தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தூக்கம் வரல!

தூக்கம் வரல!

தூக்கம் வரல!


PUBLISHED ON : செப் 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதூர் என்ற ஊரில் ரங்கா என்றொரு செல்வந்தன் இருந் தான். அவனுக்கு முன்னோர்கள் சேர்த்து வைத்த பெருஞ்செல்வம், வீடு, நிலபுலன்கள் எல்லாம் இருந்தன. அவன் பண்ணையிலும், வீட்டிலும் பல பணியாட்கள் வேலை பார்த்து வந்தனர். இத்தனை செல்வமும் வசதியும் இருந்தாலும், அவனுக்கு ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அது என்னவென்றால், சிறிது காலமாகவே, அவன் இரவில் தூக்கம் வராமல் தவித்து வந்தான்.

ரங்காவின் பால்ய நண்பன் பாலு. ரங்காவும், பாலுவும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள் என்பதால், இருவருமே தங்கள் இன்ப துன்பங்களை ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வர்.

ரங்கா தன் நண்பனான பாலுவைச் சந்தித்து, சமீபகாலமாக, தான் தூக்கம் வராமல் தவிப்பதைப் பற்றிச் சொன்னான்.

பாலுவும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ''கவலைப்படாதே ரங்கா! எனக்குத் தெரிந்த சிறந்த நாட்டு மருத்துவர் இருக்கிறார். அவரிடம் சென்று உனக்கு வைத்தியம் செய்தால், நன்றாக தூக்கம் வரும். ஆனால், அந்த வைத்தியர் நம் ஊரின் அருகிலுள்ள மலைமீது வசிக்கிறார். நாம் நாளை காலை சென்று அவரைப் பார்க்கலாம். ஆனால், மலையடிவாரம் வரைதான் நாம் வண்டியில் செல்ல முடியும். அதற்கு மேல் நடந்து தான் செல்ல வேண்டும். உனக்குச் சம்மதமா?'' என்று கேட்டான்.

'எப்படியேனும் தனக்கு இரவில் தூக்கம் வந்தால் போதும்' என்று நினைத்த ரங்கா அதற்குச் சம்மதித்தான்.

மறுநாள் காலையில் இருவரும், ஒரு மாட்டு வண்டியில் மலையடிவாரத்தை அடைந்தனர். அங்கிருந்து மலை மீது இருவரும் நடந்தபடியே ஏறிச்சென்றனர்.

மலைமீது ஏறிச் செல்ல ரங்கா மிகவும் சிரமப்பட்டான். ஆனால், பாலுவுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்டதால், எளிதாக ஏறிச் சென்றான். கிட்டதட்ட பல மணி நேரப் பயணத்திற்குப் பிறகு இருவரும் மலை உச்சியை அடைந்தனர்.

அங்கே ஒரு மரத்தடிக்குச் சென்ற பாலு, திடீரென்று யோசனை செய்தவனாய், ''ஐயோ, மறந்தே போய் விட்டேனே... இன்று அந்த மருத்துவர் அயலூருக்குச் செல்லும் நாளாயிற்றே... நாம் நாளை வந்து இவரைச் சந்தித்து மருந்து வாங்கலாம்!'' என்றான்.

ரங்காவுக்கு கடுமையான கோபம் வந்தது. அவன் பாலுவைத் திட்டித் தீர்த்தான். பிறகு இருவரும் இறங்கி வந்தனர். மலையடிவாரத்தில் நின்றிருந்த வண்டியில் வீடு வந்தனர். பாலுவும் விடைபெற்றுச் சென்றான்.

மறுநாள் ரங்காவைத் தேடி பாலு வந்தான். அவன் ரங்காவிடம், ''இன்று மருத்துவரைப் பார்க்கச் செல்லலாமா?'' என்று கேட்டான்.

ரங்காவோ, ''வேண்டாம் பாலு! நேற்று இரவு என்னை அறியாமலேயே நன்றாக தூங்கினேன். காலை கண்விழித்த போது தான் உண்மையைப் புரிந்து கொண்டேன். நீ நேற்று என்னை மலைக்கு அழைத்துச் சென்றதில் நன்றாக நடந்து களைத்துப் போயிருந்தேன். அந்தக் களைப்பில் தூங்கியும் விட்டேன். உண்மையிலேயே சொல்... மலைமீது மருத்துவர் இருக்கிறாரா?'' என்று கேட்டான்.

அதற்கு பாலு, ''அப்படி எந்த மருத்து வரும் இல்லை. தினமும் எந்த வேலையும் செய்யாமல், வீணே உட்கார்ந்து பகலில் தூங்கிக் கொண்டு இருந்தால், இரவில் எப்படி தூக்கம் வரும்? பகலில் நன்றாக உழை; இரவில் தானாக தூக்கம் வரும். இதுதான் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கான எளிய வழியும் கூட. உன்னிடம் பொய் சொல்லி, மலை மீது அழைத்துப் போனதற்காக என்னை மன்னித்து விடு!'' என்றான்.

''நான் உன்னை மன்னிக்க வேண்டிய தில்லை. நீ எனக்கு எளிய பாடத்தின் மூலம் வாழ்வின் உண்மையைப் புரிய வைத்து விட்டாய். உனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்!'' என்று மகிழ்ச்சியோடு சொன்னான் ரங்கா.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us