PUBLISHED ON : ஜூன் 01, 2018

இதுவரை: பெரிய ராஜாவின் படத்தை கழட்ட போனான் ராமு. அதுவரை பேசாமல் இருந்த ராமுவின் அப்பா வாய் திறந்து பேசினார். இனி -
''கழட்டாதே... கழட்டாதே... அது என் உயிர்; உடனே, அந்த கடிகாரத்தை மாட்டு; அதில் தான், என் ஆவி இருக்கு; கடிகாரத்தை மாட்டு... படத்தை கழட்டாதே...'' என்று சத்தமிட்டபடி வேகமாக வந்து, ராமுவை அறைந்தார், அவனது தந்தை கோவிந்தநாத சிம்மர்.
''அப்பா நீங்களா... உங்களுக்கு பேச்சு வந்திருச்சா...'' என்று ஆச்சரியத்துடன் கூவிய ராமு, ''டாக்டர்! என் அப்பாவுக்கு பேச்சு வந்திருச்சு,'' என்று ஆனந்தத்தில் குதித்தான்.
ராமுவின் தாய்க்கும், பேரானந்தம். ஆனால், 'இது கணவருடைய குரல் இல்லையே... அப்படி என்றால், யாருடையது... பெரிய ராஜா குரல் மிகவும் கம்பீரமாக இருக்கும் என்று சொல்லுவார்களே... அந்த குரலாக இருக்குமோ' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது -
''ராமு... ஏன் எல்லாரும் அதிர்ச்சியோடு இருக்கீங்க... சார் யாரு...'' என்று கேட்டார் ராமுவின் தந்தை.
முழு விவரத்தையும் கூறினான், ராமு.
டாக்டருக்கு பணிவான வணக்கத்தையும், நன்றியையும் கூறி, ஒரு தட்டில் பழங்களை வைத்து, ஒரு கட்டு பணத்தையும் வைத்தார், ராமுவின் தந்தை.
''டாக்டர்! இன்னும் ஒரு சப்போட்டா பழம் சாப்பிடறீங்களா...'' என்றான் ராமு.
''ஐயோ... ஆள விடுப்பா... எப்படியோ, உங்கப்பாவுக்கு பேச்சு வந்திருச்சு; நான் வரட்டுமா, எனக்கு நாழி ஆவுது,'' என்ற டாக்டர் ஒருவித அச்சத்துடன், அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
அப்பாவை பார்த்தான் ராமு. அவர் எதுவுமே நடக்காதது போல் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தான். மெல்ல தாயை அழைத்து, ''அம்மா, நமக்கு ரொம்ப உதவி செஞ்சது டேவிட்டும், அவர் அப்பா ஜோசப்பும் தான். இப்ப அவங்க அநேகமா மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகியிருப்பாங்க. நான் உடனே அவங்களை பார்த்து, உடல் நலம் விசாரிச்சு நன்றி சொல்லணும்,'' என்று கூறி, டேவிட் வீட்டிற்கு சென்றான்.
''ஓ... ராமுவா... வா... வா... அப்பா எப்படி இருக்காரு,'' என்றான் டேவிட்.
''டேவிட் ஒரு அதிசயம்... ஆனா உண்மை... அப்பாவுக்கு மறுபடியும் பேச்சு வந்திருச்சு. அதுக்கு ஒரு காரணம், டாக்டர் முகமது அப்பாஸ் தான்; அவரு மட்டும் பெரிய ராஜா போட்டோவையும், கடிகாரத்தையும் கழட்டி எறிங்கன்னு சொல்லாட்டி, என் அப்பாவுக்கு பேச்சு வந்திருக்காது...
''எப்படியோ உன் அப்பா சிபாரிசு பண்ணியதால் தான், அந்த டாக்டர், அதிகாலையிலே வந்து உதவி செஞ்சாரு. உங்க உடல் நிலையும் தெரிஞ்சுகிட்டு, அப்படியே, உன் அப்பாவுக்கு நன்றி சொல்ல தான் வந்தேன்...'' என்றான் ராமு.
''தம்பி... இதெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யறது தான்; நீ ஒண்ணும் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம்; திரும்பவும் உன் அப்பாவுக்கு இந்த மாதிரி வராம பார்த்துக்கோ. திரும்ப வந்துச்சுன்னா, ரொம்ப விபரீதமா போயிடும் சரியா...'' என்றார், டேவிட் அப்பா.
''சரி அங்கிள்...'' என்றான் ராமு.
டேவிட்டின் அம்மா, ராமுவிற்கு காபி கொடுத்தாள்.
காபியை வேகமாக குடித்தவன், '' எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு டேவிட்... அவற்றையும் முயற்சி செஞ்சு போக்கணும்டா...'' என்றான்
''சொல்லு முடிந்தால் செய்கிறேன்...''
''டாக்டர் அப்பாஸ், பெரிய ராஜா போட்டோவையும், கடிகாரத்தையும் கழட்ட சொன்னதும், என் அப்பா, 'கழட்டாதே... படம் என் உயிர். கடிகாரம், என் ஆவின்னு கத்திக்கிட்டு வந்தாரு...' அப்பாவுக்கு அப்பத்தான் பேச்சு வந்தது. ஆனா, அவர் குரல் எப்போதும் போல இல்லை; ரொம்ப கம்பீரமா வெங்கல குரலா இருந்துச்சு. இந்த மாதிரி பெரிய ராஜாதான் பேசுவாருன்னு அம்மா சொன்னாங்க... அப்பா உடம்புல பெரிய ராஜாதான் வந்து பேசியிருக்காருன்னு நினைக்கிறேன். இல்லாட்டி குரல் ஏன் மாறணும்...
''இரண்டாவது, அந்த சப்போட்டா பழம். அதை சாப்பிட்ட டாக்டரே மயங்கி விழுந்தாரு... கேட்டா, அதுல பூச்சி மருந்து அதிகம்னு சொன்னாரு... நானோ என் கையை இறுக்கிய ஒரு அமானுஷ்ய சக்தி பெரிய ராஜா படத்தில் ஆவியா போனதை பார்த்தேன். ஆனா டாக்டர் எல்லாமே மனப்பிரமைன்னு சொல்லி, விளக்கமும் கொடுத்தாரு...
''இப்ப எனக்கு அந்த பெரிய ராஜா அரண்மனை பற்றியும், அவர் பற்றிய, உண்மைகளும் தெரியணும். அதை அப்பா சொல்ல முடியாத நிலை. அப்படி அவர் சொல்ல வர்றப்போதான், வாய் இழுத்துடுச்சு. இனிமே அவர் கிட்ட அது பற்றி பேசவே கூடாது. ஆனா, அங்க இருக்கிற ஒரு அமானுஷ்ய சக்தியை நாம கண்டு பிடிக்கணும். அதை அந்த இடத்தில் இருந்து ஓட்டணும். இல்லாட்டி எப்பவுமே தொந்தரவுதான்...''
''கவலையை விடு. என் அப்பாவின் நண்பர் டாக்டர் முகம்மது அப்பாசின் மகன் ஆசாத் என் நண்பன் தான்... அவனுக்கும் சைத்தான் பற்றி ஓரளவு தெரியும்; அவனையும் துணைக்கு வைத்துக் கொள்வோம். இன்று மாலை நானும், அவனும் உங்க அரண்மனையை பார்க்க வர்றோம். இதுவரை, அரண்மனை என்று நீ சொல்லித்தான் தெரியும்... நான் ஒரு முறை கூட பாத்தது இல்லை... நீயும் அழைச்சுட்டு போனதில்ல...'' என்றான், டேவிட்.
''சாரிடா அதுக்கு சந்தர்ப்பம் கிடைக்காம போயிட்டுது; தவறா நினைக்காதே... இன்று மாலை வாருங்க; எங்க வீட்டிலேயே இரவு விருந்து சாப்பிடலாம்...''
''அப்படியே செய்றோம்; அதுக்கு முன், ஆசாத்துக்கு போன் செய்து, அவன் சம்மதம் கேட்கிறேன். நீ வீட்டுக்கு கிளம்பு. நானும், அப்பாவும், நல்லா இருக்கோம். கவலைப்படாதே... உன் பெற்றோரை பார்த்துக்கோ, மாலை வர்றோம்; குரூப் ஸ்டடிக்கு வர்தா மட்டும் உன் வீட்டில் கூறு. பெரிய ராஜா ஆவி பற்றி, ஒரு முடிவுக்கு வருவோம்...'' என்று கூறி, ராமுவை அனுப்பி வைத்தான், டேவிட்.
மாலை மணி, 4:00. பழைய இடத்திலேயே மாட்டப்பட்டிருந்த பெரிய கடிகாரம், வேகமாக அடித்தது.
டேவிட், ஆசாத்துடன் வந்தான். அவர்களை வரவேற்று, பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தான், ராமு.
மூவரும் சிரித்து பேசியபடியே மாலை சிற்றுண்டி சாப்பிட, டேவிட்டும், ஆசாத்தும் ராமுவின் தந்தையை உற்று நோக்கினர்.
“என்ன தம்பிங்களா, ராமுவோட படிக்கப் போறீங்களா,” என்று கேட்டார்.
“ஆமாம் அங்கிள்...” என்றான், டேவிட்.
“வெரி குட்... குரூப் ஸ்டடி நல்லது தான். ஆனால், அது படிப்பதாக இருந்தா தான் பயன் தரும். வெட்டி பேச்சோ... வேறு விதமான தர்க்கமோ... சினிமா பற்றிய சிந்தனையோ இருந்தா, வீணாகிடும். உங்க கவனம் படிப்பில் மட்டுமே இருக்கணும்; இந்த அரண்மனை பற்றி ஆராய்ச்சி, அமானுஷ்ய சக்தி பற்றி எல்லாம் பேசி நேரத்தை வீணாக்கக் கூடாது... சரியா...” என்றார்.
அவரது பேச்சில் கம்பீரம் இருந்தது.
“சரிங்கய்யா... நாங்க சின்சியரா படிப்போம்; கவலைப்பட வேண்டாம்...” என்றான், ஆசாத்.
“ம்...ம்... அதையும் பார்க்கத்தானே போறேன்,” என்றபடி அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
“'டேய் டேவிட்... இப்ப என்னடா சொல்ற நீ...” அச்சத்தில் கேட்டான் ராமு.
“ஆமா... உன் அச்சத்தில் நியாயம் இருக்கு... அவர் எப்படியோ மோப்பம் பிடிச்சிட்டார்!'' என்றான், ஆசாத்.
“என் அப்பா அப்படி பேசக்கூடியவர் அல்ல. படிக்க வந்த உங்களுக்கு அறிவுரை கூறுவது இயற்கை தான். ஆனா, அரண்மனை பற்றி அவர் ஏன் கூற வேண்டும். அப்படி என்றால் பேசியது என் அப்பா அல்ல; பெரிய ராஜாதான் எச்சரிக்கும் விதமா பேசியிருக்காரு,” என்றான் ராமு.
“அப்படியே இருக்கட்டுமே... நீதான் சொன்னியே... அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையேன்னு. பாரதியார் கண்ட வீரமிக்க மாணவர்களா மாறுவோம்; கொள்கையில் உறுதியா நிப்போம். இந்த அரண்மனை மற்றும் பெரிய ராஜாவின் மர்மத்தை கண்டு பிடிப்போம்; இது சத்தியம்; வெற்றி நிச்சயம்...” என்று கையை நீட்டினான் டேவிட்.
சத்தியம் என்று, ராமு அவன் கை மீது கை வைக்க, ஆசாத்தும் கை கோர்த்தான்.
எங்கோ இருந்து பாய்ந்து வந்த ஒரு கறுப்பு பூனை, கோர்த்திருந்த கைகளை பிராண்டி, பிரிக்க முயன்றது. ஆசாத் அதை தள்ளிவிட்டான். அது கீழே விழுந்து பெரும் சத்தம் எழுப்பியபடி ஓடியது.
“டேய் அது எங்கிருந்து வந்தது,” என்றான் டேவிட்.
“நீங்க வளர்க்கும் பூனையா...” என்று கேட்டான் ஆசாத்.
“நாங்க பூனையா, நாயோ வளர்க்கிறதில்ல. அந்த பூன எப்படி திடீரென்று வந்தது என்று புரியவில்லை,” என்றான் ராமு.
ஆச்சர்யத்துடன், பூனை பாய்ந்து சென்ற திசையை பார்த்தான் டேவிட்.
“ராமு அந்த பூனை இப்ப போன இடம் உங்க அரண்மனையில் எந்த இடம்...” என்றான், டேவிட்.
“அதுவா... அந்த வழியா போனா பெரிய ராஜா படமும், கடிகராமும் இருக்கும் இடம் வரும்,” என்றான் ராமு,
“அப்ப, ஒரு உண்மையை பாதி கண்டு பிடிச்சிட்டேன்; அது எந்த திசையில் இருந்து தாவி வந்தது என்பதை பார்த்தாயா,” என்று கேட்டான் டேவிட்.
“ராமுவின் அப்பா சென்ற திசையில் இருந்து தான் வந்தது,” என்றான் ஆசாத்,
“ஓ... நிலைமை விபரீதமாத்தான் போவுது... உங்க அப்பா உடம்புல இருந்த பெரிய ராஜா ஆவி, இப்ப நம்மை அச்சுறுத்தி விட்டு மீண்டும் அவரிடமே போய்ட்டது. ராமு, பெரிய ராஜா படத்தை, பார்க்கணும்,” என்றான் டேவிட்.
டேவிட்டையும், ஆசாத்தையும் அச்சத்துடன் அழைத்து சென்றான் ராமு.
“டேய் ராமு நீ பயப்படற மாதிரி தெரியுது... கவலை படாதே... நல்லதோ, கெட்டாதோ... நாம சேர்ந்தே அனுபவிப்போம். உனக்கு நாங்க இருக்கோம்,” என்று டேவிட் கூறும் போதே, பெரிய ராஜா படம் இருக்கும் இடத்துக்கு வந்தனர்.
“இது தான்டா பெரிய ராஜா படம்,” என்று காட்டினான் ராமு.
படத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து, ''இவரா... பெரிய ராஜா,” என்றபடி மயங்கி விழுந்தான்.
மயங்கி விழுந்தது யார்...
விடை அடுத்த இதழில்...
- தொடரும்...
- பூரணி
