தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நீருயர நெல்லுயரும்: நெல்லுயர குடியுயரும்!

நீருயர நெல்லுயரும்: நெல்லுயர குடியுயரும்!

நீருயர நெல்லுயரும்: நெல்லுயர குடியுயரும்!


PUBLISHED ON : ஜன 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொங்கல், பல விதங்களில் மற்ற பண்டிகைகளிடமிருந்து மேன்மையானது.

சமயங்கள் சார்ந்த விழாக்களுடன், புராண கதைகளுக்கு தொடர்பு இருக்கும். அந்த விழாக்கள், நட்சத்திரம் மற்றும் திதி அடிப்படையில் அமையும். தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை, நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படும்.

தீபாவளி, கந்த சஷ்டி, வைகுண்ட ஏகாதசி போன்றவை, திதி அடிப்படையில் கொண்டாடப்படும். தீபாவளி, நரகாசுரன் கதையையும், கந்தசஷ்டி, சூரசம்ஹார கதையையும் பின்புலமாக கொண்டவை.

தை பொங்கல் பண்டிகைக்கு, புராண கதைகளுடன் தொடர்பு ஏதும் இல்லை. நட்சத்திரம், திதி அடிப்படையிலும் அமையவில்லை. அதனால் தான், சமய சார்பற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.

விவசாய உற்பத்தியில் உதவும் உயிரினங்களுக்கும், கருவிகளுக்கும் நன்றி தெரிவித்து, சூரியக்கடவுளுக்கு படையலிடும் திருநாளாக போற்றப்படுகிறது.

மற்ற விழாக்கள், பஞ்சாங்க அடிப்படையில் கணிக்கப்படுவதால், ஆண்டு தோறும், நாட்கள் மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால், பொங்கல் கொண்டாட்ட நாள் மாறாதது. மார்கழி மாதம் கடைசி நாளில், போகியாக துவங்கி, தை முதல் நாள் பொங்கலாக மலரும். தொடர்ந்து, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாட்டம் கரைபுரளும்.

விவசாயத்தை, முதன்மை தொழிலாக உடைய தமிழர்கள், அறுவடை செய்த புதுநெல்லை பொங்கலிட்டு, சூரியக் கடவுளுக்கு படைத்து நன்றி செலுத்தும் நாளாக அமைகிறது.

கள்ளி வட்டம்!

விவசாய தொழிலில், மாடும் ஓர் அங்கம். அவை, உழைப்பு, பால், சாணம் என, வளங்களை அள்ளித் தருகின்றன. உற்பத்தியில் துணையாக நிற்கின்றன. எனவே, அவற்றையும் சிறப்பிக்கும் வகையில் பொங்கல் கொண்டாட்டம் அமைகிறது.

மாட்டுப்பொங்கலன்று மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலை அணிவித்து, சிறப்பு உணவு வழங்கி வழிபடுவர். பழங்காலத்தில், 'கள்ளி வட்டம்' என்ற அடைமொழியுடன், மாடுகள் கவுரவிக்கப்பட்டன.

மாட்டுத் தொழுவத்தையும் அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது. முள்செடியான கள்ளியில், மஞ்சள், சுண்ணாம்பு தடவி, மாட்டுத் தொழுவத்தில் பதித்து வைப்பர். அதை சுற்றி, வட்டம் போட்டு, மாட்டு சிறுநீரை நிரப்புவர். இதற்கு, 'கள்ளி வட்டம்' என்று பெயர்.

மாடுகளை நீராட்டி, அலங்கரித்து, வேப்ப இலை கொத்தை கழுத்தில் கட்டுவர்; அழகிய நெட்டிலிங்க மாலையை அணிவித்து குதுாகலிப்பர். பின், படையல் வைத்து வழிபடுவர். ஒரு பசு மாடும், முருங்கை மரமும் இருந்தால், குடும்பத்தில் வறுமைக்கே இடமில்லை என்ற நம்பிக்கை தமிழர்களிடம் இருந்தது.

சூரிய கடவுள்!

பொங்கல் பண்டிகை நாளில், 'பொங்கலோ பொங்கல்' என்ற குரலை எங்கும் கேட்கலாம். அது ஒரு இனிய ராகம். வீட்டு வாசலில் கோலம் போட்டு, அதன் நடுவே, அடுப்பை வைக்க வேண்டும். பொங்கல் பானை மற்றும் அடுப்பு மீது, மஞ்சள், குங்குமம் பூச வேண்டும்.

சூரியக் கடவுளை வணங்கி, விளைந்த மஞ்சள் கொத்தை, பானையைச் சுற்றி கட்ட வேண்டும். மாட்டு சாணத்தில், இரண்டு பிள்ளையார் செய்து, அருகம்புல், பூசணிப்பூ போன்றவற்றை அதன் மீது வைக்க வேண்டும். இப்போது, பொங்கல் வைக்க களம் தயார்.

பானையில், அரிசி உட்பட பொருட்களை போட்டு, கிழக்கு திசை நோக்கி பொங்கல் வைக்க வேண்டும். அது பொங்கி வரும் போது, 'பொங்கலோ பொங்கல்' என, இசைத்து வழிபட வேண்டும். பொங்கலை, இயற்கைக்கு படைத்து, குலதெய்வம், மூதாதையர், சூரியக்கடவுளை வணங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us