PUBLISHED ON : ஜூலை 27, 2018

தங்கபுரி என்ற நாட்டை, செந்தமிழன் என்ற அரசர் ஆண்டு வந்தார்.
ஒரு நாள்-
அழகிய தோட்டத்தின் வழியாக, அமைச்சருடன், நகர்வலம் சென்றார் அரசர். அந்த தோட்டத்தில், மாதுளம் பழங்கள் ஏராளமாக பழுத்து தொங்கின; அவற்றை புசிக்க விரும்பிய அரசர், ''மாதுளம் பழங்களை விலைக்கு தருகிறாயா...'' என்று தோட்டக்காரனிடம் கேட்டார். அரசர் மாறுவேடத்தில் இருந்ததால், தோட்டக் காரனுக்கு அடையாளம் தெரியவில்லை.
''ஐயா... இந்த மாதுளம் பழங்களை, அரசர் புசித்து மகிழ வேண்டும் என்பதற்காகவே பராமரிக்கிறேன்; நிச்சியமாக விலைக்கு தரமாட்டேன்...'' என்றான், தோட்டக்காரன்.
''சரி... நீ கொடுக்கும் மாதுளம் பழங்களை, அரசர் ஏற்க மறுத்தால் என்ன செய்வாய்...''
''இந்த மாதுளம் பழத்தின் ருசியறியாமல் பேசுகிறீர்கள்; நிச்சயம் அரசர் ஏற்றுக் கொள்வார்; அப்படி ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவரைப் போன்ற முட்டாள், இந்த உலகிலேயே இல்லை என்று எண்ணலாம்; அவர் நரகத்திற்குத்தான் போவார்...'' என்று ஆத்திரத்துடன் கூறினான்.
தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், அமைச்சருடன் கிளம்பி சென்றார் அரசர்.
சிலநாட்களில், கூடை கூடையாக மாதுளம் பழங்களோடு, அரசரை பார்க்க அரண்மனைக்கு சென்றான், தோட்டக்காரன்.
அரியணையில் அமர்ந்திருந்த அரசரை பார்த்ததும், 'அன்று தோட்டத்திற்கு மாறுவேடத்தில் வந்து, மாதுளம் பழம் கேட்டது மன்னர் தான்...' என்று புரிந்து கொண்டான் தோட்டக்காரன்.
''தோட்டக்காரரே... ஏன் அப்படியே நின்று விட்டீர்...''
''அரசே... இந்த மாதுளங்கனிகள் மிகவும் ருசியானவை; உங்களுக்காகவே, பராமரித்து வந்தேன்; பெற்றுக் கொள்ளுங்கள்...''
''இந்தப் பழங்களை வேண்டாம் என்று மறுத்தால் நீ என்ன செய்வாய்...''
இதைக் கேட்ட தோட்டக்காரன் எந்த பயமும் இல்லாமல், ''அரசே... நான் அன்று சொன்ன பதிலையேதான் இன்றும் சொல்கிறேன்...'' என்றான்.
அவனது துணிச்சல் அரசரை கவர்ந்துவிட்டது. அவர் மகிழ்ந்து, பாராட்டி மாதுளம் பழங்களை பெற்றுக் கொண்டார். தோட்டக் காரனுக்கு ஏராளமான பரிசுகளை கொடுத்து அனுப்பினார்.
குட்டீஸ்... துணிவு எப்போதும் துணையாக நிற்கும். நல்ல காரியங்களை துணிந்து செய்ய வேண்டும்.
