். தாமதத்திற்கு மன்னியுங்கள்!'' என்றவாறு அதன் காதின் மேல் அமர்ந்தது மரங்கொத்தி. நரி புதர்களின் நடுவில் ஒளிந்து கொண்டு என்ன நடைபெறப் போகிறதோ என்ற அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

காண்டாமிருகம் பதில் பேசவில்லை. மரங்கொத்தி காதுகளைக் கவனமாகப் பரிசீலித்தது. பின் கூறியது.

''ஏதோ மரத்தின் சின்ன காய் போய் அடைத்திருக்கிறது. அது வெளியில் வர மற்றொரு காதில் மருந்து விட்டால் போதும்!'' என்றது.

''காதுகளைச் சுத்தம் செய்தவுடன் ஓடி விடாதே! பற்களுக்கு இடையிலும் தாங்க முடியாத வலி. நிறைய உணவுத் துணுக்குகள் கிடக்கின்றன. அதையும் எடுத்து விட்டு விடு!'' என்றது காண்டாமிருகம்.

காண்டாமிருகத்தின் திட்டம் புரிந்து விட்டது மரங்கொத்திக்கு.

''இதோ ஒரு நொடியில் காதில் விட மூலிகை மருந்தை கொண்டு வருகிறேன்,'' என்று கூறிப் பறந்து சென்ற மரங்கொத்தி, மரத்தின் உச்சியில் இருந்த ஒரு கருந்தேளை அதற்கு நோகாமல் பிடித்துக் கொண்டு வந்து மற்றொரு காதில் கண் இமைக்கும் நேரத்திற்குள் போட்டு விட்டது.

பாதாளம் போன்றிருந்த காதிற்குள் சறுக்கிச் சென்ற தேள் பயத்தால், பலமுறை கொட்டியது. மரங்கொத்தி மரத்தின் மீது அமர்ந்து கொண்டது. நரி மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

''ஆ, அய்யோ அம்மா!'' என்று உரத்த குரலில் அலறியது காண்டாமிருகம். கீழே விழுந்து புரண்டது. காதுகளை வேகமாக ஆட்டி தேளை வெளியே எடுக்க முயற்சித்தது. அதற்குள் பல நூறு முறை கொட்டி விட்டது தேள்.

சிறிது நேரத்தில் வாயிலிருந்து நுரை கக்கிக் கீழே விழுந்து செத்தது காண்டாமிருகம். நரி வெளியே வந்தது. நரிக்கு நன்றி கூறிய மரங்கொத்தி, பின் பறந்து சென்றது.

குட்டீஸ்... நாம் நன்றி கெட்டவர்களாக இருக்கவே கூடாது. சரியா? இருந்தால் இப்படித்தான் ஆகும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us