PUBLISHED ON : ஜூலை 06, 2018

விழுப்புரம் மாவட்டம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! அறிவியல் ஆசிரியை, ஜீனத் மிகவும் அழகாக இருப்பார். நீண்ட தலைமுடியை, அழகாக பின்னி, விதவிதமாக புடவை கட்டுவார்.
அதாவது, 37 ஆண்டுகளுக்கு முன் இப்படி, 'மேச்சிங்கா டிரஸ்' பண்ணுவது மிகப் பெரிய விஷயம். மிகவும் கண்டிப்பானவர்; அவர் பாடம் நடத்துவது, எளிதில் புரியும்; ஆனால், அவரிடம் சகஜமாக பேச முடியாது. அவரை மிகவும் ரசிப்பேன்.
ஒரு நாள், ரொம்ப அழகா, 'டிரஸ்' செய்திருந்தார். அவர் பாடம் நடத்தும் போது, அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மிகவும் கோபத்துடன், 'பாடத்தை கவனிக்காமல் என்ன செய்ற...' என்று கேட்டவுடன், கொஞ்சம் கூட யோசிக்காமல், 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...' என்றேன். அவ்ளோதான், மிகவும் கண்டிப்பான அவர், அப்படியே சிரித்து விட்டார்.
தற்போது, என் வயது 51. புகழ்ச்சி என்பது, கடுமையான மனிதர்களையும் மயக்கி விடுகிறது என்ற உண்மையை உணர்ந்தேன்!
- எஸ்.பிரபாவதி, சென்னை.
