தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆவிகள் இல்லையடி பாப்பா! (7)

ஆவிகள் இல்லையடி பாப்பா! (7)

ஆவிகள் இல்லையடி பாப்பா! (7)


PUBLISHED ON : ஜூன் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: இடுகாட்டில் இருந்த சப்போட்டா மரத்தின் கீழ் நின்றனர் நண்பர்கள். இனி -

சப்போட்டா மரத்தின் கீழே, மூவரும் நின்றனர்.

மரத்தை முழுவதுமாக நோட்டம் விட்டான் டேவிட்.

ஏகப்பட்ட பழங்கள் இருந்தன.

'இது மிகவும் உயர்ரக சப்போட்டா பழ மரம்!' என்பதை புரிந்து கொண்டான்.

''டேய் ராமு எனக்கு ஒரு சந்தேகம்...நந்தவனத்துல, பூச்செடிகளையும், பழம் தரும் மரங்களையும் உருவாக்கியவர் உங்க பெரிய ராஜான்னு, உன் அப்பா சொன்னாரு இல்லையா...''

''ஆமாம். அதுல என்ன சந்தேகம்... அவருக்கு தோட்டக் கலையில், ஆர்வம் அதிகம்!''

'' நந்தவனத்துல இருக்க வேண்டிய சப்போட்டா மரத்த, இந்த இடுகாட்டுல வைச்சி வளர்க்க வேண்டிய அவசியம் என்னவாம்,''

''அது யாருக்கு தெரியும்,'' என்றான் ராமு.

'' நீயே பாரு... இந்த இடுகாடு கிட்டத்தட்ட, 2 கிலோ மீட்டர் வரை பரவி கிடக்கு... மன்னர் பரம்பரையில, இறந்தவர்களை அடக்கம் செய்யவோ அல்லது தீயிட்டு எரிக்கவோ பயன்படுத்துகின்றனர்.

''இங்கு ஒரு புல், பூண்டு கூட இல்ல. அதனால தான் அந்த காளியப்பன் காட்டுப் பூ பறிக்க சென்றதாக சொன்னவன், இன்னும் திரும்பல. எனவே, அவர், இந்த இடத்துல சப்போட்டா மரம் வளர்த்திருக்கிறாருனா அதில், ஏதோ உள் நோக்கம் இருக்கு,'' என்றான் டேவிட்.

''ஆமா... டேவிட் சொல்வதுதான் சரி. நந்தவனத்தில் இருக்க வேண்டிய உயர்ரக சப்போட்டா மரம், ஏன் யாரும் வராத இடுகாட்டில் இருக்ணும்... '' தன் சந்தேகத்தை கிளப்பினான் ஆசாத்.

''டேய் இப்ப எனக்கு, ஒண்ணு புரிஞ்சு போச்சுடா,'' என்றான் ராமு.

''என்ன சொல்லு,'' அவசரப்படுத்தினான் டேவிட்.

''என் கனவுல, நான் சப்போட்டா பழத்தை எடுப்பது போல் வந்ததுக்கே அவர் ஆவி துரத்துச்சு. அடுத்து, பழம் சாப்பிட்ட ஆசாத் அப்பாவும், மயங்கி விழுந்தார். எனவே, பெரிய ராஜாவுக்கு சப்போட்டா பழம்னா உயிர்னு நினைக்கிறேன். தான் விரும்பும் எதையும், அடுத்தவர் உபயோகிப்பதை அவர் விரும்பல... என் யூகம் சரியா,'' என்றான் ராமு.

''ஓரளவுக்கு சரிதான். அதனால தான் யாரும் இங்கே வந்து சாப்பிடாதபடி வளர்த்திருக்கிறார். இன்னும் ஒரு ,'டவுட்' வருது,'' என்றான் ஆசாத்.

''என்ன கேள்!'' என்றான் ராமு.

''அவருக்கு சப்போட்டா பழம் பிடிக்கும்னு அவர் குடும்பத்துல உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும் இல்லியா... அவர் அதை வைக்கும் போதே யாரிடமாவது சொல்லியிருப்பாரு இல்லியா,'' என்றான் ஆசாத்.

''இருக்கலாம். ஆனால், இப்போ நீ குறிப்பிடும் நபர்கள் யாரும் இல்லையே... அதனால உன் சந்தேகத்தை எப்படி உறுதிப் படுத்துவதாம்,'' என்றான் ராமு.

''இல்லடா நாம லாஜிக்கை இப்படி திருப்புவோம். இறந்தவர்கள் உபயோகித்த பொருட்களை, அந்த காலத்துல அவருடன் சேர்த்து புதைப்பர். அதே போல் அவர் இறந்த பின், அவர் பார்க்கும்படி இந்த மரம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பி இருப்பார். இதுவும் வெறும் ஊகம் தான்,'' என்றான் ஆசாத்.

''அப்படி என்றால் மிக முக்கியமான ஒன்று இடிக்குதே,'' என்றான் டேவிட்.

''என்ன அது...'' கேட்டான் ராமு.

''அப்ப இந்த மரத்தை பார்க்கும் படிதானே அவரை புதைத்திருப்பர். ஆனால், இது தான் பெரிய ராஜாவை புதைத்த இடம் என்று, காளியப்பன் காட்டியது வெறும் பொட்டை திடல். அது இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கு. அப்படி என்றால் காளியப்பன் நம்மை ஏமாற்றியிருக்கிறானா...'' என்று கேள்வி எழுப்பினான் டேவிட்.

''நீ சொல்வது நல்ல லாஜிக். இதை நாம் காளியப்பனிடம் கேட்க முடியாதே... 'காலம் காலமா இது தான் அவர் புதைக்கப் பட்ட இடம் என்று நாங்கள் வழிபட்டு வருகிறோம். அதனால தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன். என்னையே சந்தேகிக்கிறீர்களா...' என்று காளியப்பன் கேட்டால், என்ன செய்வது...'' என்றான் ராமு.

''ஒரு வழி இருக்கு,'' என்றான் ஆசாத்.

''என்ன சொல்லு சொல்லு...'' இருவரும் அவசரப்படுத்தினர்.

''ராமு அந்த காளியப்பனிடம், உன் தாத்தா புதைக்கப்பட்ட இடம் எது என்று கேளேன். ஒரு வேலை அப்பாவான மூத்த ராஜா அருகில், அவர் மகன் பெரிய ராஜாவை புதைத்திருக்கலாம் இல்லியா... அப்படி உன் தாத்தா புதைத்த இடத்தை காட்டினால், நமக்கு அது உபயோகமா இருக்கும்,'' என்றான் ஆசாத்.

''ஆனால், காளியப்பன் சொல்லணுமே...'' என்று சந்தேகத்தை கிளப்பினான் ராமு.

''என் தாத்தாவையும், நாங்கள் வழிபட வேண்டும் என்று கூறி இடத்தை காட்டச் சொல்,'' என்றான் ஆசாத்.

''நல்ல யோசனை! அப்படியே கேட்கிறேன். அவனுக்கு எந்த சந்தேகமும் வராது; பதில் சொல்லுவான்,'' என்றான் ராமு.

அப்போது வெகு தொலைவில் இருந்து ஒரு குரல் கேட்டது. மூவரும் குரல் வந்த திசையை பார்த்தனர்.

கையில் சில காட்டுப்பூக்களுடன் ஓடி வந்தான் காளியப்பன்.

''அடே தம்பிங்களா அங்க என்னடா செஞ்சிகிட்டு இருக்கீங்க... பெரிய ராஜா கிட்ட ஆசி வாங்கிக்காம, ஏன் வந்தீங்க... உடனே அங்க ஓடுங்க. நான் கொடுக்கும் பூக்களை போட்டு ஆசி வாங்கிக்கோங்க,'' என்று கத்தியபடி வந்தான் காளிப்பன்.

''டேய் ராமு, நாம இங்கிருந்து அசையக்கூடாது. இந்த சப்போட்டா பழத்தை ஒருவராவது சாப்பிட்டு, அவனிடம் நம் கேள்வியை கேட்டுவிட்டுத் தான் செல்லணும்,'' என்று டேவிட் கூறியபோது, 'மொடக்' என்று ஒரு சப்போட்டா பழம் அவன் தலையில் விழுந்தது.

'அய்யோ...' என்று தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்தான் டேவிட்.

'ஏய் டேவிட்! இந்த பழத்துக்கா இப்படி தலையில கைவெச்சிருக்க' என்று இருவரும் கேட்டனர்.

''நண்பர்களே! இந்த பழம் இரும்பு குண்டு அளவு எடை இருக்குடா. என்னால எழுந்திருக்க முடியலடா... என்னை எழுப்புங்கடா,'' என்று கையை நீட்டினான்.

ஆசாத் அவனை துாக்க இருந்த போது, இன்னும் ஒரு பழம் ஆசாத் தலையில விழவும், 'அல்லா' என்று குரலிட்டு, தலையை பிடித்தபடி அமர்ந்தான். வலி தாங்காமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.

இதை கண்டு அசந்தான் ராமு.

'என்ன! இந்த பழம் அவ்ளோ எடையாவா இருக்கு... நாம இதை வைத்துதான் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். இப்போ ஆசாத்தையும், டேவிட்டையும் கை கொடுத்து துாக்கினால், நாமும் விழுந்துடுவோம். அவர்களை எழுப்புவதற்கு முன், அந்த பழங்களை எடுத்து பத்திரப் படுத்த வேண்டும்' என்று முடிவு செய்து, பழம் விழுந்து கிடந்த இடத்துக்கு ஓடினான்.

இரண்டு பழங்களுமே ஒரே இடத்தில் உருண்டு கிடந்தன. இரண்டையும் எடுத்தபடி வேகமாக நண்பர்களிடம் வந்து, டேவிட்டை துாக்க முயன்ற போது, இன்னொரு பழம் கீழே விழ இருந்த சமயம், ''தள்ளிக்கோ ராமு!'' என்று ஓங்கி குரல் கொடுத்தான் ஆசாத்.

உடனே, தள்ளி நின்றான் ராமு.

பழம் நல்லவேளையாக அவன் அருகில் விழ, கீழே இருந்த டேவிட் அதை லாவகமாக பிடித்தான்.

''டேய் இது சாதாரண சப்போட்டா மாதிரி எடை குறைவா இருக்குடா. பழங்களுக்குள்ளே அவ்வளவு வித்தியாசமா,'' என்று ஆச்சரியமாக கேட்டான் டேவிட்.

அப்போது, அருகில் வந்து விட்டான் காளியப்பன்.

அவசரமாக மூன்று பழங்களையும், ஆளுக்கு ஒன்றாக பையில் பத்திரப் படுத்தினர் மூவரும்.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us