PUBLISHED ON : ஜன 11, 2020

தமிழர் கலாசாரத்தில், நெல் தானியத்துக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
புதிதாக அறுவடை செய்த நெல் தானியத்தை அரிசியாக்கி, பொங்கல் வைத்து, இயற்கையாக வழிபடுவது தான் பாரம்பரிய வழக்கம். முதன்மை உணவுப் பயிரான நெல் தானியத்தை, தெய்வமாக பாவிப்பதையே இது காட்டுகிறது.
திருமண நிகழ்வின் போது, அரிசியில், மஞ்சள் தடவி, அட்சதை துாவி வாழ்த்தும் வழக்கம் இன்றும் உள்ளது. மணமகள், பெரிய தாழியில் நிரப்பிய நெல்லுடன், புகுந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கும் வழக்கமும் உள்ளது. பெண் பூப்படைந்ததும், நிறை நாழியில் நெல் வைத்து வணங்கும் வழக்கமும் உள்ளது.
எப்போது அறுவடை நடந்தாலும், புதிய நெல்லை குல தெய்வத்திற்கு படைத்து வழிபடுவதும் உண்டு. இது போன்ற வழக்கங்கள், முதன்மை உணவான நெல்லுக்கு, தமிழர்கள் கொடுத்துள்ள முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
உணவை உற்பத்தி செய்து, உலகை காக்கும் விவசாயியை போற்றுவோம். இயற்கையாக விளைவிக்கும் உணவு பொருட்களை பயன்படுத்தி, விவசாயத்தை வாழ வைப்போம்.
