
அடர்ந்த காட்டில், காகங்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அருகே, பெரிதும், சிறிதுமாக தடாகங்கள் இருந்தன.
அவற்றில், தாமரை, அல்லி தாவரங்கள் செழித்திருந்தன. அங்கு நதி ஒன்று பாய்ந்து, தடாகங்களை செழிப்புடன் வைத்திருந்தது.
கோடையில், ஆற்றில் நீர் வற்றியது.
ஆற்றில் வசித்த மீன்கள் நீந்தி, சிறிய தடாகத்துக்கு பிழைக்க வந்தன.
கடும் வெப்பத்தால், அந்த தடாகமும் வற்றும் நிலை ஏற்பட்டது.
அதில், தாமரை இலைகளை பறிக்க பணியாளருடன் வந்தார் வியாபாரி.
இலைகளை பறித்த பணியாளர்கள், 'மீன்களை எல்லாம் பிடிக்கட்டுமா...' என்றனர்.
'முதலில் இலைகளை வேண்டிய அளவு பறியுங்கள்... நேரம் இருப்பின், மீன்களை பிடிக்கலாம்...'
கட்டளை போட்டார் வியாபாரி.
பொழுது மங்கியது.
மீன்களை பிடிக்க நேரமில்லை. வீடு திரும்பினர் பணியாளர்கள்.
மறுநாள் -
வறட்சியால், உணவு கிடைக்காமல் தவித்த காக்கை, அந்த தடாகத்திற்கு வந்தது. நீந்தி திரிந்த மீன்களிடம், 'நண்டு, நத்தை கிடைக்குமா...' என விசாரித்தது.
'பிழைக்க வழியின்றி அல்லலில் சிக்கி தவிக்கிறோம். மழை பொழியாவிட்டால், சில நாளில் தடாகம் வற்றி போகும்! உனக்கு தேவையான, நண்டு, நத்தை கிடைக்கும். அதற்கு முன், எங்களை பிடிக்க சிலர் திட்டமிட்டுள்ளனர்... நட்பு முறையில் உதவி செய்ய முடியுமா...' என்று துன்பத்தை பகிர்ந்தன மீன்கள்.
ஆறுதல் கூறியபடி பறந்து சென்று, தலைமை காகத்திடம் தகவல் தெரிவித்தது.
தலைமை காகம் தீவிரமாக யோசனை செய்தது. பின், உடனிருந்த காகங்களை அழைத்தபடி தடாகத்துக்கு வந்தது.
அதற்குள், இலை பறிக்க வந்த பணியாளர்கள் மீன்களை பிடித்திருந்தனர். தடாகத்தில் பிடித்தவற்றை நீர் நிறைந்த சிறிய தொட்டியில் போட்டு வைத்திருந்தனர். இதைக் கண்ட காக்கைகள் திட்டமிட்டபடி, அலகால் மீன்களை கொத்தி துாக்கி சென்றன. பக்கத்து தடாகத்தில் விட்டன. நன்றி கூறியபடி மகிழ்ச்சியுடன் நீந்தி, ஆழமான பகுதியில் பதுங்கின மீன்கள்.
பட்டூஸ்... கஷ்டப்படுவோருக்கு, கண்டிப்பாக உதவ வேண்டும்!