PUBLISHED ON : ஏப் 15, 2016

உணவுக்கு மணம் மற்றும் சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், ஜீரணத்திற்கும் சிறந்த மருந்துப் பொருள் பெருங்காயம்; இது ஒரு தாவரப்பொருள். இந்த தாவரங்கள் ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே வளர்கிறது. 'பெரூவா' எனும் செடியில் இருந்து வெளிவரும் திரவமே பெருங்காயம் ஆகும்.
புதர்மேல் மண்டிக் கிடக்கும் இந்த செடியின் வேர் தெரியும் படியாக மண்ணை முதலில் அப்புறப்படுத்துவர். பின்னர், வேரை கத்தியினால் கீறி விடுவர். கீறிய இடத்தில் பசை போன்ற திரவம் வெளிப்பட்டு அங்கேயே கெட்டியாக உலர்ந்து போகும். ஒரு செடியில் இவ்வாறு சேர்ந்தாற்போல் மூன்று முறை பெருங்காயத்தை எடுக்கலாம்.
ஒரு செடியில் இருந்து மூன்று மாதத்திற்கு மூன்று பவுண்ட் எடையுள்ள பெருங்காயம் கிடைக்கும். செடியில் கிடைக்கும் பெருங்காயம் உயர்ந்த தரம் உடையது. அதிகமான வாசனை உள்ளது. உடலில் பட்டால் எரிச்சல் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அசல் பெருங்காயத்தை அப்படியே பயன்படுத்த முடியாது. அவ்வளவு காட்டமா இருக்கும்.
அதனாலேயே அசல் பெருங்காயத்துடன் ஒரு சில கலவைகளை கலந்து கடையில் விற்பனை செய்கின்றனர். கோந்து மற்றும் மாவு ஆகியவற்றை கலந்து கடையில் விற்கப்படுவது, 'மிஸ்கி பெருங்காயம்' எனப்படுகிறது.
இப்படி கோந்து அதிகம் உள்ள பெருங்காயம் பார்ப்பதற்கு கறுப்பு நிறத்தில் இருக்கும். இதனை, 'கறுப்பு பெருங்காயம்' என்றும் கூறுவர்.
பெருங்காயப்பால் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் 'பால் பெருங்காயம்' எண்ணையில் பொரிக்க முடியாது. அது நீரில்தான் பொரியும். கோந்தையும், மாவையும் வைத்து தயாரிக்கப்படும் கறுப்பு பெருங்காயம் எண்ணையில் கரைவதற்காக ஒரு வகைப் பொருளை கந்தக சத்துடன் சேர்த்து கலவையாக தயாரிக்கின்றனர். இந்த கலவையே பெருங்காயத்திற்கு வாசனையை கொடுக்கிறது.
ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!