தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆவிகள் இல்லையடி பாப்பா! (1)

ஆவிகள் இல்லையடி பாப்பா! (1)

ஆவிகள் இல்லையடி பாப்பா! (1)


PUBLISHED ON : மே 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிக்... டிக்... டிக்...

கடந்த, 200 ஆண்டுகளுக்கு முந்தய, பெரிய ராஜா வீட்டு கடிகாரம், சத்தத்துடன், ஓடிக் கொண்டிருந்தது.

அதன் அருகில் மாட்டப்பட்டிருந்த பெரிய ராஜா ரகுநாத சிம்மர் புகைப்படம், பெண்டுலம் அசையும் போது, ஒவ்வொரு முறையும், கண்களை சிமிட்டி சிமிட்டி, எதையோ உற்று நோக்கியது.

அங்கு வந்த ராமு, முக்காலியில் இருந்த பழங்களில், அவனுக்கு பிடித்த சப்போட்டா பழத்தை எடுத்து, சாப்பிடும் போது, எதேச்சையாக மேலே கவனித்தான்.

பெரிய ராஜா இவனை பார்த்து முறைப்பது தெரிந்தது. ஆனால், கடிகார பெண்டுலம், ஒவ்வொரு முறை, ஆடி ஆடி, அசையும் போதெல்லாம், அவர், இவனை முறைக்கவும், ராமுக்கு அச்சம் தலைக்கேறியது.

அப்படத்தில் இருந்து, பெரிய ராஜாவின்ஆவி இறங்கி வருவது போல், வெள்ளை உருவம் ஒன்று மெல்ல கீழே வரவும், அவன் தாய், அரண்மனையில் இருக்கும் ஆதவன் சிலைக்கு, சூடம் காட்ட, மணி அடித்தபடி தட்டை எடுத்து வந்த போது, அந்த ஆவி வேகமாக மேலே ஏறி, மீண்டும் படத்துடன் ஐக்கியமாகியது.

ராமுவுக்கு அதிர்ச்சி. உடலில் துளிர்த்த, வியர்வை துளிகளை துடைத்து கொண்டான்; அதே சமயம், ஆடிக்கொண்டிருந்த பெண்டுலம் நின்றது.

'இந்த கடிகாரத்தின் பெண்டுலத்துக்கும், பெரிய ஜமீன் ஆவிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. பூஜை மணி அடித்தால் அடங்கி விடுகிறது; நம் கணிப்பு உண்மையாக இருக்குமா...' என்று நினைத்த போதே, அம்மா பூஜை செய்வது காதில் கேட்டது. கற்பூரம், சாம்பிராணி புகை காட்டி முடித்து, அடுக்களைக்கு சென்ற போது, அந்த அதிசயத்தை கவனித்தான் ராமு.

மீண்டும் பெண்டுலம் ஆடியது; கடிகாரம் பெரிய சத்தத்துடன் ஓடியது. இப்போது, ஒவ்வொரு பெண்டுல அசைவுக்கும், பெரிய ராஜாவின் கண்கள் அங்கும், இங்கும் அசைந்தன.

அதே சமயம், ராமு, சப்போட்டா பழத்தை எடுக்கவும், படத்தில் இருந்த ஆவி, மெல்ல மெல்ல, கீழ் இறங்கி அவனிடம் வந்ததை கவனித்த ராமு, வேகமாக ஓடினான்.

ஆவி துரத்தியது. அரண்மனை முழுவதும், சுற்றி சுற்றி ஓடினான்; அது அவனை விட்ட பாடில்லை. உடனே, கையில் இருந்த சப்போட்டா பழத்தை துாக்கி எறிந்தான்; அப்படியும், அவனை விடாமல் துரத்தியது.

சிறிது நேரத்தில், அவனால், ஓட முடியவில்லை; மூச்சு வாங்கியது; அப்படியே மயங்கி விழுந்தான்; ஆவி அவனுள் இறங்கியது; அச்சத்துடன் வேகமாக, 'அம்மா' என்றபடி கீழே விழுந்தான்.

''ஐயோ... ராமு என்னடா ஆச்சு... ஏன் கட்டிலில் இருந்து கீழே விழுந்த..'' என்று பதறிய தாய், அவனை எழுப்பினாள்.

உடல் வியர்த்திருந்தது.

''ராமு என்னப்பா ஆச்சு... ஏதாவது துர் கனவு கண்டாயா...'' என்று தந்தை கேட்டு, ஆசுவாசப்படுத்தினார்.

''ஆம்...'' என்று மெல்ல தலையசைத்து, பேச முயன்ற போது, 'டமால்' என்ற சத்தம் கேட்டது.

'ஐயோ... என்ன சத்தம்...'என்று மூவரும் ஹாலுக்கு ஓடிய போது, பெரிய ராஜா அறையில், 200 ஆண்டுகளாக ஓடிய பெண்டுல கடிகாரம் கீழே விழுந்து, கண்ணாடி சுக்கு நுாறாக உடைந்திருந்தது.

'நள்ளிரவு, 12:00 மணிக்கு, யார் இதை தள்ளி விட்டிருப்பர்... எலி, பூனைக்கு வாய்ப்பு இல்லையே... மகன் கீழே விழுந்ததற்கும், இந்த கடிகாரம் கீழே விழுந்ததற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ...' என்று, ராமுவின், பெற்றோர் பேசிக் கொண்டனர்.

ஒரு பதை பதைப்புடன், கடிகாரத்தை உற்று நோக்கிய ராமு, 'வீல்' என்று அலறினான்.

''ஏய் ராமு... என்ன ஆச்சு... '' என்று அச்சத்துடன் கேட்டனர் பெற்றோர்.

கடிகாரத்தை காட்டினான் ராமு.

பனிரெண்டு என்ற இடத்தில் இருந்து, கசிந்தது ரத்தம்.

''அய்யய்யோ... இங்கே பெரிய ராஜாவின் ஆவி இருக்கு; அவர் ஏதோ துர்மரணம் அடைந்ததாக கேள்விபட்டேன். அவர் ரொம்ப பொல்லாதவராம்; நாம, இந்த இடத்தை, உடனே, காலி செய்ய வேண்டும்,'' என்று ராமுவின் தாய் கூறிய போதே, வாசலில் யாரோ அழைப்பு மணி அடிக்கும் ஒலி கேட்க, அதிர்ச்சியுடன் மூவரும் வாயிலுக்கு சென்றனர்.

கதவை ஒரு நடுக்கத்துடன் திறந்தனர். வாசலில், காவல் அதிகாரி கண்ணப்பன் நின்றிருந்தார்.

''என்ன சார்... காலம் கெட்டுக் கிடக்கு; எங்க பார்த்தாலும் திருட்டு, கொள்ளை... நீங்க பாட்டுக்கு அரண்மனை பெரிய கதவை பூட்டாம இப்படி திறந்து வெச்சிருக்கீங்களே,'' என்று எச்சரிக்கை செய்து, சென்றார்.

அப்போது தான் கவனித்தனர். பெரிய கதவு முழுவதுமாக திறந்திருந்தது; அவர்களுக்கு பேரதிர்ச்சி; காரணம், ராமுவின் தந்தை தான் அதை பூட்டினார்.

ராமுவின் அப்பா, திடீரென மயங்கி கீழே சாய்ந்தார். அப்போது சிரித்தபடியே, அரண்மனையில் யாரோ ஓடும் சத்தம் கேட்டது; இப்போது ராமுவின் தாயும், மயங்கி விழுந்தாள். ராமு மட்டும் மனதில் உறுதியுடன், ராஜ பரம்பரை கும்பிடும் ஆதவன் சிலை இருக்கும் இடத்தில், நுழைய, ஒரு கரம் அவனை இறுக்கி பற்றியது.

அவ்வளவுதான், ராமுவுக்கு கையை அசைக்க முடியவில்லை. உடனே, அவன் கண்ட கனவு நினைவுக்கு வந்தது. அம்மா பூஜை செய்ய சென்ற போது, கையில் அடித்தபடியே வந்த மணி, பூஜை அறையில் இருப்பதை கண்டான்.

வேகமாக கால்களை, பூஜை அறைக்குள் நுழைத்து, மணியை, கால் விரல்களுக்குள் வேக வேகமாக நுழைத்து, காலால் அடிக்கவும், இறுக்கி இருந்த, அவன் கரங்களை, யாரோ விடுவிப்பதாக உணர்ந்தான். வெள்ளை நிற மேகம் போல், பெரும் கரம் மெல்ல மெல்ல, விலகிச்சென்று, பெரிய ராஜா ரகுநாதசிம்மர் படத்தில் நுழைந்து ஐக்கியமானது.

அப்போது தான், ஒரு முடிவு செய்தான். மணியை வேகமாக அடித்தபடியே, மயக்கத்தில் இருந்த பெற்றோர் முகத்தில், சொம்பில் இருந்த தண்ணீரை தெளித்தான்; மெல்ல மெல்ல, கண் விழித்தனர்.

''ராமு... உனக்கு ஒன்றும் ஆகலயே,'' என்றபடி, தாயார் கட்டிப் பிடித்து, முத்தம் பதிக்க, மெல்ல எழுந்தார் தந்தை.

''ராமு... நாம் முதலில் இங்கிருந்து, கிளம்ப வேண்டும்; நானும், அம்மாவும், கொடைக்கானல் எஸ்டேட்டில் தங்கி கொள்கிறோம்; நீ ஹாஸ்டலில் தங்கி படி; அதற்கான ஏற்பாட்டை நான் செய்கிறேன்,'' என்றார்.

''சரிங்கப்பா... அதற்காக, இந்த அரண்மனையை பூட்டி வைத்தா ஆபத்தாகி விடும்; யாராவது, தீய காரியங்களுக்கு இதை பயன்படுத்தலாம்; சமூக விரோதிகளின் இடமாக, இதை மாற்றுவதற்கு நாம் இடம் கொடுக்கலாகாது,'' என்றான் ராமு.

''சரி... வேறு என்ன செய்யலாம்...''

''அப்பா... இதை ஒரு மாணவர் விடுதியாக மாற்றலாம் அல்லவா,'' என்றான்.

''ஆம்... அதுவும் நல்ல ஐடியா தான்; ஆனால், மாணவர்களுக்கு, ஏதாவது ஒன்று என்றால், நாம் பதில் சொல்ல வேண்டியிருக்குமே,'' என்றார் ராமுவின் தந்தை.

''சரிங்க... நீங்க என்ன வேணும்னாலும் செய்யுங்க; ஆனா, எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும். நான், இந்த வீட்டுக்கு வந்தப்போ... என்னை யாருமே மதிக்கல. காரணம், 'லவ் மேரேஜ்!' நான் மிகவும் ஏழைக் குடும்பம்; நீங்களோ, அரச பரம்பரை...

''பெரிய ராஜாவுக்கும், உங்கள் தந்தைக்கும் அப்படி என்ன விரோதம்... அவர் துர்மரணம் அடைந்தாலும், ஏன் ஆவியாகி நம்மை அச்சுறுத்த வேண்டும்... விவரமாக கூறுங்க... அப்போ தான் நாம இங்கே தங்கலாமா, இல்லை வெளியில் செல்லலாமா என்ற முடிவுக்கு வர முடியும்,'' என்றாள் ராமுவின் தாய்.

''அப்பா... எனக்கு இந்த அரண்மனை பற்றி, எதுவுமே தெரியல; உடனே, முழு உண்மையும் கூறுங்க,'' என்றான், ராமு.

''சரி கூறுகிறேன்...'' என்று, பேச துவங்கினார்.

அப்போது, திடீரென்று, பல பல்லிகள் ஒன்று சேர்ந்து குரலிட்டு, ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.

அதே சமயம், மூன்று முறை கடிகாரம் வேகமாக ஒலித்தது.

'என்ன உடைந்த கடிகாரம் ஓடுதா...' ஆச்சர்யத்துடன் பார்த்தான் ராமு.

திடீரென்று, முள், பின் நோக்கி நகர்ந்து, நடு இரவு, 12:00 மணியில் நின்றது.

ராமுவின் அப்பா, பெரிய ராஜா பற்றி கூற முற்பட்ட போது, கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

''ஏங்க அழறீங்க... என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க... நாம நிச்சயம் ஒரு தீர்வு காணலாம்,'' என்று ராமுவின் தாய் கூறிய போதே, அவர் வாய் விட்டு அழுது, 'ப....ப... ப...' என்று மட்டும் கூறி, 'தன்னால் பேச முடியவில்லை' என்று கை ஜாடையால் காட்ட, பெரும் அதிர்ச்சி அடைந்தனர் ராமுவும், தாயாரும்.

- தொடரும்...

- பூரணி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us