PUBLISHED ON : மே 11, 2018

அன்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது நினைத்து பார்க்க முடியாதது; ஆனால், இன்று, சுலபமாகிவிட்டது.
சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களின் முதல் சேதம் சிறுநீரகம். அதை மாற்றினால் தான், மனிதன் உயிர் வாழ முடியும். இந்த அறுவை சிகிச்சையை, முதன் முதலில் செய்து, இன்றும் பல கோடி மக்களை வாழ வைக்கும் தெய்வமாக விளங்குபவர், டாக்டர் ஜோசப் எட்வர்ட் முர்ரே.
இவர், அமெரிக்கா கண்டத்தில் உள்ள, மில்போர்ட் என்ற இடத்தில், ஏப்ரல் 1, 1919ல், எட்வர்ட் முர்ரே - மேரி தம்பதியருக்கு மகனாய் பிறந்தார்.
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், மருத்துவ பட்டம் பெற்றார்.
பொது மருத்துவத்தை விட, அறுவை சிகிச்சை மருத்துவத்தில் விருப்பம் அதிகம். குறிப்பாக, 'பிளாஸ்டிக் சர்ஜரி' அறுவை சிகிச்சையில் கவனத்தை செலுத்தினார்.
தீப்புண், உடைந்த உறுப்புகள், காயங்களால் பாதிக்கப்பட்ட இடங்களில், உடலின் வேறு பகுதியிலிருந்து, திசுக்களை எடுத்து, ஒட்டி, குணமாக்கினார்.
இரட்டை குழந்தைகள் பற்றி, ஆய்வு நடத்தினார். ஒரு குழந்தையின் உடலிலிருக்கும் தோலை எடுத்து, பாதிக்கப்பட்ட, மற்றொரு குழந்தையின் உடலில் பொருத்தினால், நன்றாக பொருந்துகிறது என்பதை அறிந்தார்.
ஒருமுறை, ரிச்சர்ட் ஹெர்ரிக் என்பவரது சிறுநீரகங்கள் செயல் இழந்தன; அவரது மனைவி ரொனால்டுவின் இரு சிறுநீரங்களும், நல்ல நிலையில் இருந்தன.
அவரது அனுமதியுடன், ஒரு சிறுநீரகத்தை எடுத்து, கணவருக்கு பொருத்தினார். இந்த அறுவை சிகிச்சை, ஐந்து மணிநேரம் நிகழ்ந்தது. உலகின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இதுதான்; இதில் வெற்றி கண்டார்.
இரட்டையர் அல்லாமல், உறவே இல்லாதவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
கடந்த, 1959ல், இரட்டையர் அல்லாத ஒருவருக்கு, மாற்று அறுவை சிகிச்சை செய்து, சாதனை படைத்தார். 1962ல், இறந்தவரின் உடலிலிருந்து எடுத்த சிறுநீரகத்தை, பாதிக்கப் பட்டவருக்கு பொருத்தி, இமாலய சாதனை படைத்தார்.
சிறுநீரக நோய் வராமலிருக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து, பல கட்டுரைகளை வெளியிட்டார்; அவை, இன்றும் மருத்துவ பொக்கிஷங்களாக உள்ளன.
சிறுநீரக அறுவை சிகிச்சையை எளிதாக்க பாடுபட்டார். உலக சாதனை விருதான நோபல் பரிசு, 1992ல் கிடைத்தது; ஆம்! தன், 70ம் வயதில் இப்பரிசை பெற்றார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உழைத்த அப்பெருமகன், நவம்பர் 26, 2012ல் மண்ணுலகை விட்டு மறைந்தார். எனினும், சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒவ்வொருவரும், முர்ரேயை வணங்க வேண்டும்.
