PUBLISHED ON : ஜூன் 24, 2023

ரத்தினபுரி காட்டை சிங்க ராஜா ஆட்சி செய்து வந்தது. வன விலங்குகள் எல்லாம் சுதந்திரமாக வாழ்ந்தன. கொரோனா நோய் பரவல் ஏற்பட்டதும், 'விலங்குகள் எல்லாம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்' என உத்தரவு போட்டது சிங்க ராஜா.
உத்தரவை ஏற்று, வன விலங்குகள் முகக்கவசம் அணிந்து, இடைவெளியை பின்பற்றி, பாதுகாப்பாக வசிக்கத் துவங்கின.
ஆனால், இளம் நாய் ஒன்று, உத்தரவை அலட்சியம் செய்து, காட்டை வலம் வந்து கொண்டிருந்தது.
அதை பார்த்த முதிர்ந்த நாய், 'சிங்க ராஜா உத்தரவை ஏன் மதிக்க மாட்டேங்கிறாய்?' என கேட்டது.
'இதுபோல் ஒரு நோயே கிடையாது; சிங்க ராஜா, நமக்கு பயத்தை ஏற்படுத்தி முடக்கி போட பார்க்கிறது...' என்று அலட்சியமாக பதில் சொன்னது.
'நீ கூறுவது தவறு... மனிதர்களையே இந்த நோய் பாடாய் படுத்தி வருகிறது; குறிப்பாக, முகக்கவசம் அணியாமல், கிருமிநாசினி பயன்படுத்தாமல் இருப்பவரை அதிகம் தாக்குகிறது...' என்றது முதிர்ந்த நாய்.
'உன் வேலையப் பாரு... வயசானாவே எதையாவது சொல்ல வேண்டியது. நான் முகக்கவசம் அணிய போவதில்லை...'
'தொலைக்காட்சியில் செய்தி பார்த்தாயா... பக்கத்து காட்டில், நிறைய விலங்குகள் இறந்துள்ளன; அதை பார்த்தாவது, புத்தி வர வேண்டாமா... எக்கேடு கெட்டாவது போ...' என கூறி நகர்ந்தது முதிர்ந்த நாய்.
எச்சரிக்கையை மதிக்காமல், ஊர் சுற்ற ஆரம்பித்தது இளம் நாய். அன்றிரவு, திடீரென்று இளம் நாய்க்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாததால் காடே அதிரும் வகையில் சத்தமிட்டு, விலங்குகளை அழைத்தது.
அங்கு மற்ற விலங்குகளுடன் வந்த நாய்கள், 'உடம்புக்கு என்ன ஆச்சுன்னு தெரியல; சிக்கன் பிரியாணி வாங்கி பக்கத்தில் வைப்போம்; மோப்பம் பிடித்து எழவில்லை என்றால், கொரோனா நோய் என்பதை உறுதி செய்வோம்...' என்றன.
விலங்குகள், பிரியாணி பொட்டலத்தை பிரித்து அருகில் வைத்தன; மோப்பம் அறியாமல் அசையாமல் கிடந்தது இளம் நாய்.
உண்மை அறிந்து ஓட்டம் எடுத்தன விலங்குகள்.
வருத்தத்துடன், 'அடப்பாவிகளா... உதவிக்கு வந்தீங்கன்னு நினைத்தால், தலை தெறிக்க ஓடுறீங்களே...' என்றது இளம் நாய்.
'அன்றே உன்னை எச்சரித்தேன்... என் பேச்சை காது கொடுத்து கேட்டாயா... பாதுகாப்பாக இருந்திருந்தால், இந்நிலை வந்திருக்குமா... இப்போ கஷ்டத்தை அனுபவி...' என்றது முதிர்ந்த நாய்.
அலட்சியம் செய்ததை எண்ணி வருந்தியது இளம் நாய். பின், முகக்கவசம் அணிந்தபடி இளம் நாயுக்கு உதவியது, முதிர்ந்த நாய்.
குழந்தைகளே... பெரியோர் சொல் கேட்டு நடந்தால் துன்பமின்றி வாழலாம்!
- மகேஷ் அப்பாசுவாமி
