
இந்தோனேஷியாவின் பாலிபகுதியில், 'ஊபட்' நகரம் உள்ளது. உண்மையில் இது 14 கிராமங்களைக் கொண்டது.
நதிகள், மரங்கள், செடி, கொடிகள் மூலிகைகள்... கோவில்கள் என அனைத்தும் இணைந்து இயற்கை கொஞ்சும் பூமி...
'ஊபட்' என்றால் 'மருந்து' என ஜாவானிஷ் மொழியில் அர்த்தம். அதற்கு ஏற்ப இங்கு இயற்கை மருத்துவம் பிரபலம்.
உண்மையில் மழைக்காடு பிரதேசம்... குரங்குகள் தொல்லை அதிகம்! அடுக்குத் தொடர் பூமியில் இங்கு நெல் பயிரிடப்பட்டுள்ளது கண்கொள்ளாக் காட்சி.
ஜாவாவை சேர்ந்த 'ரிஷி மார்க்கண்டேயர்' இந்த பகுதிக்கு வந்து இரு நதிகள் கூடும் இடத்தில் தவம் செய்ததுடன் இந்து கோவில்களையும் கட்டினார். இங்குள்ள யானை குகை காணப்பட வேண்டிய ஒன்று. இது தவிர தண்ணீர் சூழ்ந்த அரண்மனை ஒன்று உள்ளது. இது பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று.
இந்த கிராம மக்கள் கைவினைப் பொருட்களைச் செய்வதில் திறமைசாலிகள். இவர்கள் அமைத்துள்ள கேலரிகள் காணப்பட வேண்டியவை.
பாலி மக்களிடம் இயல், இசை, நாடகம் மிகவும் பிரபலம். 'திரவுபதி பர்வார்' என்ற நாட்டிய நாடகம் வாரத்திற்கு 3...4 தடவை பார்வையாளர்களுக்காக நடத்தப்படுகிறது. கம்போடியா போன்றே இந்து கோவில்கள் இங்கும் புத்த மடங்களாகவும், கோவில்களாகவும், காலத்தால் மாற்றப்பட்டுள்ளன. இயற்கை மருத்துவ சாலைகள் உள்ளன. இவற்றில் சிகிச்சை பெற்றுச்செல்ல ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் கடும் மழைக் காலம். அப்போது வருவதை தவிர்த்து, மற்ற மாதங்களில் வரலாம்.
பாலியிலிருந்து டாக்ஸியில் வந்து உள்ளூரில், சுற்றுலா பஸ்... வேன் மூலம் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம்.
பாலியிலிருந்து சுமார் 69 கி.மீ., 2 மணி 15 நிமிடங்களில் ஊபட்டை அடைந்து விடலாம்.
'திரவுபதிபர்வார்!' நாட்டிய நிகழ்ச்சியின் நீதி என்ன தெரியுமா?
பெண்களை துன்புறுத்தினால் அந்த நாடு பலவித இன்னல்களுக்கு உட்படும். உதாரணமாக புயல்; வெள்ளம் போன்ற அழிவுகள் ஏற்படும்! ஆகவே, பெண்களை காத்து, நாட்டையும் காப்போம்!' என்பது இதன் நீதியாகும்.
- பட்டு.