
மதுரை மாவட்டம், ஓ.சி.பி.எம்.பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 2011ல், 11ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
எனக்கு ஆங்கில வகுப்பு மிகவும் பிடிக்கும்; காரணம், அந்த வகுப்பை நடத்தும் ஆசிரியை, மில்டன் தான். அவர் விளக்கும் பாடங்கள் மனதில் ஆழமாக பதியும்.
ஒருமுறை, கிறிஸ்துவ வேதாகமத்தில் உள்ள, 'என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கிறேன்...' என்ற வாசகத்தை விளக்கினார். ஆங்கிலத்தில், 'ஐ காவ் என்கிரேவ்டு யு இன் மை பால்ம்...' என உள்ளதாக குறிப்பிட்டார்.
ஆங்கிலத்தில், 'என்கிரேவ்டு' என்ற சொல்லுக்கு, 'செதுக்குதல்' என்று பொருள். அதைக் குறிப்பிட்டு, 'வரைந்ததை அழிக்க கூடும்; செதுக்கியதை அழிக்க முடியுமா...' என கேள்வி எழுப்பி சிந்திக்க வைத்தார். அந்த விளக்கம் நம்பிக்கையும், புத்துணர்வும் தந்தது.
தற்போது, என் வயது, 24; வாழ்வில் சோர்வு ஏற்படும் போதெல்லாம், மனதை தேற்றி புத்துணர்ச்சி தருகிறது அந்த ஆசிரியை தந்த விளக்கம்.
- ரா.பிரியதர்ஷினி, மதுரை.

