
தடித்த சொரசொரப்பான செதில்களுடன் உள்ள விலங்கினம் ஓணான். சுருக்கம் நிறைந்த தோலுடன் கூம்பு போன்ற வாய் உடையது. நீண்ட வாலுடன் காணப்படும். பல்லி இனத்தைச் சேர்ந்தது. உலகம் முழுதும் இதில் பல இனங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்...
நீல ஓணான்!
தனித்தன்மை வாய்ந்தது, அரிய வகை நீல நிற ஓணான். தென் அமெரிக்கா, கிராண்ட் கேமன் தீவுகளை பூர்வீகமாக உடையது. அழிந்து வரும் இனமாக இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இனப்பெருக்க காலத்தில் மட்டுமே துணையை தேடும். தோலில் மஞ்சள் நிறமி கிடையாது. எனவே, சாம்பல், கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் மட்டுமே உருமாற்றம் அடையும்.
பொதுவாக, 30 அங்குலம் அளவு வரை வளரும். எடை, 14 கிலோ வரை இருக்கும். இதில் சிறியவற்றை செல்ல பிராணியாக வளர்க்கின்றனர். ஒன்று, 78 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. நன்றாக பராமரித்தால், 60 ஆண்டுகள் வரை வாழும். காடுகளில், இதன் ஆயுள், 40 ஆண்டுகள். மரப் பொந்து மற்றும் பாறை இடுக்குகளில் துாங்கும்.
பச்சை ஓணான்!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி காடுகளில் காணப்படுகிறது. மிகவும் அரியது; இதன் உடலை விட, வால் நீளமானது. பச்சை நிறத்தில் இருக்கும். அவ்வப்போது அடர் பச்சை நிறத்துக்கு மாறும். கரிய திட்டுக்களும், மஞ்சள் நிறமும், பச்சை கலந்த இளநீலமும் உடலில் தோன்றி மறையும். எதிரியிடம் இருந்து காக்க உரு மறைப்பாக இப்படி நிறத்தை மாற்றுகிறது.
இது பச்சோந்தி குடும்பத்தை சேர்ந்தது அல்ல.இனப் பெருக்க காலத்தில், ஆணின் தலை, ஆரஞ்சு நிறமாக மாறும். பச்சோந்தி போல புறச்சூழலுக்கு ஏற்றாற் போல் உடல் நிறத்தை மாற்றவல்லது. மரத்தில் வாழும்; முட்டை இடுவதற்காக தரைப்பகுதிக்கு வந்து, சிறு குழி அமைக்கும். முட்டையிட்ட பின், மண் கொண்டு மூடி விடும்.
பூச்சிகள் தான் இதன் பிரதான உணவு. சூழலியலில் பூச்சி இனங்களை கட்டுக்குள் வைக்கிறது. ஊனுண்ணிகளான பாம்பு, பருந்து, ஆந்தை போன்றவற்றின் உணவாகிறது. உணவு சங்கிலியில், உயிரின சுழற்சியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
பறக்கும் ஓணான்!
ஆசிய நாடான இந்தோனேஷியாவில் காணப்படுகிறது டிராகோ என்ற ஓணான். இது பறக்கும் திறன் உடையது. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு பறந்தே தாவும். அமர்ந்திருக்கும் போது சாதாரணமாக தெரியும். பறக்க ஆயத்தமானதும், முதுகுப் பகுதியில் சிறகு போன்ற அமைப்பை விரிக்கும்.
பின், பறவை போல் அடுத்த மரத்துக்கு தாவும். வியப்பு தரும் இந்த ஓணானும், சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- விஜயன் செல்வராஜ்