PUBLISHED ON : செப் 16, 2023

செப்., 18 விநாயகர் சதுர்த்தி
விநாயகரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுவது, பிள்ளையார் சதுர்த்தி. ஆவணி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் பிறந்தார். இவரை வழிபடுவோர் காணாபத்யர் எனப்படுவர். தமிழகத்தில் தொன்று தொட்டே விநாயகர் வழிபாடு உள்ளது. இதை பழமையான நான்கு விநாயகர் சிலைகளைக் கொண்டு அறிய முடிகிறது.
அந்த கோவில்கள்...
* சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
* திருவாரூர் மாவட்டத்தில், வாதாபி கணபதி மற்றும் செங்காட்டங்குடி வாதாபி கணபதி
* நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலுார் கணபதி.
இந்த கோவில்கள் மிகப் பழமையானவை.
பிள்ளையார்பட்டி சிறிய ஊர் தான். என்றாலும், இங்குள்ள மருதீஸ்வரர் கோவிலால் இது புகழ் பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் தான், கற்பக விநாயகர் காட்சி தருகிறார். கோவில் அமைப்பே இதன் பழமையை பறைசாற்றும்.
இது ஒரு குகைக் கோவில். மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளதால் குடைவரைக் கோவில் என்றும் சொல்வர். இதை உருவாக்கியது பாண்டிய மன்னர் என்றும், நரசிம்ம பல்லவர் என்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து உள்ளது.
பிள்ளையாரை ஐங்கரன் என்பர். அதாவது, நான்கு கைகளும், தும்பிக்கையும் சேர்த்து ஐந்து கைகளை உடையவர் எனப் பொருள். இந்த வடிவத்தை, அரித்திரா கணபதி என்றும் அழைப்பர். இதுபோன்ற வடிவங்களை தமிழகத்தில் அதிகம் காண முடியும்.
உண்மையில் பிள்ளையாருக்கு, 32 வகை அமைப்புகள் உண்டு. பழங்காலத்தில் இரண்டு கைகளை உடையவராக பிள்ளையார் சிலையை செதுக்கினர். இது போன்ற வடிவமே, பிள்ளையார்பட்டியில் இருக்கிறது.
துதிக்கை வலப்புறமாக வளைந்து, தொப்புளைச் சுற்றி இருக்கும். இவ்வகை அமைப்பை வலம்புரி விநாயகர் என்றும் அழைப்பர். பல கோவில்களில், பிள்ளையாரின் துதிக்கை, இடப்புறமாக வளைந்து இருக்கும். வலம்புரி விநாயகர்கள் மிகவும் குறைவு. இந்த அரிய அமைப்பை உடையவர் பிள்ளையார்பட்டி நாயகன்.
காலை மடித்து, சிறிய தந்தத்துடன் காட்சியளிப்பார். கைகளில், அங்குசம் என்ற யானையை அடக்கும் கருவி, பாசம் என்ற கயிறு ஆகியவை இருக்கும். விநாயகர் சதுர்த்தியன்று, இங்கு முக்குறுணி அரிசியில் செய்த கொழுக்கட்டை படைப்பர். ஒரு குறுணி என்பது இன்றைய அளவில், 12 கிலோ. முக்குறுணி என்பது, 36 கிலோ அரிசியை குறிக்கும். அதை அரைத்து எடுக்கும் மாவு, வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து இந்த கொழுக்கட்டை உணவு தயாரிக்கப்படும்.
முருகனின் புகழ் பெற்ற தலமான குன்றக்குடி மற்றும் காரைக்குடி நகர் அருகில் பிள்ளையார்பட்டி உள்ளது. அங்குள்ள கற்பக விநாயகரை தரிசித்தால், நல்லறிவை பெறலாம்.
- தி.செல்லப்பா
