PUBLISHED ON : ஜூலை 06, 2018

சென்றவாரம்: சிறுவர்களை இடுகாட்டிற்கு அழைத்து வந்த காளியப்பன், அவர்களை காணாது படபடத்தான். இனி -
இறுக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான் காளியப்பன். குடிக்க தண்ணீர் கொடுத்தாள் மனைவி. 'மடக் மடக்' என்று குடித்தான். உடல் முழுவதும் வியர்த்திருந்தது. ஓடிச் சென்று, துண்டு எடுத்து, முகம், முதுகு, மார்பு பகுதிகளை துடைத்து விட்டாள். பின், கொஞ்சம் கொஞ்சமாக, டென்ஷனில் இருந்து விடுபட்டாலும், முகம் மட்டும் கவலையுடன் இருந்தது.
மூடியிருந்த கதவை, 'மடார்' என்று திறந்தான் காளியப்பன். இப்போது, அவனுக்கு நிம்மதி. காரணம், அந்த, மூன்று சிறுவர்களையும் காணாது, தவித்து, அய்யா கேட்டால், என்ன பதில் சொல்வது என்று பயந்தான்... அந்த இடுகாட்டை, பலமுறை வலம் வந்து தேடியவனுக்கு, களைப்புதான் வந்ததே ஒழிய, இவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. அதனால், மிகவும், 'படபட'ப்புடன் வந்தவன், அவர்களை கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
''தம்பிங்களா... நீங்க செய்தது நியாயமாப்பா?'' மெதுவாகவே கேட்டான், காளியப்பன்.
''அப்படி என்ன, நாங்க தப்பு செய்துட்டோம்?'' என்று, பதில் கேள்வி கேட்டான் ராமு.
''தம்பிங்களா... பூ பறித்து வருகிறேன்; அதை, பெரிய ராஜாவுக்கு போட்டு, மரியாதை செலுத்தலாம்; அதுவரைக்கும், இங்கயே இருங்கன்னு, அவரை புதைச்ச இடத்தில இருக்க சொன்னேன் இல்லையா?''
''ஆமாம்...'' என்றான் டேவிட்.
''ஆனா, பூ பக்கத்துல கிடைக்கும்ன்னுட்டு போயிகிட்டே இருந்தேன்; அப்படியே, ஒரு மைல் தொலைவு வரை போயிட்டேன்பா; எப்படியோ பூக்கள் கிடைச்சது; ஆனா, அதை போட, நீங்க தான் கிடைக்கல; எங்கயோ போயிட்டீங்க...''
''ஏங்க... உங்களுக்குத்தான் அந்த இடுகாடு அத்துபடி ஆச்சே... அப்போ பூ எங்கு கிடைக்கும்னு தெரியாதா... ஏன், ஒரு மைல் துாரம் போகனும்...'' என்றான், ராமு.
''சின்ன எஜமான் ... இன்னிக்குன்னு பார்த்து, சோதனையா அந்த செடிகளில் ஒரு பூ கூட இல்ல. வெறும், மூணு பூ கிடைச்சா கூட போதும்ன்னுதான் போனேன். ஆனா, எப்பவும் பூக்கிற இடத்தில, பூக்கள் கிடைக்காததாலதான், அவ்வளவு துாரம் போகும்படி ஆயிடுச்சு...'' என்றான், காளியப்பன்.
''சரிங்க... அப்ப நீங்க எங்கள பார்க்கவே இல்ல...'' புருவத்தை உயர்த்தினான் ராமு.
''தம்பி... நா ஏன் பொய் சொல்லணும்; உங்கள பெரிய ராஜா அய்யா புதைச்ச இடத்துல நிறுத்தி வெச்சுட்டு பார்த்ததுக்கு பின், இப்பதானே தம்பி பாக்கிறேன்!''
''அப்ப, 'எங்கடா இங்க வந்தீங்கன்னு...' நீங்க, எங்களை கேட்கவே இல்ல...''
''சின்ன எஜமான் நீங்க என்ன சொல்றீங்க... நா எங்க உங்கள பார்த்தேன்...''
''ஓடுங்கடா... பெரிய ராஜாவ புதைச்ச இடத்துக்கு ஓடுங்கன்னு... சொல்லவே இல்லையா?''
''சத்தியமா இல்லீங்க தம்பி... நீங்க டாக்டர் மவனாம்; உங்கள காணாது, என் மனசு என்ன வேதனை பட்டுச்சு தெரியுமா?''
''ஏன் காளியப்பன், 'நான், பூ பறிக்க போறப்போ கால்ல முள் தைச்சிடிச்சு'ன்னு நீங்க சொல்லலே...'' கேட்டான் ஆசாத்.
''என்ன தம்பி, ஆள் ஆளுக்கு ஒண்ணு கேட்கறீங்க; எனக்கு தான் இந்த இடுகாடே அத்துபடி ஆச்சே; நான் தான் அடிக்கடி, சுத்தம் செய்றனே. ஏன், அங்க முள் இருக்கப்போவுது. நீங்க ஏதாச்சும், இடுகாட்டை பார்த்து பயந்துட்டுடீங்களா... இல்லை, பகல் கனவு கண்டீங்களா...'' சூடாகவே கேட்டான் காளியப்பன்.
''சரி போகட்டும்; இப்ப நடந்ததை சொல்லுங்க,'' என்றான், ராமு.
''சின்ன எஜமான், நான் பூக்களை எடுத்து வந்தேன்; பெரிய ராஜாவ புதைச்ச எடத்துல, உங்கள காணலே; எனக்கு பயம் வந்துடுச்சு... அய்யா, என்னிடம் படிச்சு படிச்சு சொல்லியிருக்காரு; 'மூவரையும் ரொம்ப பத்திரமா திருப்பி அனுப்பிவிடுன்னு...' நான் என்ன செய்வேன்; என் மனசு பட்ட வேதனைக்கு அளவே இல்லை...
''உடனே அந்த இடுகாட்டை சுற்றி சுற்றி, ஓடி வந்து தேடினேன். எங்கேயும் உங்கள காணல.. எனக்கு, இதயமே நொறுங்கிடும்போல ஆயிடிச்சு. வேறு வழியில்லாம, அந்த பூக்களை, உங்களுக்காக வேண்டி, நானே போட்டுட்டு வந்தேன்,'' என்றான், காளியப்பன்.
''ஏங்க... அது என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறீங்க; நாங்க சப்போட்டா மரம் இருக்கிறத பார்த்து அங்க போனோம். 'பழத்தை தின்பதற்காகத்தான் சென்றோம்...' என்றதும், காளியப்பனும், மாரியப்பனும் ஒரே குரலில், 'அய்யோ... அபாயமாச்சே...' என்றனர் படபடப்புடன்.
''ஆமா... அபாயம்னு தெரிஞ்சிதான் சென்றோம்; காளியப்பன், நீங்க ஓடி வந்தீங்க... 'ஏன், இங்கு இருக்கிறீங்கன்னு...' மரியாதையுன் கேட்டுட்டு, பின், அதிகாரத்துடன் எங்கள, அங்கிருந்து விரட்டினீங்க... அப்போ, உங்க வேட்டிய மடிச்சி கட்டிகிட்டு பணிவா எங்களிடம் பெரிய ராஜா அய்யா புதைச்ச இடத்துக்கு போக சொன்னீங்க...
''எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கு... அதை தீர்த்து வைச்சதும் போறோம்! என்றதும், 'என்னிடமே எதிர் பேச்சா. உங்களை விட மாட்டேன்...' என்று, கோபத்துடன் கூறிய போது, வேட்டி மடித்திருந்தது. அப்போது, உங்களுக்கு கால்களே இல்லை ...''
பெரியவர் கொதிப்படைந்தார். ''இது, நம்பிக்கை துரோகம்; பெரும் நம்பிக்கை துரோகம்.' இந்த இடுகாட்டை பார்த்துக்கொள். எந்த தீய சக்தியும் உங்கள் குடும்பத்தை நெருங்க விடாமல் செய்கிறோம்' என்று, பெரிய ராஜா உறவினர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான செயல். இப்போ என் மகன், காளியப்பனை பிடித்த அந்த ஆவி, நாளைக்கு என்னையும் பிடிக்கலாம் இல்லையா,'' அவர் கோபத்துடன் பேசிய போது சிரித்தான், காளியப்பன்.
''அப்பா... இந்த தம்பிங்க ஏதோ சிரிப்பா பேசறாங்க; அவங்க, நான் வர்ற நேரம் ஆனதும், பயந்து, இங்க வந்துட்டாங்க; கவலை படாதீங்கப்பா; நம்மை எல்லாம், ஆவியோ, பேயோ, பிசாசோ எதுவும் ஒண்ணும் செய்யாது,'' என்றதும், ராமுவும் மற்ற நண்பர்களும் சிரித்தனர்.
''ஏன் தம்பிங்களா சிரிக்கிறீங்க; நான் சொன்னதுல நம்பிக்கை இல்லையா?'' காளியப்பன் கேட்டான்.
''இருக்கு; நிறைய இருக்கு; ஆனா, நாங்க சொன்னதுலதான், உங்களுக்கு நம்பிக்கை இல்லை,'' என்றான், ராமு.
''ஆம் தம்பி... நீங்க சின்னபுள்ளங்க; இந்த இடுகாட்டுக்கு, அய்யா அனுப்பி இருக்கக்கூடாது; அவருக்கு பெரிய ராஜா மேல அவ்வளவு பாசம்; அதான் அவர் ஆசி வேண்டி போக சொன்னார்; நானும் அழைத்து சென்றேன்; மற்றபடி, நீங்க சொன்னது எதுவும் நான் நம்பலே தம்பி.''
''சரி... அப்ப இது என்ன ?''
ஆச்சரியம் அடைந்தான் காளியப்பன்.
''இதுவும் என்ன?'' டேவிட்.
இப்போது, காளியப்பன் அதிர்ச்சி அடைந்தான்.
''நீங்க, இதை, என்னன்னு சொல்லுவீங்க... ''ஆசாத்.
இப்போது, காளியப்பன் யோசிக்க ஆரம்பித்தான்.
மூவரும் தங்கள் பையில் இருந்த சப்போட்டா பழத்தை எடுத்து, கீழே வைத்தனர்.
காளியப்பன் அசந்து விட்டான்; பெரியவர் பயந்து விட்டார்.
''அடே காளியப்பா... இதுக்கு என்னன்னு பதில் சொல்லுடா; இவங்களை, நீ பார்க்கவே இல்லேன்னு சொல்றே; ஆனா, இவங்க உன்னை பார்த்ததா சொல்றாங்க. அதுக்கு ஆதாரமா, இடுகாட்டுல இருந்து, சப்போட்டா பழத்தையும் பறித்து வந்து காட்டிட்டாங்க. இப்ப சொல்லுடா...''
அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. மூன்று சப்போட்டா பழங்களும், வேகமாக உருண்டு ஓடின. ராமுவும், நண்பர்களும் ஓடினர்; காளியப்பனும் ஓடினான்; பெரியவர் தடியை பிடித்தபடியே, மெல்ல மெல்ல பின் தொடர்ந்து சென்றார்.
உருண்டு ஓடிய அப்பழத்தை, அவர்களால் எடுக்க முடியாதபடி, வேகமாக ஓடின. கடைசியில், அது ஏற்கனவே உருண்டு ஓடி நின்ற, பழைய இடத்தில் போய், ஒன்றன் பின் ஒன்றாக நின்றன.
- தொடரும்...
