தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (203)

இளஸ்... மனஸ்... (203)

இளஸ்... மனஸ்... (203)


PUBLISHED ON : ஜூன் 24, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரி பிளாரன்ஸ்...

எனக்கு, 40 வயதாகிறது; இல்லத்தரசியாக இருக்கிறேன். 15 வயதில் மகனும், 10 வயதில் மகளும் இருக்கின்றனர். விளையாடிவிட்டு வந்தாலோ, பள்ளிக்கு சென்று வந்தாலோ இருவர் மீதும், கடும் வியர்வை படிந்து, துர்நாற்றம் வீசுகிறது.

தினமும், இருமுறை குளிக்கின்றனர். காலையில், துவைத்த சீருடையும், மாலையில் வீட்டு உைடயும் அணிகின்றனர். உள்ளங்கை, உள்ளங்காலிலும் வியர்த்து, பேனா பிடிக்க முடியாமல், செருப்பு அணிய முடியாமல் தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு நல்லதொரு தீர்வை கூறுங்கள் சகோதரி...

இப்படிக்கு,

ஆர்.கோதைநாயகி செல்வம்.



அன்பு சகோதரிக்கு...

பொதுவாக, உடலின் கழிவுகள், மலம், சிறுநீர், வியர்வை, சளி, காது மெழுகு, எச்சில், பீளை வழியாக வெளியேறுகின்றன. பருவமடைந்த ஆணுக்கும், பெண்ணுக்கும், தினமும், மூன்று லிட்டர் வியர்வை வெளியேறுகிறது.

ஆண்களுக்கு, பெண்களை விட, அதிகம் வியர்க்கும்; உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ள, வியர்வை உதவுகிறது. சுற்றுப்புற வெப்பம், அதிக உடல் உழைப்பு, மன பதற்றம், காரமான உணவு உண்பது போன்ற காரணங்களால், வியர்வை அதிகம் வெளியேறும்.

வியர்வையில், நீர், சோடியம், பொட்டாஷியம், கால்ஷியம், மெக்னீஷியம், ப்ரமோன்ஸ், பாக்டீரியா கிருமிகள் மற்றும் சில வகை நச்சுகள் கலந்திருக்கும். வியர்வை, மஞ்சள், பச்சை, பழுப்பு, கறுப்பு நிறங்களில் வெளியேறும். உன் குழந்தைகளுக்கு, 'ஹைபர்ஹைடிரோசிஸ்' என்ற மிகை வியர்வை சுரப்பு நோய் இருக்கிறது.

இது, மரபியல் சார்ந்தது. ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து உட்கொள்ளும் நோயாளிகள், 45 வயதான பெண்கள், கர்ப்பிணி பெண்கள், ஹைபோதைராய்டிசம் உள்ளோர், நீரிழிவு நோயாளிகள், ஊளைச்சதைகாரர்களுக்கு அதிகம் வியர்கும்.

அதிகம் வியர்ப்பதை கீழ்க்கண்ட விதங்களில் சரி செய்யலாம்...

* அதிகம் நீர் குடிக்கவும்

* பாதாம் பருப்பு, ஓட்ஸ், ஆலிவ் எண்ணெய், வாழைப்பழம், தர்பூசணி, திராட்சை, கீரை வகைகள், காலிப்ளவர், முட்டைகோஸ் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளவும்

* அக்குள்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

* குளித்து உடல் ஈரம் காய்ந்த பின், ஆடை உடுத்தவும்

* சந்தையில் விற்கும் நாற்றம் போக்கிகளை உபயோகிக்கவும்

* அதிகம் சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்கவும்

* இறுக்கமில்லாத உடைகளை அணியவும்

* காபி, தேநீர் அதிகம் குடிக்க வேண்டாம்.

உன் குழந்தைகளை தோல்நோய் சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச் செல்.

குளிப்பதற்கு, ஸ்வெட்கோ, ஆஸ்டிரிஜென்ட் சோப்புகளை மருத்துவர் சிபாரிசு செய்வார்.

குழந்தைகளுக்கு, 'போடெக்ஸ் இன்ஜெக் ஷன்' செலுத்துவார். ஊளைச்சதை குறைக்க உணவு கட்டுப்பாடு அட்டவணை தருவார்.

தேவைப்பட்டால், ரத்த பரிசோதனை செய்து, சர்க்கரை அளவையும், தைராய்டு சுரப்பு குறைவையும் பரிசோதிப்பார். தோல் நோய் சிறப்பு மருத்துவர் மூலம், உன் குழந்தைகளின் அதீத வியர்வை சுரப்பையும், வியர்வை துர்நாற்றத்தையும் முழுமையாக போக்கலாம்; உன் குழந்தைகளை, யோகா கற்றுக் கொள்ள அனுப்பு!

- அள்ள அள்ளக் குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us