PUBLISHED ON : மே 23, 2020

வாழப்பாடி கிராமத்தில், துணி வியாபாரி துரைசாமி வசித்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்தார்.
'முன்னேற வாய்ப்பு இனி இல்லை' என எண்ணியபடி, மலை உச்சிக்கு புறப்பட்டார். அங்கிருந்து குதிக்க முடிவு செய்தார்.
சோகமாக நடந்து கொண்டிருந்தார். வழியில், ஒரு குப்பைத் தொட்டியை கண்டார். அதில் கிடந்த பழைய தாள்களை சேகரித்துக் கொண்டிருந்தார் ஒருவர். தேவையானதை பிரித்து எடுத்து சென்றார்.
சிறுது நேரத்தில் மற்றொருவர் அங்கு வந்தார். குப்பையில் கிடந்த பழைய குப்பி, நெகிழி தட்டுகளை பிரித்து, சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து சென்றார்.
அடுத்து வந்த நாய், எச்சில் இலைகளில் ஒட்டியிருந்த உணவை சாப்பிட்டது. கடைசியாக, ஒரு பசு வந்தது; குப்பையில் மீந்திருந்த எச்சில் இலைகளை தின்று பசியாறியது.
இதைப் பார்த்த வியாபாரிக்கு, நம்பிக்கை ஒளி தென்பட்டது.
'சிறிய குப்பைத் தொட்டி, இத்தனை பேருக்கு வாழ்வு தருகிறது என்றால், பரந்து விரிந்த உலகில், எத்தனை வாய்ப்புக்கள் இருக்கக் கூடும்; இவற்றை யோசிக்காது, சாக துணிந்த நானே முட்டாள்' என்று எண்ணி வெட்கினார்.
மனதில் குடியிருந்த துக்கம் மறைந்தது. அடுத்த பணியை தேடி நம்பிக்கையுடன் புறப்பட்டார்.
தளிர்களே... உலகில், எல்லா உயிர்களும் வாழ வாய்ப்புக்கள் உள்ளன; அந்த வாய்ப்புகளை தேடி அறிவது தான் உழைப்பு. வெற்றி நம் அருகே தான் உள்ளது!
